Search This Blog

Monday, 6 December 2010

ஆதிதிராவிடருக்கு எதிராக விஷமப் பிரச்சாரம் செய்யும் ‘தினமணி’ - ஆச்சாரியார் பற்றி அவிழ்த்து விட்டுள்ள புளுகு!

தி.மு.க.வையும், கலைஞரையும் தாக்குவது என்றால் தினமணி ஆசிரியர் ஆர்.எஸ். வைத்தியனாத அய்யருக்கு ஏககுஷி. கலைஞர் மீது அவதூறு பொழிந்து யாராவது கட்டுரை எழுதிக் கொடுத்தால் - அவருக்குப் புல்லரிப்பும் புளகாங்கிதமும் ஏற்பட்டுவிடும். உடனே வாங்கி - அதைப் படிக்காமலே - அதிலே குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் சரியா? தவறா? உண்மையா - பொய்யா என்றுகூடப் பார்க்காமல் அச்சுக்குக் கொடுத்து விடுவார். அந்த அளவுக்கு அவர் ஒரு - தி.மு.க. துவேஷி - கலைஞர் விரோதி - ஜெயலலிதா பக்தர்

இதோ, இன்று (30.11.2010) செவ்வாய்க் கிழமை தினமணியில்கூட ஒரு கலைஞர் எதிர்ப்புக் கட்டுரையை தலையங்கத்துக்குப் பக்கத்தில் பிரசுரித்திருக்கிறார். ""2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து இரண்டாண்டு காலமாகப் பேசப்பட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அரசு மௌனம் சாதித்தும் பயனில்லாமல் சி.ஏ.ஜி. அறிக்கையால் அமைச்சர் பொறுப்பில் இருந்த தி.மு.க. அமைச்சர் ராசா விலகித் தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாடாளுமன்றமே நடக்காமல் திணறிக் கொண்டிருப் பதும், உச்சநீதிமன்றம் சி.பி.ஐ. அதிகாரிகளைப் பார்த்து நீங்கள் ஏன் அமைச்சராக இருந்த ராசாவை விசாரிக்க வில்லை என்று கேள்வி கேட்பதுமான சூழல். ஆனால், நமது முதல் வரோ அதுகுறித்து எந்த வருத்தமும் இன்றி எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் கூறாமல் தனது உளுத்துப்போன ஜாதிய விமர்சனங்களைத் தொடங்கிவிட்டார்.

 மிகப்பெரிய பொய்யொன்றை வேலூரில் சொல்லியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி. முந்த்ரா ஊழல் வழக்கைப் பெரியவர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியாரின் ஊழல் என்கிறார். தனக்குச் சம்மந்தமே இல்லாத அந்த குற்றச்சாட்டு நேரு பிரானின் மருமகன் ஃபெரோஸ் காந்தியாலே நாடாளுமன்றத் தில் பேசப்பட்ட உடனேயே, தனது அமைச்சர் பதவியைத் துறந்தவர் டி.டி.கே. - நேரு சொல்லியும் கேட்க வில்லை. அடுத்த விமானத்தில் சென்னைக்கு வந்து விட்டார். முதல்வர் சொல்கிறார் - அவர் பதவியைத் துறந்தவுடன் விட்டுவிட்டார்களாம். காரணம், அவர் மேல்ஜாதிக்காரர். டி.டி.கிருஷ்ணமாச் சாரியார், ஆச்சாரியார். பெயரிலேயே ஆச்சாரி யார் என்று இருக்கிறது. அதாவது பிராமணர். ஆனால், ராசாவோ தலித். அதனால் தான் மேலும், மேலும் மேல்ஜாதிப் பத்திரிகைகளும், ஊடகங்களும் இதைப் பெரிதுபடுத்து கின்றன என்கிறார்.’’ - என்று எழுதியிருக்கிறார் தி.மு.க. எதிர்ப்பு எழுத்தாளர்.

 அந்தக் கட்டுரையாளர் குறிப்பிட்டிருப்பதைப் போல ஊழல் குற்றச்சாட்டு எழுந்தவுடன் - தாமாக பதவியை உடனடியாக ராஜினாமா செய்தவரா டி.டி.கிருஷ்ணமாச்சாரி? நேருவின் மருமகனும், இந்திராகாந்தியின் கணவருமாகிய ஃபெரோஸ் காந்திதான் 1) முந்த்ரா ஊழல் பற்றி  பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியவர் 2) தொழிலதிபர் முந்த்ரா ஏற்கனவே பல மோசடிகளில் சிக்கியவர் 3) அவரது பெயர் ""இனிமேல் இவருக்கு அரசாங்க காண்ட்ராக்டுகள் - லைசென்ஸ்கள் எதுவும் தரக்கூடாது"" - என்று மத்திய அரசு முந்த்ராவின் பெயரை பிளாக் லிஸ்டில் வைத்திருந்தது. 4) பிளாக் லிஸ்டில் உள்ள முந்த்ராவுக்கு - மத்திய நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் அரசு முடிவுக்கு எதிராக முந்த்ராவுக்கு சலுகை வழங்கினார் 5) ஆகவே டி.டி.கே. ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஃபெரோஸ் காந்தி குற்றச்சாட்டும் கோரிக்கையும் வைத்தார். இத்தனைக்கும் அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தான். தினமணி கட்டுரையாளர் கூறுவது போல, டி.டி.கே. உடனடியாகப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அடுத்த விமானத்தில் சென்னை திரும்பிவிட்டாரா? இல்லை; இல்லவே இல்லை! இது ஜமக் காளத்தில் வடிகட்டிய அப்பட்டமான பொய். டி.டி.கே. ராஜினாமா செய்யவில்லை. பிரதமர் நேருவும் அவரை ராஜினாமா செய்யச் சொல்லவில்லை. அந்த அளவுக்கு டி.டி.கே., பிரதமரின் நம்பிக்கைக்குரிய மந்திரி சபை சகாவாகத் திகழ்ந்தார். ஃபெரோஸ் காந்தி பிடிவாதமாய் தமது கோரிக்கையை அரசு ஏற்கவேண்டும் என்று வலியுறுத்தினார். சில எதிர்க்கட்சித் தலைவர் களும் அவரை ஆதரித்து நின்றனர்.

இறுதியில் - ""முந்த்ரா ஊழல் பற்றி விசாரிக்க மும்பை நீதிபதி எம்.சி. சாக்ளா தலைமையில் ஒரு நீதி விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்"" - என்று நேரு அறிவித்தார். சாக்ளா கமிஷன் விசாரணை நடந்தது. அதிலே டி.டி.கே.யை ஆஜர்படுத்தி விசாரணை செய்தார் சாக்ளா. விசாரணைக் கமிஷன் முன்பு ஆஜராகி ‘நடந்தது என்ன?’ என்பது பற்றி விளக்கமளித்த மத்திய நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் ""முந்த்ரா ஊழலில் எனக்கு எந்தவிதத் தொடர்புமில்லை, முந்த்ரா ஊழல் தொடர்பான கோப்புகளை நான் படித்ததில்லை. ஒருநாள் - நான் பம்பாய்க்கு (மும்பை) வந்திருந்தேன். அன்று நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. அந்த அவசரமும் நெருக்கடியும் மிகுந்த நேரத்தில் எனது நிதித்துறைச் செயலாளர் எச்.எம். பட்டேல் பல்வேறு கோப்புகளில் என்னிடம் கையெழுத்து வாங்கினார். அவரை நம்பி நான் படிக்காமலேயே கையெழுத்துப் போட்ட பல கோப்புகளிலே ஒன்றுதான்  இந்த முந்த்ரா ஊழல் கோப்பு - என்று விளக்கம் அளித்தார் டி.டி.கே. ""நான் குற்றவாளி அல்ல. எனது செயலாளர்தான் இதற்குப் பொறுப்பு"" என்பது அவரது வாதமாக இருந்ததேயல்லாமல் அப்போதும் அவர் ஒன்றும் ராஜினாமா செய்யத் தயாராய் இல்லை. ""டி.டி.கே.யின் இந்த வாதத்தை நீதிபதி எம்.சி. சாக்ளா ஏற்கவில்லை. அமைச்சர்தான் பொறுப்பு"" என்று தீர்ப்பளித்தார். இதன் பிறகுதான் - நீதிபதி சாக்ளா தீர்ப்பின் அடிப்படையில்தான் டி.டி.கே. வேறு வழியின்றி பதவியை ராஜினாமா செய்தார்! தினமணி கட்டுரையாளர் கூறி இருப்பது போல் ஃபெரோஸ் காந்தி குற்றஞ்சாட்டினவுட னேயே அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு - அடுத்த விமானத்திலேயே சென்னை திரும்பிவிடவில்லை. அதனால் என்ன? டி.டி.கே. ராஜினாமா செய்த சில மாதங்களுக்குள்ளாகவே அவரை மீண்டும் மத்திய மந்திரி சபையில் பதவியில் அமர்த்தி விட்டார்கள் என்பது வேறு விஷயம்! எனினும் குற்றச்சாட்டு எழுந்த உடனேயே டி.டி.கே. பதவியை ராஜினாமா செய்துவிட்டு - அடுத்த விமானத்திலேயே சென்னை திரும்பி விட்டார் என்று வரலாற்றைத் திரிக்கும் புளுகுக் கட்டுரையை தினமணி ஆசிரியர் பிரசுரித்திருப்பது ஏன்?

 டி.டி.கே. ‘படித்துப் பார்க்காமலே கோப்பில் கையெழுத்துப் போட்டுவிட்டேன்’ என்று கூறி யது போல, கட்டுரையைப் படித்துப் பார்க்காமலே பிரசுரித்துவிட்டேன் என்று தினமணி ஆசிரியர் கூறுவாரோ? அல்லது, ""படித்துப் பார்த்தேன் - புளுகுவதிலும் விஷமம் செய்வதிலும் இந்த ஆள் என்னை விடப் பல மடங்கு கில்லாடியாக இருப்பதைப் பாராட்டும் வகையில் - தவறு என்று தெரிந் தும் கட்டுரையை வெளியிட்டுவிட்டேன்"" என்று கூறுவாரோ! ஆரியரா கொக்கா?
-சின்னகுத்தூசி
நன்றி:முரசொலி(01-12-2010)

ஓ.வி.அளகேசனின் ராஜினாமாவும் தினமணியின் அரசியல் அறியாமையும்!

