Search This Blog

Monday, 6 December 2010

ஓ.வி.அளகேசனின் ராஜினாமாவும் தினமணியின் அரசியல் அறியாமையும்!

பொய்ச் செய்திகளைப் பரப்புவதிலும், பொய்த்தகவல்கள் மட்டுமே நிரம்பிய புளுகு மூட்டைக்கட்டுரைகளைப் பிரசுரிப்பதிலும் தினமணி ஆசிரியருக்கு நிகராக வேறு யாரும் இருக்க முடியாது. அதுவும் தி.மு.க.வுக்கு எதிராக, முதல்வர் கலைஞருக்கு எதிராக - கலைஞர் குடும்பத்தினருக்கு எதிராக யாராவது கட்டுரை எழுதிக் கொடுத்தால் போதும். அந்தக் கட்டுரையிலுள்ள தகவல்கள் சரியா, தவறா என்று படித்துப் பார்க்காமலே பிரசுரித்து விடுவார் தினமணி ஆசிரியர்.

30.11.2010 செவ்வாயன்று - தலையங்கத்துக்குப்பக்கத்தில் ஒரு கட்டுரையை பிரசுரித் திருக்கிறார் அவர். அதிலே முந்த்ரா ஊழல் பற்றிய குற்றச்சாட்டு எழுப்பப்பட்டவுடனேயே அன்றைய மத்திய நிதிய மைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு - அடுத்த விமானத்திலேயே சென்னை திரும்பிவிட்டார் - என்று ஒரு புளுகை கட்டுரையாளர் அவிழ்த்துவிட்டிருந்தார். அது அப்பட்டமான பொய்த்தகவல் என்பதை மறுநாள் வந்த முரசொலி, நீதிபதி சாக்ளா கமிஷன் தீர்ப்பின் ஆதாரம் காட்டி மறுத்திருந்தது.
அதே கட்டுரையில் இன்னொரு புளுகு வருமாறு :- ""கருணாநிதிக்கு நினைவிருக்கும் அரியலூரில் கடும் மழையால் ஒரு ரயில் விபத்து. அன்றைக்குத் தமிழர் ஓ.வி.அளகேசன் ரயில்வே துணை அமைச்சர். அரியலூர் அளகேசா நீ ஆண்டது போதாதா என்று இதே கருணாநிதி கூக்குரல் எழுப்பினாரே, விபத்து நடந்த சிலமணி நேரங்களில் ரயில்வே அமைச்சர் பொறுப்பிலிருந்து பெரியவர் லால்பகதூர் சாஸ்திரியும், நம்மவர் ஓ.வி. அளகேசனும் பதவி விலகினார்களே; அவர்கள் தலித்துகளா?"" - என்று கேட்டிருக்கிறார் கட்டுரையாளர்.
 ஓ.வி.அளகேசன் எப்போது ராஜினாமா செய்தார் என்பது பற்றி கட்டுரையாளருக்கும் தெரியவில்லை; தினமணி ஆசிரியருக்கும் தெரியவில்லை. அதனால்தான் வரலாற்றையே திரிக்கும் இத்தகைய இமாலய புளுகுகள் தினமணியில் சிறப்பு கட்டுரைகள் என்ற பெயரால் வெளி யிடப்பட்டு வருகின்றன. ஓ.வி.அளகேசன் அரியலூர் ரயில் விபத்தின்போது தமது பதவியை ராஜினாமா செய்ய வில்லை. செய்யவே இல்லை.

