Search This Blog

Wednesday, 1 December 2010

குத்தூசி குருசாமியும் கறுப்புச்சட்டை சாமியாரும் ஸ்ரீரங்கத்து பட்டர்களும்!

19.11.2010 வெள்ளியன்று வெளிவந்த ‘தினகரன்’ நாளிதழில் ஒரே பக்கத்தில் இரண்டு செய்திகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அந்த இரண்டு செய்திகளுமே,
கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக அய்யாவின் கரம் தொட்டு, அண்ணாவின் வழி நடந்து வரும் சுயமரியாதை இயக்கப் பெரியவர்கள், அனைவருக்கும் சிந்தையெலாம் தேனாக இனிக்கும் செய்திகள்.

அந்தச் செய்திகள் என்ன என்பதைப் பற்றி பரிசீலிக்கும் முன்பு சுயமரியாதை இயக்கத் தின், திராவிடர் இயக்கத்தின் தொடக்கக் காலத்திலும், அதன் வளர்ச்சிக்காலத்திலும். சமுதாயத்தில் மண்டிக் கிடந்த மூட நம்பிக்கைகளை - சாதி வேற்றுமைகளை, ஆகமம் சாஸ்திரம் என்ற பெயரால் வேரோடிக் கிடந்த விஷ விருட்சங்களை களையவும் அகற்றவும் எத்தகைய - துணிச்ச லோடு பாடுபட வேண்டியிருந்தது; பாடுபட்டது என்பதை ஓரிரு சம்பவங்கள் மூலம் நினைவு படுத்திக் கொள்வது பொறுத்தமாயிருக்கும்.

சுயமரியாதை இயக்கம் தொடங்கி 6, 7 ஆண்டுகளே இருக்கும். தந்தை பெரியார் அவர்கள் தொடக்கக் காலத்தில் இருந்தே கோயில்கள், மதங்கள், கடவுள் நம்பிக்கை ஆகியவற்றை குறிவைத்து இடைவிடாது, அவருக்கு இழைக்கப்பட்ட இடர்ப்பாடுகளுக்கு நடுவிலும், தமிழக மக்களை விழிப்புணர்வு அடையும் விதத்தில் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வந்தார்.

கோவில், கடவுள் ஆகியவை பற்றிப் பேசிய அவர்,
""திருவிழாக் காலங்களில் சாமியின் வாகனத்தை கடவுள் பக்தி என்ற பெயரால் தூக்கும் சூத்திர மக்களே, அந்த வாகனத்தில் குருக்கள்கள், பட்டர்கள் என்கிற பார்ப்பனர்களை யும் வைத்து சுமக்கிறீர்களே, ஏன் பட்டர்களும் குருக்கள்களும் கூட நீங்கள் கும்பிடும் சாமிகளா? எந்த பார்ப்பனராவது இதுபோல உங்களைப்போல சாமி தூக்க வருகிறார் களா? நீங்கள் மட்டும் சாமி பக்தி என்ற பெயரால் பார்ப்பன பட்டர்களையும், குருக்கள் களையும் சேர்த்து தோளில் சுமக்கிறீர்களே, வெட்கமாக இல்லையா உங்களுக்கு?"" என்று கேட்பவர்கள் ஆவேசம் கொள்ளும் படியாக உரத்த குரலில் கேட்பார்.

1928-ம் ஆண்டு திருவல்லிக்கேணியில் உற்சவம் நடந்தது.
கருட வாகனத்தில் பார்த்தசாரதி பெருமாள் ஆரோகணித்து வர அதிலே பார்ப்பன பட்டர் களும் அமர்ந்திருந்தார்கள்.

கருட வாகனம் 3-ஆம் வீதியை அடைந்த போது வாகனத்தில் அமர்ந்திருந்த பட்டர்கள், வாகனத்தைச் சுமக்க முடியாமல் சுமந்துவந்த சூத்திரர்களை நோக்கி இழித்தும் பழித்தும் பேசி அதட்டி உருட்டி மிரட்டினார்கள்.
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா! வாகனத்தை சுமந்து வந்த தோழர்கள் பட்டர்களின் தகாத சொற்களைக் கேட்டு அளவு கடந்த ஆத்திரம் அடைந்தார்கள்.அவ்வளவுதான்!