பொய்ச் செய்திகளைப் பரப்புவதிலும், பொய்த்தகவல்கள் மட்டுமே நிரம்பிய புளுகு மூட்டைக்கட்டுரைகளைப் பிரசுரிப்பதிலும் தினமணி ஆசிரியருக்கு நிகராக வேறு யாரும் இருக்க முடியாது. அதுவும் தி.மு.க.வுக்கு எதிராக, முதல்வர் கலைஞருக்கு எதிராக - கலைஞர் குடும்பத்தினருக்கு எதிராக யாராவது கட்டுரை எழுதிக் கொடுத்தால் போதும். அந்தக் கட்டுரையிலுள்ள தகவல்கள் சரியா, தவறா என்று படித்துப் பார்க்காமலே பிரசுரித்து விடுவார் தினமணி ஆசிரியர்.

30.11.2010 செவ்வாயன்று - தலையங்கத்துக்குப்பக்கத்தில் ஒரு கட்டுரையை பிரசுரித் திருக்கிறார் அவர். அதிலே முந்த்ரா ஊழல் பற்றிய குற்றச்சாட்டு எழுப்பப்பட்டவுடனேயே அன்றைய மத்திய நிதிய மைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு - அடுத்த விமானத்திலேயே சென்னை திரும்பிவிட்டார் - என்று ஒரு புளுகை கட்டுரையாளர் அவிழ்த்துவிட்டிருந்தார். அது அப்பட்டமான பொய்த்தகவல் என்பதை மறுநாள் வந்த முரசொலி, நீதிபதி சாக்ளா கமிஷன் தீர்ப்பின் ஆதாரம் காட்டி மறுத்திருந்தது.
அதே கட்டுரையில் இன்னொரு புளுகு வருமாறு :- ""கருணாநிதிக்கு நினைவிருக்கும் அரியலூரில் கடும் மழையால் ஒரு ரயில் விபத்து. அன்றைக்குத் தமிழர் ஓ.வி.அளகேசன் ரயில்வே துணை அமைச்சர். அரியலூர் அளகேசா நீ ஆண்டது போதாதா என்று இதே கருணாநிதி கூக்குரல் எழுப்பினாரே, விபத்து நடந்த சிலமணி நேரங்களில் ரயில்வே அமைச்சர் பொறுப்பிலிருந்து பெரியவர் லால்பகதூர் சாஸ்திரியும், நம்மவர் ஓ.வி. அளகேசனும் பதவி விலகினார்களே; அவர்கள் தலித்துகளா?"" - என்று கேட்டிருக்கிறார் கட்டுரையாளர்.
 ஓ.வி.அளகேசன் எப்போது ராஜினாமா செய்தார் என்பது பற்றி கட்டுரையாளருக்கும் தெரியவில்லை; தினமணி ஆசிரியருக்கும் தெரியவில்லை. அதனால்தான் வரலாற்றையே திரிக்கும் இத்தகைய இமாலய புளுகுகள் தினமணியில் சிறப்பு கட்டுரைகள் என்ற பெயரால் வெளி யிடப்பட்டு வருகின்றன. ஓ.வி.அளகேசன் அரியலூர் ரயில் விபத்தின்போது தமது பதவியை ராஜினாமா செய்ய வில்லை. செய்யவே இல்லை.

அரியலூரில் மழை வெள்ளத்தில் சிக்கி இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு பெரிய ரயில் விபத்து ஏற் பட்டது. அதிலே பல நூற்றுக்கணக்கானவர்கள் ஆற்றில் மூழ்கி மாண்டு போனார்கள். அப்போது, மத்திய ரயில்வே துறை அமைச்சராக இருந்த (பின்னாளில் நேருவுக்கு பிறகு சுதந்திர இந்தியாவின் 2வது பிரதமராக பொறுப்பேற்ற) லால்பகதூர் சாஸ்திரி தமது பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார். ஆனால், நம்மவர் என்று தினமணி கட்டுரையாளரால் போற்றபட்டிருப்பவரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான ஓ.வி.அளகேசன் தமது பதவியை ராஜினாமா செய்ய வில்லை. அவர் பதவியில் நீடிக்கவே செய்தார். அதனால்தான் அடுத்து வந்த தேர்தலில் தி.மு.க.வினர் ""அரியலூர் அளகேசா நீங்கள் ஆண்டது போதாதா, மக்கள் மாண்டது போதாதா"" என்று சுவரொட்டிகள் அச்சடித்து தமிழகம் எங்கும் ஒட்டினார்கள்.

 அதன் பிறகு சில காலம் கழித்து, தமிழகத்தில் ‘மத்தியில் இந்தி மட்டும்தான் ஒரே ஆட்சி மொழி. ஆங்கிலம் துணை மொழியாக நீடிக்காது’ என்ற நடவடிக்கையை எதிர்த்து தமிழக முழுவதிலும் மாணவர்கள் ஏறத்தாழ 18 நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது முதல்வராக இருந்த பெரியவர் பக்தவச்சலத்தின் அரசு போராட்டம் நடத்திய மாணவர்மீது அடக்குமுறைகளை அவிழ்த்து விட்டது. தடியடிகள் நடத்தப்பட்டன. துப்பாக்கிச் சூடுகளும் சர்வ சாதாரணமாக நடத்தப்பட்டன. போலீசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பல மாணவர்கள் பலி ஆகினர். தடிஅடிக்கு ஆட்பட்டு பல நூறு பேர்கள் படுகாயமடைந்தார்கள். இத்தகைய சூழலில்தான், ""நாங்களும் தமிழ் ஆதரவாளர்களே; இந்திக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களே"" என்று கொதிப்புற்று கிடந்த தமிழர்களை எப்படியா வது சமாதானம் செய்யவேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தின் காரணமாக மத்திய அமைச் சரவையிலிருந்து சி.சுப்பிரமணியமும் ஓ.வி.அளகேசனும் ராஜினாமா செய்தார்கள்.

கட்டுரையாளர் தினமணியில் குறிப்பிடு வது போல அரியலூர் ரயில் விபத்து காரண மாக ஓ.வி.அளகேசன் தமது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்பதுதான் கல்மேல் எழுத்து போன்ற மறுக்க முடியாத உண்மையாகும். இப்படி அவர்கள் இருவரும் ராஜினாமா செய்ததை பெருந்தலைவர் காமராஜரோ, காங்கிரஸ் மேலிடமோ ஆதரிக்கவில்லை. அதன் காரணமாக அவர்கள் அடுத்த சில வாரங்களுக்கு உள்ளாகவே மீண்டும் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டு விட்டார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்க விஷயமாகும். ம்ம்ம் இதன்மூலம் தெளிவாகும் உண்மை என்ன? தி.மு.க.வையும், கலைஞரையும் தாக்கி யார் எதை எழுதி கொடுத்தாலும் தினமணி ஆசிரியர் தனக்கே உரிய தி.மு.க. துவேசம் கலைஞர் எதிர்ப்பு ஜெயலலிதா ஆதரவு என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில் யார் எதை எழுதி கொடுத்தாலும் அதை படித்துகூட பார்க்காமல் அதிலே உள்ள தகவல்கள் சரியா, தவறா என்று பரிசீலித்துக்கூட பார்க்காமல் அப்படியே அச்சிக்கு கொடுத்துவிடுவார். அந்த பேத்து மாத்துகள், புரளிகள், விஷம பிரச்சாரம் ஆகியவைகள் எல்லாம் அப்படியே தினமணியில் பிரசுரமாகிவிடும். இதுதான் தினமணியின் ""நடுநிலை"" பத்திரிகா தர்மம்!
- சின்னகுத்தூசி
முரசொலி:02-12-2010

Wednesday, 1 December 2010

குத்தூசி குருசாமியும் கறுப்புச்சட்டை சாமியாரும் ஸ்ரீரங்கத்து பட்டர்களும்!

19.11.2010 வெள்ளியன்று வெளிவந்த ‘தினகரன்’ நாளிதழில் ஒரே பக்கத்தில் இரண்டு செய்திகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அந்த இரண்டு செய்திகளுமே,
கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக அய்யாவின் கரம் தொட்டு, அண்ணாவின் வழி நடந்து வரும் சுயமரியாதை இயக்கப் பெரியவர்கள், அனைவருக்கும் சிந்தையெலாம் தேனாக இனிக்கும் செய்திகள்.

அந்தச் செய்திகள் என்ன என்பதைப் பற்றி பரிசீலிக்கும் முன்பு சுயமரியாதை இயக்கத் தின், திராவிடர் இயக்கத்தின் தொடக்கக் காலத்திலும், அதன் வளர்ச்சிக்காலத்திலும். சமுதாயத்தில் மண்டிக் கிடந்த மூட நம்பிக்கைகளை - சாதி வேற்றுமைகளை, ஆகமம் சாஸ்திரம் என்ற பெயரால் வேரோடிக் கிடந்த விஷ விருட்சங்களை களையவும் அகற்றவும் எத்தகைய - துணிச்ச லோடு பாடுபட வேண்டியிருந்தது; பாடுபட்டது என்பதை ஓரிரு சம்பவங்கள் மூலம் நினைவு படுத்திக் கொள்வது பொறுத்தமாயிருக்கும்.

சுயமரியாதை இயக்கம் தொடங்கி 6, 7 ஆண்டுகளே இருக்கும். தந்தை பெரியார் அவர்கள் தொடக்கக் காலத்தில் இருந்தே கோயில்கள், மதங்கள், கடவுள் நம்பிக்கை ஆகியவற்றை குறிவைத்து இடைவிடாது, அவருக்கு இழைக்கப்பட்ட இடர்ப்பாடுகளுக்கு நடுவிலும், தமிழக மக்களை விழிப்புணர்வு அடையும் விதத்தில் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வந்தார்.

கோவில், கடவுள் ஆகியவை பற்றிப் பேசிய அவர்,
""திருவிழாக் காலங்களில் சாமியின் வாகனத்தை கடவுள் பக்தி என்ற பெயரால் தூக்கும் சூத்திர மக்களே, அந்த வாகனத்தில் குருக்கள்கள், பட்டர்கள் என்கிற பார்ப்பனர்களை யும் வைத்து சுமக்கிறீர்களே, ஏன் பட்டர்களும் குருக்கள்களும் கூட நீங்கள் கும்பிடும் சாமிகளா? எந்த பார்ப்பனராவது இதுபோல உங்களைப்போல சாமி தூக்க வருகிறார் களா? நீங்கள் மட்டும் சாமி பக்தி என்ற பெயரால் பார்ப்பன பட்டர்களையும், குருக்கள் களையும் சேர்த்து தோளில் சுமக்கிறீர்களே, வெட்கமாக இல்லையா உங்களுக்கு?"" என்று கேட்பவர்கள் ஆவேசம் கொள்ளும் படியாக உரத்த குரலில் கேட்பார்.

1928-ம் ஆண்டு திருவல்லிக்கேணியில் உற்சவம் நடந்தது.
கருட வாகனத்தில் பார்த்தசாரதி பெருமாள் ஆரோகணித்து வர அதிலே பார்ப்பன பட்டர் களும் அமர்ந்திருந்தார்கள்.

