Search This Blog

Wednesday 1 December 2010

ஸ்டாலின் என்றொரு மானுடன்



இந்த 57 வயது இளைஞன் 2006ஆம் வருடம் மே மாதம் 28ந் தேதி உள்ளாட்சித்துறை அமைச்சராக (2008ஆம் ஆண்டு மே 29 தேதியிலிருந்து துணை முதல்வர்) பொறுப்பேற்ற பிறகு இந்த 4 வருடங்கள் 7 மாதங்களில் தமிழகம் முழுக்க கிட்டத்தட்ட 3,50,000 கிலோ மீட்டர்கள் கார், ரயில், விமானம் மூலமாக சுற்றுப் பயணம் செய்திருக்கிறார்.
இந்த நான்கரை வருடங்களில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் சென்னையை விட்டு, தன்னுடைய குடும்பத்தினரை விட்டுவிட்டு வெளியூர்களில் பொதுமக்கள், கட்சித் தொண்டர்களுடன் நேரத்தைச் செலவிட்டிருக்கிறார்.


இதே கால கட்டத்தில் ஸ்டாலின் 257 முறை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் சென்றிருக்கிறார்.
அவர் கலந்துகொண்ட அரசு விழாக்களின் எண்ணிக்கை 473. கட்சி விழாக்களின் எண்ணிக்கை 243.
மொத்தமாக தன்னுடைய பார்வைக்கு வந்த 34,899 மனுக்களில் 32,098 மனுக்களை விசாரித்து குறைகளைத்தீர்த்திருக்கிறார்.
ஒவ்வொரு நாளும் காலை ஸ்டாலின் தனது இல்லத்தில் 8 மணிக்கு ஆரம்பித்து, ஒரு மணி நேரத்தில் 100ல் இருந்து 200க்கு மேல் பொதுமக்கள், பார்வையாளர்களைச் சந்திக் கிறார். தலைமைச்செயலகத்தில் தனது பணி களுக்கிடையே அங்கேயும் பார்வையாளர் களைச்சந்திக்கிறார். மாலையில் அரசு விழாக்களில் பங்கேற்கும்போதுகூட மனுக் களுடன் வருபவர்களைச்சந்திக்கிறார். இப்படி ஸ்டாலினின் ஒருநாள் பொழுது முடிகிற போது அவர் சந்தித்து முடிக்கும் நபர்களின் எண்ணிக்கை ஒரு ஆயிரத்தை நோக்கி நெருங்கிக்கொண்டிருக்கும்.


சட்டப்பேரவை நடக்கின்ற காலங்களில் தன்னுடைய துறைகளின் மானியக்கோரிக் கையை பேரவையில் சமர்ப்பித்தல், விவாத காலங்களில், தனது அலுவலகத்தில் துறை அதிகாரிகள், செயலர், உதவியாளர்களுடன் குறிப்புகளைத் தயார் செய்திட, விவாதிக்க மாலை 6 மணிக்குத் தொடங்கும் கூட்டம் நள்ளிரவு 12 மணி வரைகூட நீடிப்பது உண்டு.


சட்டமன்ற பதிலுரைக்கான குறிப்புகளை யெல்லாம் விவாதித்து அவற்றை ஸ்டாலின் தன் கைப்படக்குறிப்புகளை எழுதிக்கொள்வார்.
இந்த ஓயாத, சலியாத உழைப்பு, சுறுசுறுப்பின் ரகசியம் பற்றி ஸ்டாலினிடம் கேட்டால், ‘கலைஞரின் சுறுசுறுப்பு, அவருடைய ஓயாத, சலியாத உழைப்புக்கு முன் இதெல்லாம் எம் மாத்திரம்?’ என்று தன்னடக்கத்துடன் பதில் சொல்கிறார். மீண்டும் வலியுறுத்திக் கேட்டால், ""தி.மு.க. மீது தொண்டர்களும் தி.மு.க. ஆட்சி மீது பொதுமக்களும் வைத் திருக்கும் நம்பிக்கை, அவர்களின் எதிர்பார்ப்புகள்தான் என்னைத்துவளாமல் செயல்பட வைக்கிறது"" என்கிறார். ""காலையில் 30 நிமிட வாக்கிங், அடுத்து 45 நிமிட யோகாசனம், மதிய உணவுக்குப் பிறகு 1 மணி நேர குட்டித் தூக்கம் மற்றும் பேரக்குழந்தைகளுடனான சில நிமிடக்கொஞ்சல்கள் என்னை நாள் முழுக்க சுறுசுறுப்பாகச்செயல்பட வைக்கிறது"" என்கிறார் அவர்.
- என்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி - ‘இந்தியா டுடே’ வார இதழின் பொறுப்பு ஆசிரியர் ஆனந்த நடராஜன் - `இந்தியா டுடே’யின் ‘மு.க.ஸ்டாலின் சிறப்பித’ழில் குறிப்பிட்டிருக்கிறார்.