வாகனத்தை நடு வீதியில் பொத் என்று போட்டு விட்டார்கள். ""அய்யரே, இனிமேல் நாங்கள் இந்த வாகனத்தைச் சுமக்க மாட்டோம். நீங்களே இனி இதை சுமந்து கொண்டு போய் கோவிலில் இறக்குங்கள். இனி ஒரு போதும் உங்களை எல்லாம் வைத்து சுமக்க ஒப்புக் கொள்ள மாட்டோம்"" என்று சொல்லி விட்டு தரையில் அமர்ந்திருந்தார்கள்.

எத்தனை எத்தனையோ பேர் வந்து அவர்களை சமாதானப்படுத்தினார்கள். எனினும் அவர்கள் அசைந்து கொடுக்க வில்லை.
சில மணிநேரம் வரையில் அவர்களை சமாதானப்படுத்த ஊர்ப் பெரியவர் பலரும் ஒன்று கூடி படாத பாடுபட்டார்கள். அதன் பிறகே பெருமாளின் கருட வாகனம் கோயிலுக்குப் போய்ச் சேர்ந்தது.
                                                                              ***
தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் சப்பஸ்தான பல்லக்கு விழா ஆண்டுதோறும் நடை பெறுவது வழக்கம். ஏழு வேறு வேறு ஊர்களில் இருந்து சாமிகளை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருவையாற்றுக்கு கொண்டு வருவார்கள். 7 பல்லக்கில் வரும் அந்த 7 சாமிகளை தரிசித்து புண்ணியம் பெறுவதற்காக ஏராளமான பக்தர்கள் அங்கே கூடு வார்கள்.

ஒரு சமயம் திருவையாற்றுக்கு பொதுக் கூட்டம் பேச ""விடுதலை"" ஆசிரியரும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளருமான குத்தூசி சா.குருசாமி வந்தார். அவர் அந்தக் கூட்டத்தில் பேசும் போது,
""இந்த நவீன யுகத்திலும் பார்ப்பனர்களை பல்லக்கில் வைத்து சுமக்கலாமா? எந்தப் பார்ப் பனராவது இந்தக் காரியத்தை செய்ய வருகிறார்களா?
மனிதனை மனிதன் வைத்து சுமக்கும் இது அநாகரீகம் அல்லவா, காட்டுமிராண்டித்தனம் அல்லவா?
நான் ஒன்றைச் சொல்லுகிறேன் கேளுங்கள், இந்த வருடம் சப்பஸ்தான பல்லக்குகள் இந்த ஊருக்கு வரும்போது பல்லக்கை சுமக்கிறவர்கள் ஆற்றுப் பாலத்தில் வரும்போது சாமியையும் பல்லக்கையும் அதில் ஏறிவரும் பட்டர்களையும் ஆற்றுக்குள் அப்படியே கவிழ்த்து விடுங்கள். அப்போதுதான், "" மனிதனை மனிதனே சுமக்கும் இந்த காட்டு மிராண்டிப் பழக்கம் அடியோடு ஒழியும்"" - என்று முழக்கமிட்டார் குத்தூசி குருசாமி.
அதற்கு அன்று அவருக்குக் கிடைத்த பரிசு என்ன தெரியுமா?
ஆறுமாத கடுங்காவல் சிறைத் தண்டனை.
                                                                             ***
திருவாரூரில் ஒரு சாமியார் இருந்தார். அவர் யார்? எந்த ஊரில் இருந்துவந்தார்? - என்ப தெல்லாம் யாருக்கும் தெரியாது.
அவர் எப்போதும் கருப்புச் சட்டையே அணிந்திருந்ததால் அவரை எல்லோரும் கறுப்புச் சட்டை சாமியார் என்று தான் அழைப்பார்கள்.

