Search This Blog

Wednesday 1 December 2010

தி.மு.க. செல்வாக்கு சரிந்துவிட்டது என்று சாதிக்க முனையும் அ.தி.மு.க. ஆதரவு ஏட்டின் தந்திர விமர்சனம்!

ஆ.ராசா பதவி விலகல் மூலம் தி.மு.க.வின் செல்வாக்கு டெல்லியில் சரிந்துவிட்டதாம். அதை மீண்டும் மீட்டெடுக்க அது என்ன செய்யப் போகிறது என்பதும் இப்போது பரவலாக எழுந்துள்ள கேள்வியாம்! - தினமணி நாளேடு 20.11.2010 சனிக்கிழமை யன்று ஒரு முழு நீள செய்தி விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.

 தி.மு.க. செல்வாக்கு சரிகிறது என்று சாதிப்பதற்காகவே - வி.பி.சிங் காலத்தில் தி.மு.க. செல்வாக்கு எவ்வளவு தெரியுமா? - ஐ.கே.குஜ்ரால் காலத்தில் அதன் செல்வாக்கு இமயத்தையே தொட்டுவிட்டது தெரியுமா? - வாஜ்பாய் காலத்து தி.மு.க. செல்வாக்கு - எவரெஸ்ட் சிகரத்தில் கொடி பறக்கவிடும் அளவிலானது! - என்றெல்லாம் பாரா பாராவாக பழம் பெருமைகள் என்று ஒரு பட்டியலையே தயாரித்து வெளியிட்டிருக்கிறது!

 தினமணியில் துக்ளக்சோ - ஆடிட்டர் குருமூர்த்தி சிபாரிசின் பேரில் என்றைக்கு ஆர்.எஸ்.எஸ்.சைச்சேர்ந்த வைத்தியநாத அய்யர் ஆசிரியப்பொறுப்பேற்றாரோ அன்று முதலே தினமணி தி.மு.க. எதிர்ப்பு ஜெயலலிதா ஆதரவு பா.ஜ.க. ஆதரவு ஏடாக மாறிவிட்டது என்பது எல்லோரும் அறிந்த விஷயம்! தி.மு.க.வை நாள் தவறாமல் தாக்குவதையும் அ.தி.மு.க.வின் கொடநாடு குறட்டை பற்றி பக்கம் பக்கமாக புகழ்ந்து போற்றுவதையும் அன் றாடக் கடமையாகக் கொண்டுள்ள தினமணி, இப்படி திடீரென்று, தி.மு.க.வின் பழம் பெருமைகளைப் பட்டியலிட்டு, அய்யோ அப்பேர்ப் பட்ட தி.மு.க.வின் செல்வாக்கு இப்படி சரிந்து விட்டதே என்று முதலைக்கண்ணீர் வடிக்கிறதே; ஏன்? அதில்தான் இருக்கிறது சூட்சுமம்! இப்படியெல்லாம் புகழ்வது போலப் புகழ்ந்து - தி.மு.க. செல்வாக்கு இழந்துவிட்டது என்று வாசகர்கள் மனதில் ஒரு பிரமையை உருவாக்க முயலுகிறது அது!
                                                                       ***
திராவிட முன்னேற்ற கழகம் 1949ல் தொடங்கப்பட்டது. அது தன்னை திராவிட முன்னேற்றக் கழகம் என்று அறிமுகப்படுத்தும் போதே அதற்கு அகில இந்திய செல்வாக்கைவிட திராவிட முன்னேற்ற கழகமே பெரிது என்பதை எடுத்து காட்டுவதாக இருந்தது. அது ஒருபோதும் தன்னை அகில இந்தியாவாக அடையாளம் காட்டிக் கொள்ள முயன்றதே இல்லை. எல்லா விஷயங்களிலும் அகில இந்தியாவுக்கும் வழிகாட்டும் இயக்கமாகவே அது தன்னை அடையாளம் காட்டிக்கொண்டதே அல்லாமல் ‘அகில இந்தியா’வாக அது தன்னை ஒரு போதும் காட்டிக்கொள்ள முயன்றதில்லை. எனினும் தி.மு.க. தொடங்கப்பட்ட அந்த நாளிலிருந்து இன்றுவரை, அகில இந்தியக்கட்சிகளும் வியப்பும் பிரமிப்பும் அடையும் வகையில்தான் இயங்கி வருகிறது.

