Search This Blog

Wednesday, 1 December 2010

‘முரசொலி’க்கு ஆதரவாகப் புதுவையில் தினமணி ஆசிரியர் எடுத்துக்காட்டிய ராஜாஜியின் பதில்!

ஞாயிறன்று (28.11.2010) புதுச்சேரியில் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் எழுதிய தலையங்கங்களின் தொகுப்பு நூல்களின் அறிமுக விழா நடைபெற்றது. விழாவில் பேசிய தினமணி ஆசிரியர் - ""தினமணி தலையங்கங்கள் விவாதப்பொரு ளாக வேண்டும்"" என்கிற தனது ஆசையை வெளியிட்டுள்ளார்.
அவரது பேச்சின் ஒரு முக்கியப்பகுதி வருமாறு:-
"தினமணி தலையங்கங்களைப்பொறுத்த வரை, எனக்குத் தெரிந்த உண்மை விஷயங் களை அதில் பதிவு செய்கிறேன். என் மனதுக்கு எது சரி, உண்மை என்று படுகிறதோ அதைச் சீர் தூக்கிப்பார்த்து மக்களின் குரலாக தலையங்கம் வெளிவருகிறது. எனது கருத்துகளுக்கு மாற்றுக் கருத்தும் இருக்க முடியும். எந்த ஒரு விஷயத்துக்கும் விவாதம் தேவை. விவாதம் சமுதாய வளர்ச்சிக்கு அடிப்படையானது. தினமணி தலையங்கங்கள் மக்களிடம் பேசப்படும் விவாதப் பொருளாக மாறவேண்டும் என்பது தான் எனது விருப்பம். விவாதம் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டும் என்பது தான் அதன் நோக்கம். ஊடகங்கள் பற்றி நான் விமர்சனம் செய்து எழுதும்போது, கண்ணாடி மாளிகையில் இருந்து கொண்டு கல்லெறியக்கூடாது என்று எனது சகபத்திரிகையாளர்கள் சிலர் கண்டனம் தெரிவிக்கிறார்கள். மக்கள் இன்னமும் பத்திரிகைகளின்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கை சிதைந்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் எழுதப்பட்டவைதான் ஊடகங்கள் பற்றிய விமர்சனமும். அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதால் அதைத்திருத்த முடியுமா என்று ராஜாஜியிடம் அவரது பேரன் ராஜ்மோகன் காந்தி ஒருமுறை கேட்டார்.  ""அரசைத் திருத்துவதற்காக மட்டுமல்ல, தவறைச் சுட்டிக்காட்டாமல் விட்டுவிட்டால்; அதற்குத் தீர்வை முன்வைக்காமல் போனால், வரும் தலைமுறையினர், இந்த தவறை சுட்டிக்காட்ட கடந்த தலைமுறையில் ஒருவர் கூடவா இருக்கவில்லை என்று நம்மை ஏளனம் செய்துவிடுவார்கள். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதற்காகத்தான் ‘ஸ்வராஜ்யா’ இதழில் ""அன்புள்ள வாசகருக்கு"" பகுதியை எழுதுவதாக மூதறிஞர் ராஜாஜி சொன்னாராம். நான் ராஜாஜியாக இல்லாவிட்டாலும் எனது கருத்துகளைப்பதிவு செய்யவேண்டும் என் பதற்காக எழுதுகிறேன்"". - என்று உதாரணம்அல்லது மேற்கோள் காட்டி இருக்கிறார் அவர்.
                                                                                  ***
 ராஜாஜியின் பதில் குறித்து தினமணி ஆசிரியர் நினைவுபடுத்தியிருப்பது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, ‘முரசொலி’க்கு நூற்றுக்கு நூறு - முழுமை யாகப் பொருந்துவதாக இருக்கிறது. எப்போதும் தி.மு.க.வையும், முதல்வர் கலைஞரையும் இழித்தும் பழித்தும் எழுதும் பார்ப் பனர் ஏடுகள், எப்போதாவது சில சமயங்களில் - கலைஞரை - கலைஞர் அரசின் சாதனைகளை தங் களையும் அறியாமலே பாராட்டி எழுதி விடுவதும் அபூர்வமாக நிகழும். அப்போதெல்லாம், முரசொலி - அந்தப் பாராட்டுகளை மறுபிரசுரம் செய்து - தினமணி பாராட்டு - தினமணி படப்பிடிப்பு என்றெல்லாம் தலைப்பிடுவது உண்டு.

