தி.மு.க.வையும், கலைஞரையும் தாக்குவது என்றால் தினமணி ஆசிரியர் ஆர்.எஸ். வைத்தியனாத அய்யருக்கு ஏககுஷி. கலைஞர் மீது அவதூறு பொழிந்து யாராவது கட்டுரை எழுதிக் கொடுத்தால் - அவருக்குப் புல்லரிப்பும் புளகாங்கிதமும் ஏற்பட்டுவிடும். உடனே வாங்கி - அதைப் படிக்காமலே - அதிலே குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் சரியா? தவறா? உண்மையா - பொய்யா என்றுகூடப் பார்க்காமல் அச்சுக்குக் கொடுத்து விடுவார். அந்த அளவுக்கு அவர் ஒரு - தி.மு.க. துவேஷி - கலைஞர் விரோதி - ஜெயலலிதா பக்தர்
இதோ, இன்று (30.11.2010) செவ்வாய்க் கிழமை தினமணியில்கூட ஒரு கலைஞர் எதிர்ப்புக் கட்டுரையை தலையங்கத்துக்குப் பக்கத்தில் பிரசுரித்திருக்கிறார். ""2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து இரண்டாண்டு காலமாகப் பேசப்பட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அரசு மௌனம் சாதித்தும் பயனில்லாமல் சி.ஏ.ஜி. அறிக்கையால் அமைச்சர் பொறுப்பில் இருந்த தி.மு.க. அமைச்சர் ராசா விலகித் தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாடாளுமன்றமே நடக்காமல் திணறிக் கொண்டிருப் பதும், உச்சநீதிமன்றம் சி.பி.ஐ. அதிகாரிகளைப் பார்த்து நீங்கள் ஏன் அமைச்சராக இருந்த ராசாவை விசாரிக்க வில்லை என்று கேள்வி கேட்பதுமான சூழல். ஆனால், நமது முதல் வரோ அதுகுறித்து எந்த வருத்தமும் இன்றி எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் கூறாமல் தனது உளுத்துப்போன ஜாதிய விமர்சனங்களைத் தொடங்கிவிட்டார்.
மிகப்பெரிய பொய்யொன்றை வேலூரில் சொல்லியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி. முந்த்ரா ஊழல் வழக்கைப் பெரியவர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியாரின் ஊழல் என்கிறார். தனக்குச் சம்மந்தமே இல்லாத அந்த குற்றச்சாட்டு நேரு பிரானின் மருமகன் ஃபெரோஸ் காந்தியாலே நாடாளுமன்றத் தில் பேசப்பட்ட உடனேயே, தனது அமைச்சர் பதவியைத் துறந்தவர் டி.டி.கே. - நேரு சொல்லியும் கேட்க வில்லை. அடுத்த விமானத்தில் சென்னைக்கு வந்து விட்டார். முதல்வர் சொல்கிறார் - அவர் பதவியைத் துறந்தவுடன் விட்டுவிட்டார்களாம். காரணம், அவர் மேல்ஜாதிக்காரர். டி.டி.கிருஷ்ணமாச் சாரியார், ஆச்சாரியார். பெயரிலேயே ஆச்சாரி யார் என்று இருக்கிறது. அதாவது பிராமணர். ஆனால், ராசாவோ தலித். அதனால் தான் மேலும், மேலும் மேல்ஜாதிப் பத்திரிகைகளும், ஊடகங்களும் இதைப் பெரிதுபடுத்து கின்றன என்கிறார்.’’ - என்று எழுதியிருக்கிறார் தி.மு.க. எதிர்ப்பு எழுத்தாளர்.
அந்தக் கட்டுரையாளர் குறிப்பிட்டிருப்பதைப் போல ஊழல் குற்றச்சாட்டு எழுந்தவுடன் - தாமாக பதவியை உடனடியாக ராஜினாமா செய்தவரா டி.டி.கிருஷ்ணமாச்சாரி? நேருவின் மருமகனும், இந்திராகாந்தியின் கணவருமாகிய ஃபெரோஸ் காந்திதான் 1) முந்த்ரா ஊழல் பற்றி பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியவர் 2) தொழிலதிபர் முந்த்ரா ஏற்கனவே பல மோசடிகளில் சிக்கியவர் 3) அவரது பெயர் ""இனிமேல் இவருக்கு அரசாங்க காண்ட்ராக்டுகள் - லைசென்ஸ்கள் எதுவும் தரக்கூடாது"" - என்று மத்திய அரசு முந்த்ராவின் பெயரை பிளாக் லிஸ்டில் வைத்திருந்தது. 4) பிளாக் லிஸ்டில் உள்ள முந்த்ராவுக்கு - மத்திய நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் அரசு முடிவுக்கு எதிராக முந்த்ராவுக்கு சலுகை வழங்கினார் 5) ஆகவே டி.டி.கே. ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஃபெரோஸ் காந்தி குற்றச்சாட்டும் கோரிக்கையும் வைத்தார். இத்தனைக்கும் அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தான். தினமணி கட்டுரையாளர் கூறுவது போல, டி.டி.கே. உடனடியாகப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அடுத்த விமானத்தில் சென்னை திரும்பிவிட்டாரா? இல்லை; இல்லவே இல்லை! இது ஜமக் காளத்தில் வடிகட்டிய அப்பட்டமான பொய். டி.டி.கே. ராஜினாமா செய்யவில்லை. பிரதமர் நேருவும் அவரை ராஜினாமா செய்யச் சொல்லவில்லை. அந்த அளவுக்கு டி.டி.கே., பிரதமரின் நம்பிக்கைக்குரிய மந்திரி சபை சகாவாகத் திகழ்ந்தார். ஃபெரோஸ் காந்தி பிடிவாதமாய் தமது கோரிக்கையை அரசு ஏற்கவேண்டும் என்று வலியுறுத்தினார். சில எதிர்க்கட்சித் தலைவர் களும் அவரை ஆதரித்து நின்றனர்.