இந்தியா டுடே வெளியிட்டுள்ள இந்தச்சிறப்பிதழ்,
                                           - ஸ்டாலினின் இளமைக் காலம்
                                              - அரசியல் நுழைவு
                                              - மிசாச் சிறைவாசம்
                                              - அவர் நடித்த கழகப்
                                                 பிரச்சார நாடகங்கள்
                                             - அவரது திரைப்படங்கள்
                                              - தொலைக்காட்சித் தொடர்கள்
                                              - இளைஞர் அணி தொடக்கம்
                                              - கழகம் நெருக்கடிகளைச் சந்தித்தபோது
                                               இளைஞர் அணியின் எழுச்சி நிறை பணிகள்
                                               - சென்னை மாநகர மேயராக
                                               அவர் ஆற்றிய அரும்பணிகள்;
                                                அவரது நிர்வாகத் திறமை
- தொண்டால் பொழுதளந்து அதன்மூலம் படிப்படியாக எம்.எல்.ஏ., கழகப் பொருளா ளர், அமைச்சர், துணை முதலமைச்சர் - என்று படிப்படியாக உயர்ந்து உச்ச நிலையை எட்டியது.- துணை முதலமைச்சர் பொறுப்பில் அவரது அயராத உழைப்பு, அபார சாதனைகள்.
- அதிகாரிகளிடம் அவர் காட்டும் கனிவு
- குறிப்பிட்ட காலத்துக்குள் திட்டங்களை - விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பே விரைந்து நிறைவேற்றச் செய்திடும் அவரது நிர்வாகத் திறமை
- என்று ஸ்டாலினின் பன்முகத்திறமைகளை நிகழ்ச்சிகள் - ஆதாரங்கள் - புள்ளி விவரங்களோடு வெளிப்படுத்தும் சுவையும் பயனும் மிகுந்த மிகச் சிறந்த கட்டுரைகள் கொண்டதாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் இந்தச் சிறப்பிதழை - ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு - என்றே அனைவரும் வியந்து பாராட்டும் வகையில் - மெத்தச் சிரமமும் அக்கறையும் கொண்டு தயாரித்திருக்கிறது இந்தியா டுடேவின் ஆசிரியர்குழு.


ஸ்டாலின் எதிர்ப்புக் கட்டுரையோ என்று நினைக்கச்செய்யும் சில கடுமையான எதிர்ப் பார்வை கொண்ட கட்டுரைகளையும் வெளியிடத்தயங்கவில்லை அது. அப்படிப்பட்ட கட்டுரைகளில் ஸ்டாலின் பெயரால் தி.மு.க.வுக்கு எதிரான நெடிகாரம் சற்று அதிக மாகவே இருக்கிறது!


இந்தச் சிறப்பிதழுக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது. அது என்ன?
இந்தியா டுடே இதுவரையில் 4 சிறப்பிதழ்களை மட்டுமே வெளியிட்டிருக்கிறது. அதிலே இது 4வது சிறப்பிதழ்.
இந்தியா டுடே வெளியிட்ட சிறப்பிதழ்கள் பற்றி அதன் ஆசிரியர் பிரபுசாவ்லா - ஒரு அருமையான முன்னுரையை எழுதியிருக்கிறார். அதிலே சிறப்பிதழ் வரிசையில் ஸ்டாலினைத் தேர்ந்தெடுத்தது ஏன் என்பது பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை எழுதி யிருக்கிறார். அதுவே இந்தச் சிறப்பிதழின் மணிமுடியாக - சிகரமாக அமைந்திருக்கிறது. 