அவர் கையிலே ஓர் தனி தார்ச் சட்டியையும் ஒரு பிரஸ்ஸையும் கையில் வைத்துக் கொண்டு ‘கண்ணில் பட்ட சுவர்களில் எல்லாம்’ கடவுள் இல்லை என்பது போன்ற பெரியார் பொன் மொழிகளை எழுதுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். ஒரு சமயம் திருவாரூர் குமர கோயிலில் கந்த சஷ்டியை ஒட்டி சூரசம்ஹாரத் திருவிழா நடந்தது. அப்போது சாமியை மயில் வாகனத்தின் மீது வைத்து தூக்கிக் கொண்டு துர்க்கை அம்மன் அருகில் வந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கறுப்புச் சட்டை சாமியார் தன் மடியில் மறைத்து வைத்திருந்த சாணி, சேறு, சகதி ஆகியவைகளை எடுத்து சாமியின் முகத்திலும் அவருக்கு பக்கத்திலே அமர்ந்திருந்த ஆசாமியின் முகத்திலும் வீசிவிட்டார்.அவருக்குக் கிடைத்த பரிசும் ஆறு மாத
சிறை வாச தண்டனைதான்.

மூட நம்பிக்கைகளை ஒழிக்க சாஸ்திரம், சம்பிரதாயம், ஆகமம் என்ற பெயர்களால் சமூகத்தில் உயர் ஜாதி மக்கள் நடத்தி வந்த அக்கிரமங்களை, அநியாயங்களை ஒழிப்பதற்காக எத்தகைய தியாகத் தழும்புகளை சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந் தவர்கள் பெற வேண்டியிருந்தது என்பதை விளக்க இதுபோல நூற்றுக் கணக்கான சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
                                                                   ***
இவைகளையெல்லாம் நினைவுபடுத்துவது போலவும், பெரியார் தொண்டர்கள், திராவிட இயக்கத்தினர் சாதி ஒழிப்புக்காக, சமுதாய முன்னேற்றத்திற்காக, மனிதனை மனிதன் சுமக்கும் காட்டுமிராண்டித்தனத்தை ஒழிப்பதற்காக எத்தனை பாடுபட்டார்கள், அவர்கள் பட்ட பாடெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகி வீணாகி விடவில்லை. அவைகள் அனைத்தும் சுயமரியாதை இயக்கத்தினர் கண்ட கனவுகள் அனைத்தும், ஒன்றன் பின் ஒன்றாக நனவாகிக் கொண்டே இருக்கின்றன - நிறைவேறிக் கொண்டே இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டும் வகையில் தினகரன் நாளேட்டில் வந்த இரண்டு செய்திகள் அமைந்திருக்கின்றன.

அவற்றில் ஒன்று-

பார்ப்பனர்களை வாகனத்தில் வைத்து பார்ப்பனர் அல்லாதவர்கள் சுமக்கக் கூடாது, அது காட்டுமிராண்டித்தன காலத்தின் அடையாளம் என்று அன்று அய்யா சொன்னார்.

இன்று ஸ்ரீரங்கத்தில் - சாமியின் வாகனத்தை சூத்திரர்களே சுமந்து வர வேண்டும் என்று நீண்ட நெடுங்காலமாக இருந்த ஒரு காட்டுமிராண்டித் தனத்தை பார்ப்பனர்களே கூடி கை விட்டு விட்டார்கள் என்கிற செய்தி ஆகும்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானது. இங்கு கைசிக ஏகாதசி நாளில் கைசிக புராணம் வாசிப்பவர், அத்தியாயன ராப்பத்து உற்சவத்தில் சாற்றுமுறை நாளில் வேதபாராயணம் வாசிப்பவர், நம்பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளும் சமயம் பிரபந்தங்களை தாள இசையுடன் வாசிப்பவர் ஆகிய 3 பிரிவினருக்கும் பிரம்ம மரியாதை அந்தந்த விழா நிறைவு நாள் அன்று கொடுக்கப்பட்டு வந்தது.
பிரம்ம மரியாதையில் ஒன்று; புராணம் வாசிப்பவரை கோயிலில் இருந்து பல்லக்கில் தூக்கிச் சென்று வீட்டில் விடுவது.

கோயிலுக்குள் இறைவனைத்தான் பல்லக்கில் தூக்கிச்செல்ல வேண்டும். மனிதனை மனிதனே தூக்கிச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கடந்த மாதம் நடந்த அறங்காவலர் குழுக் கூட்டத்தில் பிரம்ம ரத மரியாதையில் கொடுக் கப்படும் மாலை, சந்தனம், ஆச்சார தீபம், பெருமாள் கொடை, யானை அழைத்துச் செல்லுதல் ஆகிய மரியாதைகளைத் தருதல் ஆகியவற்றில்,
கோயில் வளாகத்தில் பல்லக்கில் தூக்கிச் செல்லும் முறையை மட்டும் ரத்து செய்தல் என தீர்மானிக்கப்பட்டது.