கருட வாகனம் 3-ஆம் வீதியை அடைந்த போது வாகனத்தில் அமர்ந்திருந்த பட்டர்கள், வாகனத்தைச் சுமக்க முடியாமல் சுமந்துவந்த சூத்திரர்களை நோக்கி இழித்தும் பழித்தும் பேசி அதட்டி உருட்டி மிரட்டினார்கள்.
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா! வாகனத்தை சுமந்து வந்த தோழர்கள் பட்டர்களின் தகாத சொற்களைக் கேட்டு அளவு கடந்த ஆத்திரம் அடைந்தார்கள்.அவ்வளவுதான்!

வாகனத்தை நடு வீதியில் பொத் என்று போட்டு விட்டார்கள். ""அய்யரே, இனிமேல் நாங்கள் இந்த வாகனத்தைச் சுமக்க மாட்டோம். நீங்களே இனி இதை சுமந்து கொண்டு போய் கோவிலில் இறக்குங்கள். இனி ஒரு போதும் உங்களை எல்லாம் வைத்து சுமக்க ஒப்புக் கொள்ள மாட்டோம்"" என்று சொல்லி விட்டு தரையில் அமர்ந்திருந்தார்கள்.

எத்தனை எத்தனையோ பேர் வந்து அவர்களை சமாதானப்படுத்தினார்கள். எனினும் அவர்கள் அசைந்து கொடுக்க வில்லை.
சில மணிநேரம் வரையில் அவர்களை சமாதானப்படுத்த ஊர்ப் பெரியவர் பலரும் ஒன்று கூடி படாத பாடுபட்டார்கள். அதன் பிறகே பெருமாளின் கருட வாகனம் கோயிலுக்குப் போய்ச் சேர்ந்தது.
                                                                              ***
தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் சப்பஸ்தான பல்லக்கு விழா ஆண்டுதோறும் நடை பெறுவது வழக்கம். ஏழு வேறு வேறு ஊர்களில் இருந்து சாமிகளை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருவையாற்றுக்கு கொண்டு வருவார்கள். 7 பல்லக்கில் வரும் அந்த 7 சாமிகளை தரிசித்து புண்ணியம் பெறுவதற்காக ஏராளமான பக்தர்கள் அங்கே கூடு வார்கள்.

ஒரு சமயம் திருவையாற்றுக்கு பொதுக் கூட்டம் பேச ""விடுதலை"" ஆசிரியரும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளருமான குத்தூசி சா.குருசாமி வந்தார். அவர் அந்தக் கூட்டத்தில் பேசும் போது,
""இந்த நவீன யுகத்திலும் பார்ப்பனர்களை பல்லக்கில் வைத்து சுமக்கலாமா? எந்தப் பார்ப் பனராவது இந்தக் காரியத்தை செய்ய வருகிறார்களா?
மனிதனை மனிதன் வைத்து சுமக்கும் இது அநாகரீகம் அல்லவா, காட்டுமிராண்டித்தனம் அல்லவா?
நான் ஒன்றைச் சொல்லுகிறேன் கேளுங்கள், இந்த வருடம் சப்பஸ்தான பல்லக்குகள் இந்த ஊருக்கு வரும்போது பல்லக்கை சுமக்கிறவர்கள் ஆற்றுப் பாலத்தில் வரும்போது சாமியையும் பல்லக்கையும் அதில் ஏறிவரும் பட்டர்களையும் ஆற்றுக்குள் அப்படியே கவிழ்த்து விடுங்கள். அப்போதுதான், "" மனிதனை மனிதனே சுமக்கும் இந்த காட்டு மிராண்டிப் பழக்கம் அடியோடு ஒழியும்"" - என்று முழக்கமிட்டார் குத்தூசி குருசாமி.
அதற்கு அன்று அவருக்குக் கிடைத்த பரிசு என்ன தெரியுமா?
ஆறுமாத கடுங்காவல் சிறைத் தண்டனை.
                                                                             ***
திருவாரூரில் ஒரு சாமியார் இருந்தார். அவர் யார்? எந்த ஊரில் இருந்துவந்தார்? - என்ப தெல்லாம் யாருக்கும் தெரியாது.
அவர் எப்போதும் கருப்புச் சட்டையே அணிந்திருந்ததால் அவரை எல்லோரும் கறுப்புச் சட்டை சாமியார் என்று தான் அழைப்பார்கள்.

அவர் கையிலே ஓர் தனி தார்ச் சட்டியையும் ஒரு பிரஸ்ஸையும் கையில் வைத்துக் கொண்டு ‘கண்ணில் பட்ட சுவர்களில் எல்லாம்’ கடவுள் இல்லை என்பது போன்ற பெரியார் பொன் மொழிகளை எழுதுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். ஒரு சமயம் திருவாரூர் குமர கோயிலில் கந்த சஷ்டியை ஒட்டி சூரசம்ஹாரத் திருவிழா நடந்தது. அப்போது சாமியை மயில் வாகனத்தின் மீது வைத்து தூக்கிக் கொண்டு துர்க்கை அம்மன் அருகில் வந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கறுப்புச் சட்டை சாமியார் தன் மடியில் மறைத்து வைத்திருந்த சாணி, சேறு, சகதி ஆகியவைகளை எடுத்து சாமியின் முகத்திலும் அவருக்கு பக்கத்திலே அமர்ந்திருந்த ஆசாமியின் முகத்திலும் வீசிவிட்டார்.அவருக்குக் கிடைத்த பரிசும் ஆறு மாத
சிறை வாச தண்டனைதான்.

மூட நம்பிக்கைகளை ஒழிக்க சாஸ்திரம், சம்பிரதாயம், ஆகமம் என்ற பெயர்களால் சமூகத்தில் உயர் ஜாதி மக்கள் நடத்தி வந்த அக்கிரமங்களை, அநியாயங்களை ஒழிப்பதற்காக எத்தகைய தியாகத் தழும்புகளை சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந் தவர்கள் பெற வேண்டியிருந்தது என்பதை விளக்க இதுபோல நூற்றுக் கணக்கான சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
                                                                   ***
இவைகளையெல்லாம் நினைவுபடுத்துவது போலவும், பெரியார் தொண்டர்கள், திராவிட இயக்கத்தினர் சாதி ஒழிப்புக்காக, சமுதாய முன்னேற்றத்திற்காக, மனிதனை மனிதன் சுமக்கும் காட்டுமிராண்டித்தனத்தை ஒழிப்பதற்காக எத்தனை பாடுபட்டார்கள், அவர்கள் பட்ட பாடெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகி வீணாகி விடவில்லை. அவைகள் அனைத்தும் சுயமரியாதை இயக்கத்தினர் கண்ட கனவுகள் அனைத்தும், ஒன்றன் பின் ஒன்றாக நனவாகிக் கொண்டே இருக்கின்றன - நிறைவேறிக் கொண்டே இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டும் வகையில் தினகரன் நாளேட்டில் வந்த இரண்டு செய்திகள் அமைந்திருக்கின்றன.

அவற்றில் ஒன்று-

பார்ப்பனர்களை வாகனத்தில் வைத்து பார்ப்பனர் அல்லாதவர்கள் சுமக்கக் கூடாது, அது காட்டுமிராண்டித்தன காலத்தின் அடையாளம் என்று அன்று அய்யா சொன்னார்.

இன்று ஸ்ரீரங்கத்தில் - சாமியின் வாகனத்தை சூத்திரர்களே சுமந்து வர வேண்டும் என்று நீண்ட நெடுங்காலமாக இருந்த ஒரு காட்டுமிராண்டித் தனத்தை பார்ப்பனர்களே கூடி கை விட்டு விட்டார்கள் என்கிற செய்தி ஆகும்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானது. இங்கு கைசிக ஏகாதசி நாளில் கைசிக புராணம் வாசிப்பவர், அத்தியாயன ராப்பத்து உற்சவத்தில் சாற்றுமுறை நாளில் வேதபாராயணம் வாசிப்பவர், நம்பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளும் சமயம் பிரபந்தங்களை தாள இசையுடன் வாசிப்பவர் ஆகிய 3 பிரிவினருக்கும் பிரம்ம மரியாதை அந்தந்த விழா நிறைவு நாள் அன்று கொடுக்கப்பட்டு வந்தது.
பிரம்ம மரியாதையில் ஒன்று; புராணம் வாசிப்பவரை கோயிலில் இருந்து பல்லக்கில் தூக்கிச் சென்று வீட்டில் விடுவது.

கோயிலுக்குள் இறைவனைத்தான் பல்லக்கில் தூக்கிச்செல்ல வேண்டும். மனிதனை மனிதனே தூக்கிச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கடந்த மாதம் நடந்த அறங்காவலர் குழுக் கூட்டத்தில் பிரம்ம ரத மரியாதையில் கொடுக் கப்படும் மாலை, சந்தனம், ஆச்சார தீபம், பெருமாள் கொடை, யானை அழைத்துச் செல்லுதல் ஆகிய மரியாதைகளைத் தருதல் ஆகியவற்றில்,
கோயில் வளாகத்தில் பல்லக்கில் தூக்கிச் செல்லும் முறையை மட்டும் ரத்து செய்தல் என தீர்மானிக்கப்பட்டது.

கைசிக ஏகாதசி விழா நடைபெற்றது. இதில் வேத வியாசர் லட்சுமி நரசிம்ம பட்டர் மகன் செந்தாமரைக் கண்ணன் கைசிக புராணம் வாசித்தார். பின்னர், வீட்டுக்கு நடந்து சென்றார்.

இதன் மூலம் பல ஆண்டு காலமாக இருந்த பல்லக்கு முறை தடை செய்யப்பட்டு விட்டது.- என்பதே அந்தச் செய்தி.
அதே நாளேட்டில் வெளிவந்திருக்கிற இன்னொரு செய்தி.
""திருச்சியில் 25 ஆண்டுகளாக இருந்த தீண்டாமைச் சுவர் இடிப்பு என்பதாகும்.