அதை சுட்டிக்காட்டி - பார்ப்பன ஏடுகளில் ""தி.மு.க.வைப்புகழ்ந்து எழுதினால் பாராட்டு, புகழாரம் என்று கூறிப்பெருமைப் படுவார்கள். ஆனால் கண்டித்து எழுதி விட்டாலோ, ‘பார்ப்பான் - பாப்பாரப்புத்தி’ என்றெல்லாம் சாதியை இழுத்து வசைபாடுவார்கள். இது தான் அவர்களது வழக்கம்"" என்று தி.மு.க.வைக்கேலிசெய்து எழுதுவார்கள். வாசகர்களிலும் சிலபேர், ""தினமணி என்ன எழுதினால் உங்களுக்கு என்ன? எழுதினால் எழுதிவிட்டுப் போகட்டுமே; இப்படிப்பட்ட அவதூறுப் பேர்வழிகளுக்கு எல்லாம் தலைவர் கலைஞரே - தனது ஏராளமான பணிகளுக்கிடையே நேரத்தை ஒதுக்கி - புள்ளி விவரம் காட்டி பதில் எழுதவேண்டுமா? இப்படி கலைஞர் அக்கறை எடுத்துக்கொண்டு - அவர்களை மதித்து பதில் எழுதுவதால்தான் - அவர்களுக்கு ‘கலைஞரே நமக்கு பதிலளிக் கிறார்’ என்ற கித்தாப்பு மிகுந்து - மேலும் மேலும் கலைஞரைத் தாக்கி எழுதுவதிலேயே குறியாய் இருக்கிறார்கள்"" - என்ற வருத்தத்தோடு முரசொலிக்கு தொலைபேசி மூலமோ அல்லது நேரில் சந்திக்கும் போதோ கேட்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் வருத்தத்துக்கு பதிலளிப்பது போலவே - புதுவையில் ராஜாஜியின் பதிலை உதாரணம் காட்டிப் பேசிய தினமணி ஆசிரியரின் பேச்சு அமைந்திருக்கிறது. தினமணி,தினமலர்,ஆனந்தவிகடன், ஜூனியர் விகடன்,குமுதம் ரிப்போர்ட்டர்,துக்ளக் போன்ற பார்ப்பன ஏடுகள் நாள் தவறாமல், இதழ் தோறும் கலைஞர்மீதும் - கலைஞர் அரசுமீதும், கலைஞர் குடும்பத்தினர் மீதும் தங்களது கற்பனைக்கேற்றவாறு இல்லாததை யும் பொல்லாததையும் இட்டுக்கட்டி - சேறுவாறி இறைத்து வருகின்றன!

 இந்த ஏட்டாளர்களின் இஷ்டதெய்வமான ஜெயலலிதாவோ, நாள் தவறினாலும் எனது பொய் தவறாது என்ற ரீதியில் - கலைஞர்மீது புழுதிவாரித் தூற்றிக் கொண்டே இருக்க, அவரது அறிக்கைகளில் காணப்படுவ தெல்லாம் அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு என்று தெரிந்திருந்தும் - அந்தப் பித்தலாட்ட அறிக்கைகளை, அவர் தங்கள் சுயசாதியைச் சேர்ந்த பார்ப்பனத்தி அவரே - மீண்டும் முதல்வராக வேண்டும் அவர்மூலம் ஆரியமாயையும் - மனுதர்ம (அ) நீதியின் படிக்கான பார்ப்பன ஆதிக்கமும் மீண்டும் நிலை நாட்டப்பட வேண்டும் - என்கிற நெஞ்சுகொள்ளாத ஆசையுடன் - பெரிது பெரிதாகப் பிரசுரித்து வருகின்றன! இன்றைய பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் பெரும்பாலும் பார்ப்பன மயமாகவே காட்சியளிக்கின்றன. ஆகவே அவை மனம் போன போக்கில் கலைஞரைப்பற்றிய செய்தி களை திரித்தும், மறைத்தும் - வெளியிடுவதாகவே செயல்பட்டு வருகின்றன.