அது வருமாறு:-


இந்தியா டுடே வழங்கும் சிறப்பிதழ்கள் மிகவும் பிரபலமாக இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். செய்தியில் தொடர்ந்து அடிபடும் ஆளுமைகளை வைத்து ஒரு முழு இதழ் கொண்டு வரும் நோக்கத்தில்தான் சிறப்பிதழ் கள் என்ற கருத்தாக்கம் கொண்டு வரப்பட்டது. தத்தமது துறையை பிறர் பார்த்த விதத்தை மாற்றியமைத்த நபர்களின் பல்வேறு பரிமாணங் களுக்கு கவனம் கொடுக்கும் சிறப்பிதழ்கள் இவ்வாறு தான் பிறந்தன. 2007ல் ரஜினிகாந்த் சிறப்பிதழுடன் இதன் பயணம் தொடங்கியது. அதன் பிறகு இதுவரை நான்கு சிறப்பிதழ்களை வெளிவிட்டிருக்கிறோம். தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் சிறப்பிதழை நாங்கள் 2008ல் வெளியிட்டபோது பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன.
இப்போது தமிழகத்தின் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிறப்பிதழ்மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
ஸ்டாலினின் தந்தையும் தமிழக முதல்வருமான மு.கருணாநிதி அவர்களை மிக நெருக்க மாக அறியும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 25 வருடங்களாக பழகி வந்திருக் கிறேன். முதிர்ந்த தலைவர். சிறந்த ராஜதந்திரி, அரசியலில் உறுதியுடனும், விடாமுயற்சியுடனும் செயல்படுபவர். இந்தியாவின் மிக உயர்ந்த, என்றும் நிலைத்திருக்கும் தலைவர். அவருக்கு அரசியலிலும் ஆட்சியிலும் தோள் கொடுக்க வந்திருக்கிறார், அவரது இளைய மகன் மு.க.ஸ்டாலின்.
‘மிசா’ சிறைக் கொடுமை அனுபவங்களுடனும் 40 ஆண்டு கால அரசியல் அனுபவங் களுடனும் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலினை நான் நேரில் சந்தித்ததில்லை. என்றாலும் அவர் அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக வந்திருக்கிறார். அவர் சென்னையில் மேயராக முதன்முதலில் ஆட்சிப் பொறுப்பேற்றபோதே சென்னை யை சிங்காரச் சென்னையாக்க வேண்டும் என்கிற விரிந்த கனவுடன் செயல்பட்டு அவர் நனவாக்கவும் செய்தார். அப்போது அவருடைய ஆட்சித்திறன் எல்லோருக்கும் தெரிய வந்தது.


சமீபகாலமாக கருணாநிதியால் விரிவாக பயணம் செய்ய முடியாத நிலையில் துணை முதல்வரான ஸ்டாலின் பரவலாகப் பயணம் செய்து அரசின் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
வாரிசு அரசியல்வாதி என்கிற விமர்சனங்களி லிருந்து ஸ்டாலின் தப்பிக்க முடியவில்லை யென்றாலும் தனது 40 ஆண்டு கால அரசியல் பணி, கடுமையான உழைப்பு, விடாமுயற்சி, எதிர்காலத் தமிழகம் குறித்த கனவு, எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களுடன் சிநேகமாகப் பழகும் பாங்கு ஆகியவை அந்த விமர்சனங்களை சரிக்கட்ட உதவுகின்றன.
- என்று குறிப்பிட்டிருப்பதின் மூலம் முழுச் சிறப்பிதழையும் படித்து முடித்து விட வேண்டும் என்ற ஆவலைத்தூண்டிவிட்டிருக்கிறார் ஆசிரியர் பிரபுசாவ்லா.


இந்தியா டுடே - சிறப்பிதழ் ஸ்டாலினின் அரசியல் பற்றி ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டிருந்தாலும் பெரும்பாலான கட்டுரைகளில் அவரது
                                                       - மனிதநேயம்
                                                        - எதிர்க்கட்சித் தலைவர்களை
                                                          மதிக்கும் ஜனநாயக மாண்பு
                                                         - உற்றுழி உதவி - உறுபொருள்
                                                             வழங்கிடும் உதாரணம்
ஆகியவைகளே விரவிக் கிடக்கின்றன.
உதாரணத்திற்கு ஒன்று -


ஸ்டாலின் ஓர் அரசியல்வாதி, துணை முதல்வர் என்பதைவிட
ஸ்டாலின் ஒரு
மனிதாபிமானி
என்பதே முதன்மையானது என்பதை விளக்கிடும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை எடுத்துக் காட்டி விளக்கியிருக்கிறார். 


அது வருமாறு:-


சில மாதங்களுக்கு முன்பு காலை 10.00 மணி அளவில் சென்னையில் என் இல்லத்தில் இருந்தேன். தலைவர் வாசன் வீட்டிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. சென்னையில் ஒரு பிரபலமான மருத்துவமனையில் சில நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்த எங்களது சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இறந்து போனார். உடனடியாக அங்கே சென்று அவரது சடலத்தை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
நான் அங்கு போய்ச் சேருவதற்குள் அங்கே வந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டுச் சென்றுவிட்டார் துணை முதலமைச்சர். அங்கே நின்று கொண்டிருந்த சில திராவிட முன்னேற்றக் கழக நண்பர்களின் முகத்தில் கசப்பு ரேகைகளை என்னால் பார்க்க முடிந்தது.
அங்கே இருந்த சென்னை மாநகராட்சி காங்கிரஸ் தலைவர் சைதை ரவியிடம் என்ன காரணம் என்று கேட்டேன். இறந்துபோன சட்டமன்ற உறுப்பினரின் உறவினர் ஒருவர் துணை முதலமைச்சரிடம் மிகவும் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டார். அதைப் பார்த்த தி.மு.க. நண்பர்கள் மிகவும் வருத்தமடைந்து விட்டார்கள். வேறு இடமாக இருந்து இருந்தால் கைகலப்பு நடந்திருக்கும் என்று சொன்னார்கள்.