இறுதியில் - ""முந்த்ரா ஊழல் பற்றி விசாரிக்க மும்பை நீதிபதி எம்.சி. சாக்ளா தலைமையில் ஒரு நீதி விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்"" - என்று நேரு அறிவித்தார். சாக்ளா கமிஷன் விசாரணை நடந்தது. அதிலே டி.டி.கே.யை ஆஜர்படுத்தி விசாரணை செய்தார் சாக்ளா. விசாரணைக் கமிஷன் முன்பு ஆஜராகி ‘நடந்தது என்ன?’ என்பது பற்றி விளக்கமளித்த மத்திய நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் ""முந்த்ரா ஊழலில் எனக்கு எந்தவிதத் தொடர்புமில்லை, முந்த்ரா ஊழல் தொடர்பான கோப்புகளை நான் படித்ததில்லை. ஒருநாள் - நான் பம்பாய்க்கு (மும்பை) வந்திருந்தேன். அன்று நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. அந்த அவசரமும் நெருக்கடியும் மிகுந்த நேரத்தில் எனது நிதித்துறைச் செயலாளர் எச்.எம். பட்டேல் பல்வேறு கோப்புகளில் என்னிடம் கையெழுத்து வாங்கினார். அவரை நம்பி நான் படிக்காமலேயே கையெழுத்துப் போட்ட பல கோப்புகளிலே ஒன்றுதான் இந்த முந்த்ரா ஊழல் கோப்பு - என்று விளக்கம் அளித்தார் டி.டி.கே. ""நான் குற்றவாளி அல்ல. எனது செயலாளர்தான் இதற்குப் பொறுப்பு"" என்பது அவரது வாதமாக இருந்ததேயல்லாமல் அப்போதும் அவர் ஒன்றும் ராஜினாமா செய்யத் தயாராய் இல்லை. ""டி.டி.கே.யின் இந்த வாதத்தை நீதிபதி எம்.சி. சாக்ளா ஏற்கவில்லை. அமைச்சர்தான் பொறுப்பு"" என்று தீர்ப்பளித்தார். இதன் பிறகுதான் - நீதிபதி சாக்ளா தீர்ப்பின் அடிப்படையில்தான் டி.டி.கே. வேறு வழியின்றி பதவியை ராஜினாமா செய்தார்! தினமணி கட்டுரையாளர் கூறி இருப்பது போல் ஃபெரோஸ் காந்தி குற்றஞ்சாட்டினவுட னேயே அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு - அடுத்த விமானத்திலேயே சென்னை திரும்பிவிடவில்லை. அதனால் என்ன? டி.டி.கே. ராஜினாமா செய்த சில மாதங்களுக்குள்ளாகவே அவரை மீண்டும் மத்திய மந்திரி சபையில் பதவியில் அமர்த்தி விட்டார்கள் என்பது வேறு விஷயம்! எனினும் குற்றச்சாட்டு எழுந்த உடனேயே டி.டி.கே. பதவியை ராஜினாமா செய்துவிட்டு - அடுத்த விமானத்திலேயே சென்னை திரும்பி விட்டார் என்று வரலாற்றைத் திரிக்கும் புளுகுக் கட்டுரையை தினமணி ஆசிரியர் பிரசுரித்திருப்பது ஏன்?
டி.டி.கே. ‘படித்துப் பார்க்காமலே கோப்பில் கையெழுத்துப் போட்டுவிட்டேன்’ என்று கூறி யது போல, கட்டுரையைப் படித்துப் பார்க்காமலே பிரசுரித்துவிட்டேன் என்று தினமணி ஆசிரியர் கூறுவாரோ? அல்லது, ""படித்துப் பார்த்தேன் - புளுகுவதிலும் விஷமம் செய்வதிலும் இந்த ஆள் என்னை விடப் பல மடங்கு கில்லாடியாக இருப்பதைப் பாராட்டும் வகையில் - தவறு என்று தெரிந் தும் கட்டுரையை வெளியிட்டுவிட்டேன்"" என்று கூறுவாரோ! ஆரியரா கொக்கா?
-சின்னகுத்தூசி
நன்றி:முரசொலி(01-12-2010)
No comments:
Post a Comment