பார்ப்பன ஏடுகளில் தி.மு.க.வுக்கும் கலைஞருக்கும் எதிராக இவ்வாறு வெளியிடப்படும் பொய்களை எல்லாம் - பொய் சொல்கிறவர் பெரியவரா சிறியவரா என்ற பேதம் பாராது, அந்தப்பொய்களின் முதுகெலும்பை முறித்திடும் வகையில் தகுந்த புள்ளிவிவரங்களின் ஆதாரத்தோடு - மெத்தச் சிரமம் எடுத்துக்கொண்டு முதல்வர் கலைஞர் ஆணித்தரமான பதில்களை - மறுக்க முடியாத விளக்கங்களை நாள்தோறும் சளைக்காமல் எழுதிக் கொண்டே இருக்கிறார். அவர் இப்படி மறுப்பும் விளக்கமும் எழுதா விட்டால் - எதிர்காலத்தில் ஒரு ஐம்பது அல்லது அறுபதாண்டுகளுக்கு பிறகு தமிழக அரசியல் பற்றி ஒரு ஆய்வு நூல் எழுத யாராவது முற்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஆய்வாளருக்கு தினமணி போன்ற பார்ப்பன ஏடுகள் கிடைக்கும் அல்லது தரப்படும். இந்த ஏடுகளில் கலைஞரைப் பற்றியும் தி.மு.க. பற்றியும் வந்துள்ள செய்திகள். உண்மையா பொய்யா இவைகளுக்கெல்லாம் தி.மு.க.வும் கலைஞரும் பதிலளித்தது உண்டா என்று தெரிந்துகொள்ள ‘முரசொலி’யைத் தேடிப் படிப்பார். அப்போது அவர் முரசொலியில் - கலைஞர் கடிதம், கலைஞர் பதில்கள், கலைஞரது பேருரைகள் மூலம் பார்ப்பன ஏடுகளின் பொய்களையும், அவற்றின் தி.மு.க. துவேஷம் சாதிவெறி ஆகியவை களையும் ஐயம் திரிபறத்தெரிந்து தெளிவடைவார். இல்லாவிடில் எதிர் காலத்தில் எழுதப்படும் ஆய்வு நூல்கள் பார்ப்பன ஏடுகளில் வெளிவந்த விஷமச் செய்திகளின் அடிப் படையிலேயே எழுதப் படும் அபத்தக் களஞ்சியங்கள் ஆகிவிடும். - என்பதற்காகவே கலைஞர் - தகுதி யற்றவர்களின் பொய்களைக்கூட தவறாமல் மறுத்து எழுதுவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
- இதைத்தான் தமது பேரன் ராஜ்மோகன் காந்தியின் கேள்விக்கு ராஜாஜி அளித்த பதில் என்று புதுவையில் தினமணி ஆசிரியர் நினைவு கூர்ந்திருக்கிறார். ராஜாஜியின் பதில், தினமணி தலையங்கங்கள் விவாதப் பொருளாக வேண்டும். - எனும் தினமணி ஆசிரியரின் கருத்தின் அடிப்படையிலேயே ‘முரசொலி’யும் தினமணியின் விஷமப் பிரச்சுரத்துக்கு  உடனுக்குடன் சூடாக பதிலளித்துக் கொண்டிருக்கிறது.
                                                                          ***
 அதுசரி! ஏன் தினமணி ஆசிரியரைக் குறிப்பிடும் போதெல்லாம் முரசொலி வெளியிடும் பெட்டிச் செய்திகள் - கட்டுரைகள் (கலைஞர் எழுதுபவை அல்ல) ஆகியவற்றில் எல்லாம் அவரை ஆர்.எஸ்.எஸ். அய்யர் - என்று சாதியைக் குறிப்பிட்டு எழுதப்படுகிறதே; அது ஏன்? என்பது சிலரது கேள்வி: தினமணி தன்னை ‘நடுநிலை’ நாளேடு என்று கூறிக்கொள்கிறது. ஆனால் நடை முறையில் அது - தி.மு.க. எதிர்ப்பு ஏடாகவும் - ஜெயலலிதா - பா.ஜ.க. ஆதரவு ஏடாகவும், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறது என்ற ஒரு காரணத்திற்காகவே காங்கிரஸ் எதிர்ப்பு ஏடாகவும் வெளி வந்து கொண்டிருக்கிறது.  தினமணியின் நடுநிலை வேஷத்தைக்களைந்து அதன் உண்மை சொரூபத்தை பொதுமக்களிடம் அடையாளம் காட்டவே - அதன் ஆசிரியர் ஆர்.எஸ்.எஸ்.மதவெறி இயக்கத்தைச்சேர்ந்தவர் - சாதியில் திராவிடர் இயக்கத்தின் ஜென்மவைரி என்பதை யெல்லாம் சுருக்கமாகக் குறிப்பிடும் வகையில் ஆர்.எஸ்.எஸ். அய்யர் என்று குறிப்பிட வேண்டியதாக இருக்கிறது. இதனை அவர் இதுவரையில் மறுக்கவே இல்லையே, ஏன்?
        
                                           - சின்னகுத்தூசி
                                        நன்றி:முரசொலி(30-11-2010)

No comments:

Post a Comment