இறந்துபோன சட்டமன்ற உறுப்பினருக்கு மரியாதை செலுத்தவந்த துணை முதலமைச்சரைப் பார்த்து காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஒரு நண்பர், ""நீங்கள் எல்லோரும் ஏமாற்றிவிட்டீர்கள். யாரும் அவரைக் கவனிக்க வில்லை. இப்போது எதற்காக இங்கே வந்தீர்கள்?"" என்ற தொனியில் மிகவும் உரத்த குரலில் அந்த மருத்துவமனையே அதிரும் அளவுக்குப் பேசியுள்ளார். எவ்வித பதிலும் சொல்லாத துணை முதலமைச்சர், மறைந்த சட்டமன்ற உறுப்பினருக்கு மலர் வளையம் வைத்துவிட்டு அமைதியாகத் திரும்பிவிட்டார். இதனைக் கேள்விப்பட்ட நான் அவமானத்தில் குன்றிப் போனேன்.


ஏனென்றால், இறந்து போன சட்டமன்ற உறுப்பினரை மூன்று முறைக்குக் குறை வில்லாமல் மருத்துவமனைக்கு வந்து பார்த்து விட்டுச் சென்றவர் துணை முதலமைச்சர். இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, மறைந்துபோன சட்டமன்ற உறுப்பினரின் சகோதரரை அழைத்துக் கொண்டு துணை முதலமைச்சரைச் சந்தித்து மருத்துவ சிகிச்சைக்கு இதுவரை ரூ.9 லட்சம் செலவாகியிருக்கிறது என்று சொன்னவுடன், துணை முதல்வர் நேரில் சென்று சட்டப்பேரவைத்தலைவரிடமும், செயலரிடமும் பேசி உடனடியாக ரூ.9 லட்சத்தை மருத்துவ மனைக்கு காசோலை மூலம் அனுப்பி வைத்தார். அதுமட்டு மல்லாமல், இனி எவ்வளவு தொகை ஆனாலும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் என்று கடிதத்தையும் கொடுக்கச் சொன்னார்கள். அந்தக் காசோலையை அனுப்பி வைத்து விட்டு அவரே அன்று நேரிடையாக மருத்துவமனைக்கு வந்து டாக்டர்களிடம் நிலைi மயை விசாரித்துச் சென்றார்.


இவ்வளவு உதவிகளைச் செய்த ஒருவரிடம் இப்படி ஒருவர் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டாரே என்று தெரிந்தவுடன் நான் மிகவும் வருத்தமுற்றேன். உடனே மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனிடம் இதனைத் தெரிவித்து எங்கள் சார்பாக நீங்கள் துணை முதலமைச்சரிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவரும் துணை முதலமைச்சரிடம் பேசினார்.


இரண்டு நாட்களுக்குப் பின்பு கோட்டையில் நான் நேரில் சந்தித்து நடந்தவைகளுக்கு வருத்தம் தெரிவித்தேன். அவரோ, மிகவும் இயல்பாக, ""ஏதோ எம்.எல்.ஏ. இறந்த வருத்தத்தில் பேசிவிட்டார்கள். நம்மிடம் பேசாமல் வேறு யாரிடம் பேசுவார்கள்?"" என்று சிரித்துக்கொண்டே சொன்னவுடன் எவ்வளவு உயரத்திற்கு அவர் வளர்ந்துள்ளார் என்பதைப்புரிந்துகொண்டேன்.
- என்று நெஞ்சம் நெக்குருகி - வாசகர்களின் கண்களைப் பனிக்கச் செய்யும் வகையில் எழுதியிருக்கிறார் பீட்டர் அல்போன்ஸ். மொத்தத்தில் 
மு.க.ஸ்டாலின்
பொன்னியின்
செல்வன்
(அடிப்படை உறுப்பினர் முதல் துணை முதல்வர் பதவி வரை)
ஸ்டாலினின்
40 வருட
வரலாறு
என்று தலைப்பிட்டு இந்தியா டுடே வெளியிட்டுள்ள சிறப்பிதழ் ஒரு ‘தகவல் களஞ்சியம்’ என்று சொன்னால் அதனை யாரும் மறுக்கவியலாது!
                                              -சின்னகுத்தூசி                                  நன்றி:முரசொலி(27-11-2010)

No comments:

Post a Comment