அது வருமாறு :-
திருச்சியில் போலீஸ் பாதுகாப்புடன் சர்ச்சைக்குரிய சுவர் இடிக்கப்பட்டது.
""திருச்சி எடமலைப்பட்டிபுதூர் சக்திவேல் காலனியில் இருந்து பின்புறம் உள்ள முத்து மாரியம்மன் கோயில்தெருவுக்குச் செல்லும் பாதையில் 150 மீட்டர் நீளம், 9 அடி உயரத்தில் சுவர் அமைக்கப்பட்டிருந்தது. இது தீண்டாமைச் சுவர். இதை இடிக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அதே நேரத்தில் இந்த சுவர் தனியாருக்குச் சொந்தமானது. இதில் போக்குவரத்து நடை பெறவில்லை என்று மனிதநேய மக்கள் கட்சியினர் தெரிவித்தனர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி தொகுதி எம்.பி., லிங்கம், இந்த சுவரைப் பார்வையிட்டு தீண்டாமைச் சுவர் அல்ல என்று கூறினார்.
திருச்சி கலெக்டர் மகேசன் காசிராஜன் உத்தரவுப்படி, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலை சர்ச்சைக்குரிய அந்த சுவரை இடித்து போக்குவரத்துக்கு வழி செய்தனர். மாநகராட்சி தலைமைப் பொறியாளர் ராஜாமுகமது முன்னிலையில் சுவர் இடிக்கப்பட்டது. போலீஸ் துணை கமிஷனர்கள் ரூபேஸ்குமார் மீனா, தமிழ்ச்சந்திரன், உதவி கமிஷனர்கள் ஞான சேகரன், பழனிச்சாமி, சுந்தர்ராஜன் ஆகியோர் இருந்தனர். கமாண்டோ பிரிவு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மவுலானா கூறுகையில், ""இது தீண்டாமை சுவர், சுவர் இருந்த இடம் தாழ்த்தப் பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. 89ம் ஆண்டு வரை இந்த இடம் புது அரிஜனத் தெரு என்று தான் ரேஷன் கார்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்.பின்னர், திருத்தம் செய்யப்பட்டு முத்து மாரியம்மன் கோவில் தெரு என்று மாறியது. சுவரை இடிக்கக்கோரி 25 ஆண்டாகப் போராடி வந்தோம். இந்தச் சுவரினால் 5 தெருவை சேர்ந்த மக்கள் ஒன்றரை கி.மீ. சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது. சுவர் இடிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது"" என்றார்.

இடத்தின் உரிமையாளர் சம்சுகனி ராவுத்தரின் தம்பி மகன் அப்துல் ரஹ்மான் கூறுகை யில், ""சுவர் இடிக்கப்பட்டது பற்றி மதுரை உயர்நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்ய உள்ளோம்"" என்றார்.""- என்பதே அந்தச் செய்தி.
                                                                        ***
வாழ்க பெரியார், அண்ணா!
வெல்க அவர்களது பகுத்தறிவுக் கொள் கைகள்!!
வீழ்க மூட நம்பிக்கைகள்!!!
                                                    -சின்னகுத்தூசி
                                             நன்றி:முரசொலி(21-11-2010)

தி.மு.க. செல்வாக்கு சரிந்துவிட்டது என்று சாதிக்க முனையும் அ.தி.மு.க. ஆதரவு ஏட்டின் தந்திர விமர்சனம்!

ஆ.ராசா பதவி விலகல் மூலம் தி.மு.க.வின் செல்வாக்கு டெல்லியில் சரிந்துவிட்டதாம். அதை மீண்டும் மீட்டெடுக்க அது என்ன செய்யப் போகிறது என்பதும் இப்போது பரவலாக எழுந்துள்ள கேள்வியாம்! - தினமணி நாளேடு 20.11.2010 சனிக்கிழமை யன்று ஒரு முழு நீள செய்தி விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.

 தி.மு.க. செல்வாக்கு சரிகிறது என்று சாதிப்பதற்காகவே - வி.பி.சிங் காலத்தில் தி.மு.க. செல்வாக்கு எவ்வளவு தெரியுமா? - ஐ.கே.குஜ்ரால் காலத்தில் அதன் செல்வாக்கு இமயத்தையே தொட்டுவிட்டது தெரியுமா? - வாஜ்பாய் காலத்து தி.மு.க. செல்வாக்கு - எவரெஸ்ட் சிகரத்தில் கொடி பறக்கவிடும் அளவிலானது! - என்றெல்லாம் பாரா பாராவாக பழம் பெருமைகள் என்று ஒரு பட்டியலையே தயாரித்து வெளியிட்டிருக்கிறது!

 தினமணியில் துக்ளக்சோ - ஆடிட்டர் குருமூர்த்தி சிபாரிசின் பேரில் என்றைக்கு ஆர்.எஸ்.எஸ்.சைச்சேர்ந்த வைத்தியநாத அய்யர் ஆசிரியப்பொறுப்பேற்றாரோ அன்று முதலே தினமணி தி.மு.க. எதிர்ப்பு ஜெயலலிதா ஆதரவு பா.ஜ.க. ஆதரவு ஏடாக மாறிவிட்டது என்பது எல்லோரும் அறிந்த விஷயம்! தி.மு.க.வை நாள் தவறாமல் தாக்குவதையும் அ.தி.மு.க.வின் கொடநாடு குறட்டை பற்றி பக்கம் பக்கமாக புகழ்ந்து போற்றுவதையும் அன் றாடக் கடமையாகக் கொண்டுள்ள தினமணி, இப்படி திடீரென்று, தி.மு.க.வின் பழம் பெருமைகளைப் பட்டியலிட்டு, அய்யோ அப்பேர்ப் பட்ட தி.மு.க.வின் செல்வாக்கு இப்படி சரிந்து விட்டதே என்று முதலைக்கண்ணீர் வடிக்கிறதே; ஏன்? அதில்தான் இருக்கிறது சூட்சுமம்! இப்படியெல்லாம் புகழ்வது போலப் புகழ்ந்து - தி.மு.க. செல்வாக்கு இழந்துவிட்டது என்று வாசகர்கள் மனதில் ஒரு பிரமையை உருவாக்க முயலுகிறது அது!
                                                                       ***
திராவிட முன்னேற்ற கழகம் 1949ல் தொடங்கப்பட்டது. அது தன்னை திராவிட முன்னேற்றக் கழகம் என்று அறிமுகப்படுத்தும் போதே அதற்கு அகில இந்திய செல்வாக்கைவிட திராவிட முன்னேற்ற கழகமே பெரிது என்பதை எடுத்து காட்டுவதாக இருந்தது. அது ஒருபோதும் தன்னை அகில இந்தியாவாக அடையாளம் காட்டிக் கொள்ள முயன்றதே இல்லை. எல்லா விஷயங்களிலும் அகில இந்தியாவுக்கும் வழிகாட்டும் இயக்கமாகவே அது தன்னை அடையாளம் காட்டிக்கொண்டதே அல்லாமல் ‘அகில இந்தியா’வாக அது தன்னை ஒரு போதும் காட்டிக்கொள்ள முயன்றதில்லை. எனினும் தி.மு.க. தொடங்கப்பட்ட அந்த நாளிலிருந்து இன்றுவரை, அகில இந்தியக்கட்சிகளும் வியப்பும் பிரமிப்பும் அடையும் வகையில்தான் இயங்கி வருகிறது.