அரியலூரில் மழை வெள்ளத்தில் சிக்கி இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு பெரிய ரயில் விபத்து ஏற் பட்டது. அதிலே பல நூற்றுக்கணக்கானவர்கள் ஆற்றில் மூழ்கி மாண்டு போனார்கள். அப்போது, மத்திய ரயில்வே துறை அமைச்சராக இருந்த (பின்னாளில் நேருவுக்கு பிறகு சுதந்திர இந்தியாவின் 2வது பிரதமராக பொறுப்பேற்ற) லால்பகதூர் சாஸ்திரி தமது பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார். ஆனால், நம்மவர் என்று தினமணி கட்டுரையாளரால் போற்றபட்டிருப்பவரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான ஓ.வி.அளகேசன் தமது பதவியை ராஜினாமா செய்ய வில்லை. அவர் பதவியில் நீடிக்கவே செய்தார். அதனால்தான் அடுத்து வந்த தேர்தலில் தி.மு.க.வினர் ""அரியலூர் அளகேசா நீங்கள் ஆண்டது போதாதா, மக்கள் மாண்டது போதாதா"" என்று சுவரொட்டிகள் அச்சடித்து தமிழகம் எங்கும் ஒட்டினார்கள்.

 அதன் பிறகு சில காலம் கழித்து, தமிழகத்தில் ‘மத்தியில் இந்தி மட்டும்தான் ஒரே ஆட்சி மொழி. ஆங்கிலம் துணை மொழியாக நீடிக்காது’ என்ற நடவடிக்கையை எதிர்த்து தமிழக முழுவதிலும் மாணவர்கள் ஏறத்தாழ 18 நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது முதல்வராக இருந்த பெரியவர் பக்தவச்சலத்தின் அரசு போராட்டம் நடத்திய மாணவர்மீது அடக்குமுறைகளை அவிழ்த்து விட்டது. தடியடிகள் நடத்தப்பட்டன. துப்பாக்கிச் சூடுகளும் சர்வ சாதாரணமாக நடத்தப்பட்டன. போலீசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பல மாணவர்கள் பலி ஆகினர். தடிஅடிக்கு ஆட்பட்டு பல நூறு பேர்கள் படுகாயமடைந்தார்கள். இத்தகைய சூழலில்தான், ""நாங்களும் தமிழ் ஆதரவாளர்களே; இந்திக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களே"" என்று கொதிப்புற்று கிடந்த தமிழர்களை எப்படியா வது சமாதானம் செய்யவேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தின் காரணமாக மத்திய அமைச் சரவையிலிருந்து சி.சுப்பிரமணியமும் ஓ.வி.அளகேசனும் ராஜினாமா செய்தார்கள்.

கட்டுரையாளர் தினமணியில் குறிப்பிடு வது போல அரியலூர் ரயில் விபத்து காரண மாக ஓ.வி.அளகேசன் தமது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்பதுதான் கல்மேல் எழுத்து போன்ற மறுக்க முடியாத உண்மையாகும். இப்படி அவர்கள் இருவரும் ராஜினாமா செய்ததை பெருந்தலைவர் காமராஜரோ, காங்கிரஸ் மேலிடமோ ஆதரிக்கவில்லை. அதன் காரணமாக அவர்கள் அடுத்த சில வாரங்களுக்கு உள்ளாகவே மீண்டும் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டு விட்டார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்க விஷயமாகும். ம்ம்ம் இதன்மூலம் தெளிவாகும் உண்மை என்ன? தி.மு.க.வையும், கலைஞரையும் தாக்கி யார் எதை எழுதி கொடுத்தாலும் தினமணி ஆசிரியர் தனக்கே உரிய தி.மு.க. துவேசம் கலைஞர் எதிர்ப்பு ஜெயலலிதா ஆதரவு என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில் யார் எதை எழுதி கொடுத்தாலும் அதை படித்துகூட பார்க்காமல் அதிலே உள்ள தகவல்கள் சரியா, தவறா என்று பரிசீலித்துக்கூட பார்க்காமல் அப்படியே அச்சிக்கு கொடுத்துவிடுவார். அந்த பேத்து மாத்துகள், புரளிகள், விஷம பிரச்சாரம் ஆகியவைகள் எல்லாம் அப்படியே தினமணியில் பிரசுரமாகிவிடும். இதுதான் தினமணியின் ""நடுநிலை"" பத்திரிகா தர்மம்!
- சின்னகுத்தூசி
முரசொலி:02-12-2010

No comments:

Post a Comment