கட்சியின் முன்னேற்றத்தின் ஒவ்வொரு படியிலும் - எடுத்து வைத்த அடியிலும் தி.மு.கழகம் சந்தித்த அடக்குமுறைகள் கொடுமைகள்- ஒவ்வொரு போராட்டத்திலும் அது ஏற்றுக் கொண்ட தழும்புகள் - இந்தியா முழுவதிலுமுள்ள பல்வேறு கட்சிகளும் பார்த்து - பின்பற்றுவதற்குரியதாகவே இருந்தது. தினமணி கூறுவதுபோல் - எத்தகைய சரிவினாலும் தி.மு.க. மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்ததே இல்லை.
1949 முதல் இன்று வரையிலான அதன் வளர்ச்சி என்பது பல்வேறு அதற்கு ஏற்படுத்தப்பட்ட பல்வேறு நெருக்கடிகள், வழங்கப்பட்ட தண்டனைகள் - அடக்கு முறைகளிலிருந்தும் அது மீண்டும் எழுந்து சிங்க நடைபோடும் தன்மை உடைய தாகவே இருந்து வருகிறது.
 1950 களில் - குலக் கல்வி திட்ட எதிர்ப்பு - கல்லக்குடி போராட்டம் - நான்சென்ஸ் - கண்டன ரயில் நிறுத்தப் போராட்டம் ஆகிய மும்முனை போராட்டங் களை அது நடத்தியபோது, தி.மு.க.வை மூட்டைபூச்சி நசுக்குவது போல நசுக்கி காட்டுவேன் என்று சட்ட சபையிலேயே முதலமைச்சர் ராஜாஜி சூளுரைத்தார். ஆனால், மும்முனை போராட்டத் தின்போது அவரது ஆட்சி அவிழ்த்து விட்ட பல்வேறு கொடுமைகளையும் மீறி தி.மு.க. அகில இந்திய செல்வாக்கு மட்டுமின்றி உலகப் புகழை அடைந்தது.  அப்போது அமெரிக்காவில் இருந்து வெளி வரும் ‘நியூயார்க் டைம்ஸ், தி.மு.க. போராட் டத்தை பற்றி உயர்வாக செய்தி வெளியிட்டது. அதன்பின்னர் நடைபெற்ற விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்டத்தின் போது அண்ணா உட்பட அனைத்து தலைவர்களும், தொண்டர்களும் ஆறுமாதம் , ஒரு வருடம் என்று சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்தனர். அந்த நிலையிலும் காமராஜர் ஆட்சியில் நடந்த திருவண்ணாமலை சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.கழகம் மகத்தான வெற்றி பெற்றது. அதனால் தான் பெருந்தலைவர் காமராஜர் ‘கே.பிளான்’ என்ற பெயரால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஆனார். அதற்கு மூல காரணம் தி.மு.க.வின் வளர்ச்சி தான் என்று அகில இந்தியாவும் தி.மு.க.வின் பலம் குறித்து வியந்து எழுதின. இதன்மூலம் தி.மு.க.வை அடக்கி ஒடுக்க முயன்றால் அது முன்னிலும் பலமடங்கு பலத் தோடு எழுந்து நிற்கும் என்பது தெளிவானது.
தி.மு.கழகம் 1965ல் மத்தியில் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்பதை எதிர்க்கும் வகையில் குடியரசு தினத்தை துக்க நாள் என்று அறிவித்தது. அதனையொட்டி மாணவர்கள் கிளர்ந்து எழுந்து நடத்திய வீரம் செறிந்த போராட்டம் அகில இந்திய அரசியலை குலுக்கிய போராட்டம் ஆகும். அப்போது சிங்கத் தமிழன் சின்னசாமி உள்ளிட்ட பல பேர் தாய் மொழிகாக்க தங்கள் மீது தாங்களே பெட்ரோலையும், மண் ணெண்ணை யையும் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தங்களது இன்னுயிரையே மாய்த்துக்கொண்டது என்பது தமிழ் மொழி வரலாற்றுல் தமிழக வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப் பட்ட தியாக வரலாறு ஆகும். அந்த போராட்டத்தின்போது தமிழகம் முழுவதும் தி.மு.க.வை இதன் மூலம் ஒழித்தே கட்டி விடுவது என்பது போல அடக்குமுறை அவிழ்த்து விடப்பட்டது. எனினும் அடக்கு முறை கள் முதுகெலும்பு ஒடிந்து முறிந்து விழுந்தன.  ""பிரதமர் நேரு இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரையில் மத்தியில் இந்தியுடன் ஆங்கிலமும் துணை ஆட்சி மொழியாக நீடிக்கும்"" என்று தமது வாக்குறுதிக்கு சட்ட வடிவம் வழங்கினார். தி.மு.க. வின் செல்வாக்கை அடக்க அடக்க ஒடுக்க ஒடுக்க அது முன்னை விட பலமாக வளரும் என்பது இதன்மூலம் மீண்டும் ஒரு முறை நிருபணம் ஆகியது.
 இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்குப் பின்னர் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றிப் பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அவசர நிலை மத்தியில் பிரகடனப்படுத்தப்பட் டது. அந்த காலக் கட்டத்தில் தி.மு.க.வின் தலைவர்கள், தொண்டர்கள், முக்கியஸ்தர்கள் ஆகியவர்கள் 500க்கும் மேற்பட்டவர் களை மத்திய அரசு ""மிசா"" சட்டத்தின் கீழ் கைது செய்து வழக்கு போட்டு ஜாமீனில்கூட வெளிவர முடியாது என்கிற நிலையில் காராகிருகத்தில் அடைத்தது.  அதே சமயம் கலைஞர், தி.மு.க. தலைவர் கள் ஆகியோரது நற்பெயருக்கு புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர்கள் மீது ஊழல் முத்திரை குத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தின் அடிப்படையிலேயே சர்க்காரியா கமிஷன் என்கிற ஒரு விசாரனைக் கமிஷனை நியமித்தது அன்றைய மத்திய அரசு.
 அந்த காலக்கட்டத்தில் அவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகள், போலீஸ் கொடுமை களை கண்டு தி.மு.க.வில் இருந்த வெகு சில பயந்த சுபாவம் உடையவர்கள், "" நாங்கள் தி.மு.க. அல்ல"" என்று பத்திரிகையிலேயே விளம்பரங் கள்கூட கொடுத்தார்கள். அப் போது தி.மு.க. எதிர்ப் பாளர்கள் எல்லாம் இத்தோடு தி.மு.க. கதை முடிந்து விட்டது என்று கணக்கிட்டு பரவச கூத்தாடினார்கள். ஆனால் அவர்களது கனவு பகல் கனவாயிற்று.
1977-ல் எம்.ஜி.ஆர். முதல்வர் ஆனார். அவர் பதவியேற்ற நாள் முதலே தி.மு.க.வை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விட்டார். தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கலைஞர் அடிக்கல் நாட்டி திறந்து வைத்த கட்டிடங்கள் எதுவாக ஆனாலும் அவைகளில் கலைஞர் பெயர் இருக்கக்கூடாது என்று கலைஞர் பெயர் கொண்ட கல்வெட்டுகளை எல்லாம் இடித்து அகற்றினார். கலைஞர் பெயர் வைக்கப்பட்ட கட்டிடங்களில் இருந்து அவர் பெயரை அகற்றி அவற்றுக்கு வேறு பெயர்களைச் சூட்டினார். அவரது ஆட்சிக் காலத்தில் ஈழத்தமிழர்களுக்காக தி.மு. கழகம் பல்வேறு போராட்டங் களை நடத்தியது. அப்போது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்கு போட்டு சிறையில் அடைத்தார். 86-ல் நடைபெற்ற மொழிப் போரில் கலைஞரையும் அவர் விட்டு வைக்கவில்லை. கலைஞர் தனது இல்லத்திலிருந்து புறப்பட்டு சில அடி தூரம் வந்தபோதே அவரை கைது செய்து சிறையில் அடைத்தார். சிறையில் கலைஞருக்கு சிறைக் கைதிகளுக்கு அளிக்கப்படும் ஆடையையே அணிய வேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்கள்.
இப்படி எம்.ஜி.ஆர். ஆட்சியில் தி.மு.க.வை ஒழிக்க அடுக்கடுக்கான கொடுமைகள் தி.மு.க. மீது ஏவப்பட்டன என்றாலும் தி.மு.க. ஒன்றும் ஒழிந்து போய் விடவில்லை. அதன் செல்வாக்கு ஒன்றும் சரிந்து போய்விட வில்லை.  இத்தனை கொடுமைகளுக்கு நடுவிலும் எம்.ஜி.ஆர். ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட் சித் தேர்தலில் தி.மு.கழகம் வரலாறு காணாத வகையில் எம்.ஜி.ஆர். கட்சியை வீழ்த்தி வெற்றி பெற்று தி.மு.க.வை யாரும் ஒழித்து விடமுடியாது. தி.மு.க.வின் செல்வாக்கு ஒரு போதும் சரிந்து விடாது என்பதை நிரூபித்துக் காட்டியது.
 1991-லும் 2001 - லும் நடைபெற்ற தேர்தல் களில் ஜெயலலிதா வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காலத்திலும் இதுபோல தான் தி.மு.க. எதிர்பாளர்கள் இனி தி.மு.க. எழ முடியாது என்று நினைத்தார்கள். ஆனால் நடந்தது என்ன 1989 தேர்தலிலும் தி.மு.க. வெற்றி முரசு கொட்டி ஆட்சியை கைப்பற்றியது. அதன் பிறகு 1996-ல் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலிலும் தி.மு.க.வே அபார வெற்றி பெற்றது. மீண்டும் 2006-ல் நடந்த தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்று கலைஞர் 5-வது முறையாக முதல் அமைச்சர் ஆனார்.