கட்சியின் முன்னேற்றத்தின் ஒவ்வொரு படியிலும் - எடுத்து வைத்த அடியிலும் தி.மு.கழகம் சந்தித்த அடக்குமுறைகள் கொடுமைகள்- ஒவ்வொரு போராட்டத்திலும் அது ஏற்றுக் கொண்ட தழும்புகள் - இந்தியா முழுவதிலுமுள்ள பல்வேறு கட்சிகளும் பார்த்து - பின்பற்றுவதற்குரியதாகவே இருந்தது. தினமணி கூறுவதுபோல் - எத்தகைய சரிவினாலும் தி.மு.க. மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்ததே இல்லை.
1949 முதல் இன்று வரையிலான அதன் வளர்ச்சி என்பது பல்வேறு அதற்கு ஏற்படுத்தப்பட்ட பல்வேறு நெருக்கடிகள், வழங்கப்பட்ட தண்டனைகள் - அடக்கு முறைகளிலிருந்தும் அது மீண்டும் எழுந்து சிங்க நடைபோடும் தன்மை உடைய தாகவே இருந்து வருகிறது.
 1950 களில் - குலக் கல்வி திட்ட எதிர்ப்பு - கல்லக்குடி போராட்டம் - நான்சென்ஸ் - கண்டன ரயில் நிறுத்தப் போராட்டம் ஆகிய மும்முனை போராட்டங் களை அது நடத்தியபோது, தி.மு.க.வை மூட்டைபூச்சி நசுக்குவது போல நசுக்கி காட்டுவேன் என்று சட்ட சபையிலேயே முதலமைச்சர் ராஜாஜி சூளுரைத்தார். ஆனால், மும்முனை போராட்டத் தின்போது அவரது ஆட்சி அவிழ்த்து விட்ட பல்வேறு கொடுமைகளையும் மீறி தி.மு.க. அகில இந்திய செல்வாக்கு மட்டுமின்றி உலகப் புகழை அடைந்தது.  அப்போது அமெரிக்காவில் இருந்து வெளி வரும் ‘நியூயார்க் டைம்ஸ், தி.மு.க. போராட் டத்தை பற்றி உயர்வாக செய்தி வெளியிட்டது. அதன்பின்னர் நடைபெற்ற விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்டத்தின் போது அண்ணா உட்பட அனைத்து தலைவர்களும், தொண்டர்களும் ஆறுமாதம் , ஒரு வருடம் என்று சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்தனர். அந்த நிலையிலும் காமராஜர் ஆட்சியில் நடந்த திருவண்ணாமலை சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.கழகம் மகத்தான வெற்றி பெற்றது. அதனால் தான் பெருந்தலைவர் காமராஜர் ‘கே.பிளான்’ என்ற பெயரால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஆனார். அதற்கு மூல காரணம் தி.மு.க.வின் வளர்ச்சி தான் என்று அகில இந்தியாவும் தி.மு.க.வின் பலம் குறித்து வியந்து எழுதின. இதன்மூலம் தி.மு.க.வை அடக்கி ஒடுக்க முயன்றால் அது முன்னிலும் பலமடங்கு பலத் தோடு எழுந்து நிற்கும் என்பது தெளிவானது.
தி.மு.கழகம் 1965ல் மத்தியில் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்பதை எதிர்க்கும் வகையில் குடியரசு தினத்தை துக்க நாள் என்று அறிவித்தது. அதனையொட்டி மாணவர்கள் கிளர்ந்து எழுந்து நடத்திய வீரம் செறிந்த போராட்டம் அகில இந்திய அரசியலை குலுக்கிய போராட்டம் ஆகும். அப்போது சிங்கத் தமிழன் சின்னசாமி உள்ளிட்ட பல பேர் தாய் மொழிகாக்க தங்கள் மீது தாங்களே பெட்ரோலையும், மண் ணெண்ணை யையும் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தங்களது இன்னுயிரையே மாய்த்துக்கொண்டது என்பது தமிழ் மொழி வரலாற்றுல் தமிழக வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப் பட்ட தியாக வரலாறு ஆகும். அந்த போராட்டத்தின்போது தமிழகம் முழுவதும் தி.மு.க.வை இதன் மூலம் ஒழித்தே கட்டி விடுவது என்பது போல அடக்குமுறை அவிழ்த்து விடப்பட்டது. எனினும் அடக்கு முறை கள் முதுகெலும்பு ஒடிந்து முறிந்து விழுந்தன.  ""பிரதமர் நேரு இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரையில் மத்தியில் இந்தியுடன் ஆங்கிலமும் துணை ஆட்சி மொழியாக நீடிக்கும்"" என்று தமது வாக்குறுதிக்கு சட்ட வடிவம் வழங்கினார். தி.மு.க. வின் செல்வாக்கை அடக்க அடக்க ஒடுக்க ஒடுக்க அது முன்னை விட பலமாக வளரும் என்பது இதன்மூலம் மீண்டும் ஒரு முறை நிருபணம் ஆகியது.
 இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்குப் பின்னர் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றிப் பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அவசர நிலை மத்தியில் பிரகடனப்படுத்தப்பட் டது. அந்த காலக் கட்டத்தில் தி.மு.க.வின் தலைவர்கள், தொண்டர்கள், முக்கியஸ்தர்கள் ஆகியவர்கள் 500க்கும் மேற்பட்டவர் களை மத்திய அரசு ""மிசா"" சட்டத்தின் கீழ் கைது செய்து வழக்கு போட்டு ஜாமீனில்கூட வெளிவர முடியாது என்கிற நிலையில் காராகிருகத்தில் அடைத்தது.  அதே சமயம் கலைஞர், தி.மு.க. தலைவர் கள் ஆகியோரது நற்பெயருக்கு புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர்கள் மீது ஊழல் முத்திரை குத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தின் அடிப்படையிலேயே சர்க்காரியா கமிஷன் என்கிற ஒரு விசாரனைக் கமிஷனை நியமித்தது அன்றைய மத்திய அரசு.
 அந்த காலக்கட்டத்தில் அவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகள், போலீஸ் கொடுமை களை கண்டு தி.மு.க.வில் இருந்த வெகு சில பயந்த சுபாவம் உடையவர்கள், "" நாங்கள் தி.மு.க. அல்ல"" என்று பத்திரிகையிலேயே விளம்பரங் கள்கூட கொடுத்தார்கள். அப் போது தி.மு.க. எதிர்ப் பாளர்கள் எல்லாம் இத்தோடு தி.மு.க. கதை முடிந்து விட்டது என்று கணக்கிட்டு பரவச கூத்தாடினார்கள். ஆனால் அவர்களது கனவு பகல் கனவாயிற்று.
1977-ல் எம்.ஜி.ஆர். முதல்வர் ஆனார். அவர் பதவியேற்ற நாள் முதலே தி.மு.க.வை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விட்டார். தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கலைஞர் அடிக்கல் நாட்டி திறந்து வைத்த கட்டிடங்கள் எதுவாக ஆனாலும் அவைகளில் கலைஞர் பெயர் இருக்கக்கூடாது என்று கலைஞர் பெயர் கொண்ட கல்வெட்டுகளை எல்லாம் இடித்து அகற்றினார். கலைஞர் பெயர் வைக்கப்பட்ட கட்டிடங்களில் இருந்து அவர் பெயரை அகற்றி அவற்றுக்கு வேறு பெயர்களைச் சூட்டினார். அவரது ஆட்சிக் காலத்தில் ஈழத்தமிழர்களுக்காக தி.மு. கழகம் பல்வேறு போராட்டங் களை நடத்தியது. அப்போது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்கு போட்டு சிறையில் அடைத்தார். 86-ல் நடைபெற்ற மொழிப் போரில் கலைஞரையும் அவர் விட்டு வைக்கவில்லை. கலைஞர் தனது இல்லத்திலிருந்து புறப்பட்டு சில அடி தூரம் வந்தபோதே அவரை கைது செய்து சிறையில் அடைத்தார். சிறையில் கலைஞருக்கு சிறைக் கைதிகளுக்கு அளிக்கப்படும் ஆடையையே அணிய வேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்கள்.
இப்படி எம்.ஜி.ஆர். ஆட்சியில் தி.மு.க.வை ஒழிக்க அடுக்கடுக்கான கொடுமைகள் தி.மு.க. மீது ஏவப்பட்டன என்றாலும் தி.மு.க. ஒன்றும் ஒழிந்து போய் விடவில்லை. அதன் செல்வாக்கு ஒன்றும் சரிந்து போய்விட வில்லை.  இத்தனை கொடுமைகளுக்கு நடுவிலும் எம்.ஜி.ஆர். ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட் சித் தேர்தலில் தி.மு.கழகம் வரலாறு காணாத வகையில் எம்.ஜி.ஆர். கட்சியை வீழ்த்தி வெற்றி பெற்று தி.மு.க.வை யாரும் ஒழித்து விடமுடியாது. தி.மு.க.வின் செல்வாக்கு ஒரு போதும் சரிந்து விடாது என்பதை நிரூபித்துக் காட்டியது.
 1991-லும் 2001 - லும் நடைபெற்ற தேர்தல் களில் ஜெயலலிதா வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காலத்திலும் இதுபோல தான் தி.மு.க. எதிர்பாளர்கள் இனி தி.மு.க. எழ முடியாது என்று நினைத்தார்கள். ஆனால் நடந்தது என்ன 1989 தேர்தலிலும் தி.மு.க. வெற்றி முரசு கொட்டி ஆட்சியை கைப்பற்றியது. அதன் பிறகு 1996-ல் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலிலும் தி.மு.க.வே அபார வெற்றி பெற்றது. மீண்டும் 2006-ல் நடந்த தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்று கலைஞர் 5-வது முறையாக முதல் அமைச்சர் ஆனார்.

2011 தேர்தலிலும் அவரே வெற்றி பெற்று 6-வது முறையாகவும் முதல் அமைச்சர் ஆவார் என்பதே பெரும்பான்மையான வர்களின் கணிப்பாக இருந்து வருகிறது. ம்ம்ம் எனவே; தி.மு.கழகம் ராசாவின் பதவி விலகலால் செல்வாக்கு இழந்துவிட்டது என மக்களை நம்ப வைக்க தினமணி போன்ற ஜெயலலிதா ஆதாரவாளர்கள் நடத்தும் பொய் பிரச்சாரங்கள் எல்லாம் ஒரு போதும் நிறைவேறாது.

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.
   என்கிற பொய்யா மொழியார் வள்ளுவப் பெருந்தகையின் வாசகத்திற்கேற்ப - எத்தனை இடர்ப்பாடுகள் - இன்னல்கள் - துன்பங்கள், துயரங்களை சந்திக்க நேர்ந்தாலும் அவைகளை எல்லாம் தி.மு.கழகம் சந்தித்து சமாளித்து அடுத்த வெற்றியை நோக்கி நடை போடுமே தவிர, அது ஒருபோதும் வீழ்ந்து விடாது;

தனது செல்வாக்கினை இழந்து விடாது; அடிக்க அடிக்க எழும் பந்துபோல  அரைக்க அரைக்க மணக்கும் சந்தனம் போல முன்னைவிட பல்லாயிரம் மடங்கு வேகத் துடனும் புகழுடனும் அது மக்கள் பேராதரவைப் பெற்று வெற்றி முரசு கொட்டும் என்பதையே மேற்கண்ட தி.மு.க.வின் கடந்த காலம் ‘தினமணி’களுக்கு எடுத்துக்காட்டுகிறது!
-சின்னகுத்தூசி
நன்றி:முரசொலி (22-11-2010)

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?

""அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா வெறும் அம்பு தான், அம்பை எய்தவரின் பதவி விரைவில் பறிக்கப்படும்"" - என்று மண்டை கொழுத்துப்போன நிலையில் ஜெயலலிதா அறிக்கை விட்டிருக்கிறார்.

எய்தவர் என்று அவர் யாரைக்குறிப்பிடுகிறார்? எந்தப் பிரச்சினையானாலும் அதற்குக் காரணம் கருணாநிதிதான் என்று கலைஞர்மீது நக்கலும் நையாண்டியும் பொங்க சேறு வாரி இறைப்பது அவரது வாடிக்கை. அதனால்தான் அவரது பக்த கோடியான தினமணி வைத்தினாத அய்யர் - அந்த அறிக்கைக்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொடுத்து - எல்லோரும் எய்தவர் கலைஞர் தான் என்று நினைக்கும் படியாகத் தலைப்பிட்டு பிரசுரித் திருக்கிறார்.

கலைஞரின் பதவியைப் பறிக்குமளவுக்கு அவர் என்ன குற்றமிழைத்து விட்டார்?
 - வருமானத்துக்கு அதிகமாக; லஞ்சம் ஊழல் மூலமாக வசூல் கொள்ளையடித்து சொத்து குவித்துவிட்டார் என்று அவர் மீது ஏதாவது வழக்கு நடைபெறுகிறதா?
- வருமான வரிக்கணக்கை காட்டாமல் - வரி ஏய்ப்புச்செய்ததாக கலைஞர்மீது வழக்கு நடைபெற்று வருகிறதா?
 - பிறந்த நாள் பரிசு என்ற பெயரில் அந்நியச்செலாவணி மோசடி செய்ததாக சி.பி.ஐ. வழக்குத் தொடர்ந்து இருக்கிறதா? -
எனினும் கலைஞரின் பதவி விரைவில் பறிக்கப்படும் என்று தனது நாற்றம் பிடித்த வாயால் ஜெய லலிதா - கலைஞரை, தி.மு.க. தொண்டர்களை வம்புக்கு இழுக்கிறாரே; ஏன்?
ஜெயலலிதாவுக்கு வன்முறை அதாவது காலித்தனம், கலவரத்தைத்தூண்டி வன்முறை நடத்துவதில் அபார நம்பிக்கை உண்டு. வன்முறை மூலமே தான் நினைக்கிற காரியங்களை நிறைவேற்றிவிடலாம் என் பதில் அசைக்க முடியாத நம்பிக்கை படைத்தவர் அவர். காலித்தனத்தைக் கட்டவிழ்த்து விட அவர் கையாளும் இன்னொரு சாதனம் - வாய் கூசாது அன்டப்புளுகுகளை, ஆகாசப் புளுகுகளை அவிழ்த்துக் கொட்டுவதிலும் வாய் தேர்ந்தவர்தான் அவர். கடந்த காலத்தில் அவர் கட்டவிழ்த்த பொய்களையும் காலித்தனங்களையும் பட்டியிலிட நினைத்தால் ஒரு குறு நூலே எழுதி விடலாம்.