கைசிக ஏகாதசி விழா நடைபெற்றது. இதில் வேத வியாசர் லட்சுமி நரசிம்ம பட்டர் மகன் செந்தாமரைக் கண்ணன் கைசிக புராணம் வாசித்தார். பின்னர், வீட்டுக்கு நடந்து சென்றார்.

இதன் மூலம் பல ஆண்டு காலமாக இருந்த பல்லக்கு முறை தடை செய்யப்பட்டு விட்டது.- என்பதே அந்தச் செய்தி.
அதே நாளேட்டில் வெளிவந்திருக்கிற இன்னொரு செய்தி.
""திருச்சியில் 25 ஆண்டுகளாக இருந்த தீண்டாமைச் சுவர் இடிப்பு என்பதாகும்.


அது வருமாறு :-
திருச்சியில் போலீஸ் பாதுகாப்புடன் சர்ச்சைக்குரிய சுவர் இடிக்கப்பட்டது.
""திருச்சி எடமலைப்பட்டிபுதூர் சக்திவேல் காலனியில் இருந்து பின்புறம் உள்ள முத்து மாரியம்மன் கோயில்தெருவுக்குச் செல்லும் பாதையில் 150 மீட்டர் நீளம், 9 அடி உயரத்தில் சுவர் அமைக்கப்பட்டிருந்தது. இது தீண்டாமைச் சுவர். இதை இடிக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அதே நேரத்தில் இந்த சுவர் தனியாருக்குச் சொந்தமானது. இதில் போக்குவரத்து நடை பெறவில்லை என்று மனிதநேய மக்கள் கட்சியினர் தெரிவித்தனர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி தொகுதி எம்.பி., லிங்கம், இந்த சுவரைப் பார்வையிட்டு தீண்டாமைச் சுவர் அல்ல என்று கூறினார்.
திருச்சி கலெக்டர் மகேசன் காசிராஜன் உத்தரவுப்படி, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலை சர்ச்சைக்குரிய அந்த சுவரை இடித்து போக்குவரத்துக்கு வழி செய்தனர். மாநகராட்சி தலைமைப் பொறியாளர் ராஜாமுகமது முன்னிலையில் சுவர் இடிக்கப்பட்டது. போலீஸ் துணை கமிஷனர்கள் ரூபேஸ்குமார் மீனா, தமிழ்ச்சந்திரன், உதவி கமிஷனர்கள் ஞான சேகரன், பழனிச்சாமி, சுந்தர்ராஜன் ஆகியோர் இருந்தனர். கமாண்டோ பிரிவு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மவுலானா கூறுகையில், ""இது தீண்டாமை சுவர், சுவர் இருந்த இடம் தாழ்த்தப் பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. 89ம் ஆண்டு வரை இந்த இடம் புது அரிஜனத் தெரு என்று தான் ரேஷன் கார்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்.பின்னர், திருத்தம் செய்யப்பட்டு முத்து மாரியம்மன் கோவில் தெரு என்று மாறியது. சுவரை இடிக்கக்கோரி 25 ஆண்டாகப் போராடி வந்தோம். இந்தச் சுவரினால் 5 தெருவை சேர்ந்த மக்கள் ஒன்றரை கி.மீ. சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது. சுவர் இடிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது"" என்றார்.

இடத்தின் உரிமையாளர் சம்சுகனி ராவுத்தரின் தம்பி மகன் அப்துல் ரஹ்மான் கூறுகை யில், ""சுவர் இடிக்கப்பட்டது பற்றி மதுரை உயர்நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்ய உள்ளோம்"" என்றார்.""- என்பதே அந்தச் செய்தி.
                                                                        ***
வாழ்க பெரியார், அண்ணா!
வெல்க அவர்களது பகுத்தறிவுக் கொள் கைகள்!!
வீழ்க மூட நம்பிக்கைகள்!!!
                                                    -சின்னகுத்தூசி
                                             நன்றி:முரசொலி(21-11-2010)

No comments:

Post a Comment