2011 தேர்தலிலும் அவரே வெற்றி பெற்று 6-வது முறையாகவும் முதல் அமைச்சர் ஆவார் என்பதே பெரும்பான்மையான வர்களின் கணிப்பாக இருந்து வருகிறது. ம்ம்ம் எனவே; தி.மு.கழகம் ராசாவின் பதவி விலகலால் செல்வாக்கு இழந்துவிட்டது என மக்களை நம்ப வைக்க தினமணி போன்ற ஜெயலலிதா ஆதாரவாளர்கள் நடத்தும் பொய் பிரச்சாரங்கள் எல்லாம் ஒரு போதும் நிறைவேறாது.

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.
   என்கிற பொய்யா மொழியார் வள்ளுவப் பெருந்தகையின் வாசகத்திற்கேற்ப - எத்தனை இடர்ப்பாடுகள் - இன்னல்கள் - துன்பங்கள், துயரங்களை சந்திக்க நேர்ந்தாலும் அவைகளை எல்லாம் தி.மு.கழகம் சந்தித்து சமாளித்து அடுத்த வெற்றியை நோக்கி நடை போடுமே தவிர, அது ஒருபோதும் வீழ்ந்து விடாது;

தனது செல்வாக்கினை இழந்து விடாது; அடிக்க அடிக்க எழும் பந்துபோல  அரைக்க அரைக்க மணக்கும் சந்தனம் போல முன்னைவிட பல்லாயிரம் மடங்கு வேகத் துடனும் புகழுடனும் அது மக்கள் பேராதரவைப் பெற்று வெற்றி முரசு கொட்டும் என்பதையே மேற்கண்ட தி.மு.க.வின் கடந்த காலம் ‘தினமணி’களுக்கு எடுத்துக்காட்டுகிறது!
-சின்னகுத்தூசி
நன்றி:முரசொலி (22-11-2010)

No comments:

Post a Comment