- எம்.ஜி.ஆர்.- தனது வளர்ச்சியைக்கண்டு பொறாமைப்படுவதாக டெல்லிக்குக் கடிதம் எழுதினார்.
  - எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. அணி - ஜா அணி, ஜெ அணி என்று இரண்டா கப் பிளவுபட்டுக்கிடந்தபோது - சேலம் பொருட்காட்சித்திடலில் பேசிய ஜெயலலிதா, ஜானகி அம்மையாரை ""சாராய வியாபாரிகளோடு சரச சல்லாபத்தில் ஈடு பட்டவர்"" என்று நாராச நடையில் ஏசினார்.
 - ""எம்.ஜி.ஆர். இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு பட அதிபர் எம்.ஜி.ஆரைச் சந்தித்து - ஒரு தியேட்டரை வாங்குவதற்காக ஒண்ணேகால் கோடி பணம் கொடுத்தார். எம்.ஜி.ஆர். இறந்ததும் அந்தப்பெருந்தொகையை எடுத்துக்கொண்டு போய், ராமச்சந்திரா பல்கலைக்கழகக்கட்டிடத்தின் அடியில் உள்ள பாதாள அறையில் வி.என். ஜானகி பதுக்கி விட்டார் என்றார்

ஜெயலலிதா. - ஜெ.அணியில் தன்னிடம் கருத்து வேறுபாடு கொண்ட 4 அடுத்தக்கட்ட தலை வர்களை தெருநாய்கள் என்றார்.
 - நாவலரை ‘‘எனது உடம்பிலிருந்து உதிர்ந்த ரோமம்"" என்றார்.
 - 93 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட ஜா அணி - சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவந்தபோது 32 எம்.எல்.ஏ.க்களே கொண்ட தனது அணி ஜெயிக்காது - ஜானகி அம்மையார் வெற்றி பெற்றுவிடுவார் என்பதற்காக - சட்ட மன்றத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விட ஏற்பாடு செய்து - சட்ட மன்றத்தில் போலீஸ் தடியடி நடத்துமளவுக்கு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட பின்புலனாயிருந்து - ஜானகி ஆட்சியை டிஸ்மிஸ் செய்வதில் வெற்றி பெற்றார்.
 வன்முறை மூலம் ஒரு ஆட்சியையே கவிழ்க்கலாம் - என்ற அவரது காலித்தனத்திற்கு அதுவே முதல் வெற்றியைத் தந்தது. அன்று அவரது வன்முறை மனோபாவத்திற்குக்கிடைத்த வெற்றி - இன்று வரையில் அவரைக் காலித்தனத்தின் நாயகியாக தொடர வைத்திருக்கிறது.
 எம்.ஜி.ஆர். மறைவிற்குப்பின் நடந்த முதல் சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி படு தோல்வி அடைந்தது. வழக்கம் போல் ஆட்சி யைக் கவிழ்க்க திட்டமிட்டார் (திருநாவுக் கரசரே சாட்சி) சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞர் நிதிநிலை அறிக்கையைப் படிக்க எழுந்த போது ""குத்துடா அவனை"" - என்று கூக்குரலிட்டார். அவ்வளவுதான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஒருவர் - முதல்வரின் முகத்தில் குத்து விட்டார், கையிலிருந்த பட்ஜெட் காகிதங்க ளைக் கிழித்து காற்றில் பறக்கவிட்டார். அவ்வளவுதான் சட்டமன்றம் அமளிமய மாயிற்று. ஜெயலலிதா தலையைப் பிரித்துப்போட்டுக்கொண்டு, ‘ஐயோ என் சேலையைப்பிடித்து இழுத்து அவமானப்படுத்தி விட்டார்கள்’ என்று நீலிக்கண்ணீர் வடித்தபடியே சட்ட சபையிலிருந்து ஓட்டமெடுத்தார்.
- இந்த இரண்டாவது நிகழ்வின் மூலமும் ஜெயலலிதா - ஆட்சியை வன்முறை - பொய் மூலம் கவிழ்த்து விடவே முயன்றார். ஆனால் இம் முறை அவரது பொய் பலிக்கவில்லை. எனினும், புலிகளுக்கு ஆதரவான அரசு என்ற புரளி யைக் கிளப்பிவிட்டு அன்று குடியரசுத் தலைவ ராக இருந்த வெங்கட்ராமன் என்ற பார்ப்பனரின் உதவியோடு தி.மு.க. ஆட்சியைக் கவிழ்ப்பதில் வெற்றி பெற்று விட்டார். வன்முறை பொய்கள் மூலம் நினைத்ததை முடிக்கலாம் ஆட்சியையே கூட கவிழ்க்கலாம் - என்ற அவரது நச்சுத் தன்மை கொண்ட அவரது நம்பிக்கை மேலும் வலு பெற்றது அவரிடம்.
 1991ம் ஆண்டு தேர்தலில் ராஜீவ்காந்தி மரணம் காரணமாக எழுந்த அனுதாப அலையில் அவர் முதலாக ஆட்சிக்கு வந்து விட்டார். அவ்வளவுதான் - தன்னை விமர்சித்தவர்களை எல்லாம் பொய்கள் - வன்முறைகள் மூலம் ஒடுக்க முற்பட்டார் அவர்.
- சந்திரலேகா என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் முகத்தில் திராவகம் வீசப்பட்டது. - விஜயன் என்ற வக்கீலின் கால் வெட்டப்பட்டது.
- சண்முகசுந்தரம் என்ற வக்கீலின் கை விரல்கள் துண்டிக்கப்பட்டன.
- அன்று தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த சேஷன் விமான நிலையத்திலிருந்து வெளியே வர முடியாமல் 700க்கு மேற்பட்ட பயங்கர ஆயுதங்களுடன் கூடிய ஆட்டோக் கள் மூலம் 9 மணி நேரம் முற்றுகையிடப்பட்டது.
- சேஷன் தங்கியிருந்த தாஜ் ஓட்டல் அடித்து நொறுக்கப்பட்டது.
- மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின்மீது வன்முறை ஏவிவிடப்பட்டு அவரது கார் அடித்து நொறுக்கப்பட்டது.
- வழக்கு மன்றத்திற்கு வந்த சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக ஆயிரக்கணக்கான பெண்கள் துணியைத்தூக்கி - திவ்ய தரிசனம் காட்டினார்கள்.
- கவர்னர் சென்னாரெட்டி - தனிமையில் இருக்கும்போது என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று சட்டமன்றத்திலேயே துணிந்து புளுகினார் ஜெயலலிதா.
- உயர்நீதிமன்ற நீதிபதியின் மருமகன் கஞ்சா விற்றதாக பொய் வழக்குப்போடப்பட்டது.
 - கவர்னர் சென்னாரெட்டியின் காரை - புதுச்சேரி செல்லும் சாலையில் மறித்து அடித்து நொறுக்கினார்கள்.
- அருணாசலம் என்கிற தாழ்த்தப்பட்ட வகுப்பினைச்சேர்ந்த மத்திய அமைச்சரை - ""நான் பயணம் செய்யும் விமானத்தில் வரக்கூடாது"" என்று கூறி விமானத்திலிருந்து இறக்கி விட்டார் ஜெயலலிதா.
- எம்.ஜி.ஆரின் விசுவாசத்துக்குரிய ஊழியரான முத்துவை கஞ்சா வழக்கில் கைது செய்து சிறையிலடைத்தார்.
 இப்படி சொல்லிக்கொண்ட போகலாம் அடுக்கடுக்காக! இவைகளைப் பட்டியலிட்டுக் காட்ட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் அனைவரது கவனத்திற்கும் உரியது. எதையும் வன்முறை மூலம் சாதிக்கலாம். பொய், காலித்தனம் மூலம் ஆட்சியையே கவிழ்த்துவிடலாம் என்பது ஜெயலலிதாவின் நெடுநாள் நம்பிக்கை. அந்த அடிப்படையில்தான் எய்தவர் பதவியும் விரைவில் பறிக்கப்படும். என்று வாய்க்கொழுப்பு சேலையில் வடிய வடிய ஆணவத்துடன் அறிக்கை விட்டிருக்கிறார்.
 இந்தத்தீய எண்ணத்துடன்தான் அவர் கோவை - திருச்சி - மதுரை கூட்டங்களில் ‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது - என்று விஷமப் பிரச்சாரம் செய்தார். இதிலிருந்து அவரது நஞ்சு கலந்த நெஞ்சில் - தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை குலைக்கும் வரையில் வன்முறையைத் தூண்டிவிட ஏதோ ஒரு சூது நிழலாடிக் கொண்டிருக்கிறது. விரைவில் வன்முறை வெறியாட்டங்களைத்தூண்டிவிட்டு அதன்மூலம் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றுகூறி ஆட்சியையே கவிழ்த்துவிடலாம் - என்று அவர் நம்புகிறார் என்பது தெரிகிறது.
 நண்டு கொழுத்தால் வளையில் இருக்காது என்பார்கள்.
 மண்டை ரொம்பவும் கொழுத்து விட்டது ஜெயலலிதாவுக்கு.
 வெளியே வந்து விட்டார் விஷம் தோய்ந்த வஞ்சகத்திட்டங்களுடன்! அவரை ஆதரிக்கும் பார்ப்பன பேனாக்கள் எல்லாம் ""ஆகா, ஜெயலலிதாவின் திறமைதான் என்னே என்னே"" என்று வியந்து பாராட்டி எழுதலாம்; ஆனால் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. லட்சோபலட்சம் தி.மு.க.காரர்கள் ஜெயலலிதாவின் பேச்சையும் நடவடிக்கை களையும் கூர்ந்து கவனித்த படியேதான் இருக்கிறார்கள்.
அவர்களிடம் கேட்டால் என்ன சொல்லுவார்கள்
கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?
- என்று சவால் விடமாட்டார்களா என்ன?
                                                    - சின்னகுத்தூசி
                                                நன்றி:முரசொலி(23-11-2010)

‘ஸ்பெக்ட்ரம்’ விசாரணையும் பார்ப்பன ஊடகங்களின் விஷமப் பிரச்சாரங்களும் நீதிபதிகளின் வருத்தமும்!

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது. இந்த வழக்கு டெல்லியில் உள்ள தன்னார் வத் தொண்டு நிறுவனம் ஒன்றினால் தொடரப் பட்ட வழக்கு. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன வென்றால்;
1) இந்த வழக்கின் குற்றவாளிகள் என்று யார் பெயரையும் சுட்டிக் காட்டவில்லை.
 2) இன்னார்தான் குற்றமிழைத்தவர் என்று கூறி - அவரை விசாரித்துத் தண்டிக்க வேண் டும் என்று வழக்குப் போட்ட மனுதாரர்கள் குறிப்பிட்டுக்காட்டவேயில்லை.
 3) ஸ்பெக்ட்ரம் விநியோகத்தில் முறைகேடுகள் - ஒழுங்கீனங்கள் நடந்திருக்கின்றன. அதற்குக் காரணமானவர்கள் யார் என்று விசாரித்து - அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்திரவிடவேண்டும். -   என்பதுதான் மனுதாரர்களின் கோரிக்கை ; வழக்கு.

 இந்த வழக்கை நீதிபதிகள் ஏ.கே.கங்கூலி, ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் விசாரித்து வருகிறார் கள். இந்த வழக்கோடு - மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா மீது ஸ்பெக்ட்ரம் தொடர்பாக வழக்குத் தொடர அனுமதி தருமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று சுப்பிர மணியசுவாமி தொடுத்த வழக்கும் விசாரிக்கப் பட்டு வருகிறது. ""ராசா மீது வழக்குத் தொடர அனுமதி தரவேண்டும் என்று கோரி பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன். அதற்கு 16 மாதங்கள் கழித்து கால தாமதமாக பிரதமர் அலுவலகத் திலிருந்து எனக்குக் கடிதம் வந்தது"" - என்பது சுப்பிரமணிய சுவாமியின் குற்றச்சாட்டு. இந்த வழக்குகளின் விசாரணையின்போது (17.10.2010) மத்திய அரசின் சார்பில் வழக்கில் ஆஜர் ஆன வழக்கறிஞர் - இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலான கோபால் சுப்பிர மணியத்தைப் பார்த்து நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினார்கள்.
அது பற்றிய சுருக்கமான தகவல் வருமாறு:-
 இந்தப் புகார் தொடர்பான வழக்கு விசாரணையில் சி.பி.ஐ. மெத்தனமாகச் செயல்பட்டு வருவதாக, நீதிபதிகள் ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்தனர். இந்த நிலையில், 16ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, வழக்கு தொடர்ந்த நிறுவனத்தின் வக்கீல் பிரசாந்த் பூஷன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக வெளியான மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை சுட்டிக் காட்டப்பட்டு இருந்தது. பின்னர் வழக்கு விசாரணை செவ்வாய்க் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 16-ந் தேதி விசாரணையின்போது, ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து மத்திய மந்திரி ஆ.ராசா மீது வழக்குத் தொடருவதற்கு அனுமதி கேட்டு, முன்னாள் மத்திய சட்ட மத்திரியும், ஜனதா கட்சித் தலைவருமான சுப்பிரமணியசாமியின் கோரிக்கை மீது முடிவு எடுப்பதில் பிரதமர் மன்மோகன் சிங் நீண்ட காலம் தாமதம் செய்தது ஏன்? என்ற கேள்வி யை மத்திய அரசின் வக்கீல் (சொலிசிட்டர் ஜெனரல்) கோபால் சுப்பிரமணியத்திடம் நீதி பதிகள் எழுப்பினார்கள்.

அதுகுறித்து நீதிபதிகள் கூறியதாவது:- ‘வழக்குத் தொடருவதற்கு சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி அளிக்க வேண்டிய உரிய அதிகார மையம் (இந்த வழக்கில் பிரதமர்) அந்தக் கோரிக்கையை பரிசீலிக்காமல் கிடப் பில் போட்டதா? நியாயமான ஒரு அரசுக்கு இதற்கு 3 மாத அவகாசம் போதும் என்ற உச்சநீதி மன்ற விதிமுறை தெளிவாக உள்ளது. இதுகுறித்து அவர் அட்டர்னி ஜெனரலிடம் கேட்டு தெரிந்து கொண்டு இருக்கலாம். ஆனால், தற்போது ஏறத்தாழ 16 மாதங்கள் ஆகிவிட்டன. 2008ஆம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி அன்று சுப்பிரமணியசாமி கொடுத்த புகாரின்பேரில், 2009ஆம் ஆண்டு அக் டோபர் 21-ந் தேதி அன்று, பெயர் குறிப்பிடாத நபர்களின் பெயரில் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்கிறது’ - என்பதாகும். பொதுவாக வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் இருதரப்பு வக்கீல்களிடமும் பல் வேறு சந்தேகங்களை எழுப்புவதுண்டு. சில சமயங்களில் நீதிபதிகளின் குரலில் கோபமும் கொப்பளிப்பதுண்டு. ஆனால் அப்படி அவர்கள் விசாரணையின் போது கேட்கும் கேள்விகள் - அல்லது விமர் சனங்கள் ஒருபோதும் அவர்களது இறுதித் தீர்ப்பில் இடம் பெறுவதில்லை. அந்த வார்த்தைகள் சொற்பிரயோகங்கள் எல்லாம்
தீர்ப்புகள் அல்ல; Observations மட்டுமே.
                                                                          ***
 ஆனால் ஸ்பெக்ட்ரம் வழக்கின்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறிய இரண்டு வாக்கி யங்களை நமது பார்ப்பன ஏடுகளும், ஊடகங்களும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டன.
1) ராசாவை பதவி விலக்கக்கோரி சுப்பிரமணியசாமி எழுதிய கடிதத்திற்கு பதிலளிக்க பிரதமருக்கு இத்தனை காலம் பிடித்தது ஏன்? இந்த விஷயத்தில் ஏன் இவ்வளவு கால தாமதம்?
2) குற்றச்சாட்டுக்கு ஆளான ராசா இன்ன மும் பதவியில் நீடிக்கிறாரே எப்படி? - என்பதே அந்தக் கேள்விகள்.
 இதனை கையில் எடுத்துக் கொண்டு பார்ப்பன ஏடுகளும் ஊடகங்களும் எதிர்க் கட்சி களும் ""பிரதமருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்"" ""பிரதமரின் மெத்தனப் போக்கு; நீதிபதிகள் வருத்தம்"" ""செயல்படாத பிரதமர்"" என்று அவை ஊளையிட, ""பிரதமர் பதவி விலகவேண்டும்"" ""பிரதமர் மவுனம் காப்பது ஏன்?"" ""ஊழலுக்கு பிரதமர் மறைமுக ஆதரவா?"" ""ராசாவை உடனடியாகப் பதவி விலக்க வேண்டும்"" என்று எதிர்க்கட்சிகள் அறிக்கை மேல் அறிக்கை விட்டு புழுதி கிளப்பியது மல்லாமல் ராசாவை விலக்கும் கோரிக்கையில் வெற்றியும் பெற்றன. இப்போது அந்தப் புளுகுணிக் கூட்டங்கள் ‘‘பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் குழு அமைக் கும் வரை பாராளுமன்றத்தை நடத்தவிடமாட்டோம்"" என்று அழுகுணி ஆட்டம் போடு கின்றன.
இன்று ஸ்பெக்ட்ரம் பேரால் காட்டுக்கூச்சல் கிளப்பி ஆட்டம் போடும், இந்த மாதிரி ஏடுகளும் இந்த மாதிரி ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் தங்களது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள எப்படிப்பட்ட விபரீத வழிகளில் எல்லாம் பயணிப்பார்கள் என்பதை ஒரு தேர்தல் முடிவுக்குப் பின்னர் வெளிவந்த ‘இந்து’ நாளிதழ் தலையங்கம் எழுதி கண்டித்தது.
அந்தத் தலையங்கத்தின் தலைப்பு Paid News என்பதாக நினைவு.
 மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த தேர்தலின் முடிவுகள் வெளிவந்தபோது எழுதப்பட்ட தலையங்கம் அது.  அதிலே - விளம்பரக் கட்டணத்தை வாங்கிக்கொண்டு விளம்பரத்திற்கு பதிலாக டடட கட்சி அமோக வெற்றி பெறும். டடட இந்தக் கட்சியே ஆட்சியைக் கைப்பற்றும். பெருகி வருகிறது என்று செய்தி விமர்சனக் கட்டுரைகளை வெளியிட்டு மக்களைக் குழப்புகிறார்கள் - திசை திருப்புகிறார்கள். - என்பதை இரு மராட்டிய ஏடுகளை சுட்டிக்காட்டி ஆதாரத்தோடு நிரூபித்திருந்தது ‘இந்து’ ஏடு!
 இன்று ஸ்பெக்ட்ரம் விஷயத்திலும் அதே விஷமத்தை - அதே யோக்கி யத்தன்மை அற்ற போக்கை அயோக்கியத் தனத்தைத்தான் செய்து வருகின்றன.
1) பணம் கொடுத்து பொய்ச் செய்தி போடவைக்கும் அரசியல் கட்சிகள்,
 2) பணம் வாங்கிக்கொண்டு பொய்ச் செய்தி வெளியிடும் ஏடுகள் இன்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில்தான் பார்ப்பனர்களின் கைக் கருவிகளாகி விட்ட சில பத்திரிகைகள் - ஊடகங்கள் உச்சநீதிமன்ற வழக்கையே - தங்களது சூது எண்ணங்கள் விபரீத சதித் திட்டங்கள் ஆகியவற்றை நிறைவேற்றிக் கொள்ள ஆயுதங்களாகப் பயன்படுத்துகின்ற னர் என்பதை எல்லோரும் புரிந்துகொண்டு வருகிறார்கள் என்பதோடு, உச்சநீதிமன்ற நீதிபதிகளே இத்தகைய ஏடுகளின் நடத்தை குறித்து வருத்தமடைந்திருக்கிறார்கள் என்பதை இன்றைய (23.11.2010) ‘தினமணி’ ஏட்டில் வெளிவந்திருக்கிற செய்தி எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது.
 அது வருமாறு :- ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில் ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பான வழக்கை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி, இந்த வழக்கில் பிரதமரின் பெயரை ஊடகங்கள் தேவையில்லாமல் பெரிது படுத்துவதாகவும் அதிருப்தி தெரிவித்தனர். பத்திரிகை சுதந்திரத்தை நீதிமன்றம் மதிக்கிறது. சமுதாயத்துக்கு சேவையாற்று வதில் பத்திரிகை, மின்னணு ஊடகங்கள் பெரும் பங்கு வகிப்பதை யாரும் மறுக்க முடியாது. எனினும், நீதிமன்ற நடவடிக்கைகளில் தவறான தகவல்கள் வெளியாவது வருத்தமளிக் கிறது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் பத்திரிகை, மின்னணு ஊடகங்கள் தவறான தகவல் களை வெளி யிட்டு வருகின்றன. பிரதமர் மன் மோகன் சிங்கின் பெயரை பெரிதுபடுத்தி செய்திகள் வெளியாகி வருகின்றன. சில பத்திரிகைகளில் ‘அரசை அறைந்தது உச்சநீதிமன்றம்’ என்ற தலைப்பில் செய்தி பிரசுரமாகி உள்ளது. ‘அறைந்தது’ என்பதற்கு என்ன அர்த்தம் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சி.பி.ஐ. தரப்பில் வழக்கறிஞர் கே.வேணு கோபாலும், முன்னாள் அமைச்சர் ஆ.ராசா சார்பில் ஏ.ஆர்.அந்தியார்ஜுனாவும் ஆஜராகினர். சி.பி.ஐ. வழக்கறிஞர் வேணுகோபால் கூறும் போது, எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் செய்தி யாளர்களுக்கு தவறான தகவல்களை அளிப்பதாக குற்றஞ்சாட்டினார். நீதிமன்றத்துக்குப் போட்டியாக ஊடகங்கள் வழக்கு விசாரணையை நடத்துவதால் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு பாதிப்பு ஏற்படுவதாக வழக்கறிஞர் அந்தியார்ஜுனா கூறினார். இதற்குப் பதிலளித்த நீதிபதி சிங்வி, இந்த வழக்கில் யார் மீதும் குற்றம் சாட்டப்படவில்லை என்றார். - என்பதே அந்தச் செய்தி!
                                                                                ***
 ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து, தோலைக்கடித்து அப்புறம் வேறு எதையோ கடிக்க முயலும் இந்த அசிங்கமான, அநாகரீகமான போக்கை இனியாவது கைவிட்டு - ஜன நாயக நெறிப்படி - கருத்து சுதந்திரத்தை - பத்திரிகை தர்மத்தை அரசியல் நேர்மை தூய்மை ஆகியவற்றைப் பேணிக்காக்க முன்வரு வார்கள் என்றும் அதற்கு நீதிபதிகளின் வருத்தம் தோய்ந்த விமர்சனம் உறுதுணையாக இருக்கும் என்றும் நம்புவோமாக!
                                              - சின்னகுத்தூசி
                                          நன்றி:முரசொலி(24-11-2010)

ஸ்டாலின் என்றொரு மானுடன்



இந்த 57 வயது இளைஞன் 2006ஆம் வருடம் மே மாதம் 28ந் தேதி உள்ளாட்சித்துறை அமைச்சராக (2008ஆம் ஆண்டு மே 29 தேதியிலிருந்து துணை முதல்வர்) பொறுப்பேற்ற பிறகு இந்த 4 வருடங்கள் 7 மாதங்களில் தமிழகம் முழுக்க கிட்டத்தட்ட 3,50,000 கிலோ மீட்டர்கள் கார், ரயில், விமானம் மூலமாக சுற்றுப் பயணம் செய்திருக்கிறார்.
இந்த நான்கரை வருடங்களில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் சென்னையை விட்டு, தன்னுடைய குடும்பத்தினரை விட்டுவிட்டு வெளியூர்களில் பொதுமக்கள், கட்சித் தொண்டர்களுடன் நேரத்தைச் செலவிட்டிருக்கிறார்.


இதே கால கட்டத்தில் ஸ்டாலின் 257 முறை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் சென்றிருக்கிறார்.
அவர் கலந்துகொண்ட அரசு விழாக்களின் எண்ணிக்கை 473. கட்சி விழாக்களின் எண்ணிக்கை 243.
மொத்தமாக தன்னுடைய பார்வைக்கு வந்த 34,899 மனுக்களில் 32,098 மனுக்களை விசாரித்து குறைகளைத்தீர்த்திருக்கிறார்.
ஒவ்வொரு நாளும் காலை ஸ்டாலின் தனது இல்லத்தில் 8 மணிக்கு ஆரம்பித்து, ஒரு மணி நேரத்தில் 100ல் இருந்து 200க்கு மேல் பொதுமக்கள், பார்வையாளர்களைச் சந்திக் கிறார். தலைமைச்செயலகத்தில் தனது பணி களுக்கிடையே அங்கேயும் பார்வையாளர் களைச்சந்திக்கிறார். மாலையில் அரசு விழாக்களில் பங்கேற்கும்போதுகூட மனுக் களுடன் வருபவர்களைச்சந்திக்கிறார். இப்படி ஸ்டாலினின் ஒருநாள் பொழுது முடிகிற போது அவர் சந்தித்து முடிக்கும் நபர்களின் எண்ணிக்கை ஒரு ஆயிரத்தை நோக்கி நெருங்கிக்கொண்டிருக்கும்.


சட்டப்பேரவை நடக்கின்ற காலங்களில் தன்னுடைய துறைகளின் மானியக்கோரிக் கையை பேரவையில் சமர்ப்பித்தல், விவாத காலங்களில், தனது அலுவலகத்தில் துறை அதிகாரிகள், செயலர், உதவியாளர்களுடன் குறிப்புகளைத் தயார் செய்திட, விவாதிக்க மாலை 6 மணிக்குத் தொடங்கும் கூட்டம் நள்ளிரவு 12 மணி வரைகூட நீடிப்பது உண்டு.


சட்டமன்ற பதிலுரைக்கான குறிப்புகளை யெல்லாம் விவாதித்து அவற்றை ஸ்டாலின் தன் கைப்படக்குறிப்புகளை எழுதிக்கொள்வார்.
இந்த ஓயாத, சலியாத உழைப்பு, சுறுசுறுப்பின் ரகசியம் பற்றி ஸ்டாலினிடம் கேட்டால், ‘கலைஞரின் சுறுசுறுப்பு, அவருடைய ஓயாத, சலியாத உழைப்புக்கு முன் இதெல்லாம் எம் மாத்திரம்?’ என்று தன்னடக்கத்துடன் பதில் சொல்கிறார். மீண்டும் வலியுறுத்திக் கேட்டால், ""தி.மு.க. மீது தொண்டர்களும் தி.மு.க. ஆட்சி மீது பொதுமக்களும் வைத் திருக்கும் நம்பிக்கை, அவர்களின் எதிர்பார்ப்புகள்தான் என்னைத்துவளாமல் செயல்பட வைக்கிறது"" என்கிறார். ""காலையில் 30 நிமிட வாக்கிங், அடுத்து 45 நிமிட யோகாசனம், மதிய உணவுக்குப் பிறகு 1 மணி நேர குட்டித் தூக்கம் மற்றும் பேரக்குழந்தைகளுடனான சில நிமிடக்கொஞ்சல்கள் என்னை நாள் முழுக்க சுறுசுறுப்பாகச்செயல்பட வைக்கிறது"" என்கிறார் அவர்.
- என்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி - ‘இந்தியா டுடே’ வார இதழின் பொறுப்பு ஆசிரியர் ஆனந்த நடராஜன் - `இந்தியா டுடே’யின் ‘மு.க.ஸ்டாலின் சிறப்பித’ழில் குறிப்பிட்டிருக்கிறார்.


இந்தியா டுடே வெளியிட்டுள்ள இந்தச்சிறப்பிதழ்,
                                           - ஸ்டாலினின் இளமைக் காலம்
                                              - அரசியல் நுழைவு
                                              - மிசாச் சிறைவாசம்
                                              - அவர் நடித்த கழகப்
                                                 பிரச்சார நாடகங்கள்
                                             - அவரது திரைப்படங்கள்
                                              - தொலைக்காட்சித் தொடர்கள்
                                              - இளைஞர் அணி தொடக்கம்
                                              - கழகம் நெருக்கடிகளைச் சந்தித்தபோது
                                               இளைஞர் அணியின் எழுச்சி நிறை பணிகள்
                                               - சென்னை மாநகர மேயராக
                                               அவர் ஆற்றிய அரும்பணிகள்;
                                                அவரது நிர்வாகத் திறமை
- தொண்டால் பொழுதளந்து அதன்மூலம் படிப்படியாக எம்.எல்.ஏ., கழகப் பொருளா ளர், அமைச்சர், துணை முதலமைச்சர் - என்று படிப்படியாக உயர்ந்து உச்ச நிலையை எட்டியது.- துணை முதலமைச்சர் பொறுப்பில் அவரது அயராத உழைப்பு, அபார சாதனைகள்.
- அதிகாரிகளிடம் அவர் காட்டும் கனிவு
- குறிப்பிட்ட காலத்துக்குள் திட்டங்களை - விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பே விரைந்து நிறைவேற்றச் செய்திடும் அவரது நிர்வாகத் திறமை
- என்று ஸ்டாலினின் பன்முகத்திறமைகளை நிகழ்ச்சிகள் - ஆதாரங்கள் - புள்ளி விவரங்களோடு வெளிப்படுத்தும் சுவையும் பயனும் மிகுந்த மிகச் சிறந்த கட்டுரைகள் கொண்டதாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் இந்தச் சிறப்பிதழை - ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு - என்றே அனைவரும் வியந்து பாராட்டும் வகையில் - மெத்தச் சிரமமும் அக்கறையும் கொண்டு தயாரித்திருக்கிறது இந்தியா டுடேவின் ஆசிரியர்குழு.


ஸ்டாலின் எதிர்ப்புக் கட்டுரையோ என்று நினைக்கச்செய்யும் சில கடுமையான எதிர்ப் பார்வை கொண்ட கட்டுரைகளையும் வெளியிடத்தயங்கவில்லை அது. அப்படிப்பட்ட கட்டுரைகளில் ஸ்டாலின் பெயரால் தி.மு.க.வுக்கு எதிரான நெடிகாரம் சற்று அதிக மாகவே இருக்கிறது!


இந்தச் சிறப்பிதழுக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது. அது என்ன?
இந்தியா டுடே இதுவரையில் 4 சிறப்பிதழ்களை மட்டுமே வெளியிட்டிருக்கிறது. அதிலே இது 4வது சிறப்பிதழ்.
இந்தியா டுடே வெளியிட்ட சிறப்பிதழ்கள் பற்றி அதன் ஆசிரியர் பிரபுசாவ்லா - ஒரு அருமையான முன்னுரையை எழுதியிருக்கிறார். அதிலே சிறப்பிதழ் வரிசையில் ஸ்டாலினைத் தேர்ந்தெடுத்தது ஏன் என்பது பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை எழுதி யிருக்கிறார். அதுவே இந்தச் சிறப்பிதழின் மணிமுடியாக - சிகரமாக அமைந்திருக்கிறது. 


அது வருமாறு:-


இந்தியா டுடே வழங்கும் சிறப்பிதழ்கள் மிகவும் பிரபலமாக இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். செய்தியில் தொடர்ந்து அடிபடும் ஆளுமைகளை வைத்து ஒரு முழு இதழ் கொண்டு வரும் நோக்கத்தில்தான் சிறப்பிதழ் கள் என்ற கருத்தாக்கம் கொண்டு வரப்பட்டது. தத்தமது துறையை பிறர் பார்த்த விதத்தை மாற்றியமைத்த நபர்களின் பல்வேறு பரிமாணங் களுக்கு கவனம் கொடுக்கும் சிறப்பிதழ்கள் இவ்வாறு தான் பிறந்தன. 2007ல் ரஜினிகாந்த் சிறப்பிதழுடன் இதன் பயணம் தொடங்கியது. அதன் பிறகு இதுவரை நான்கு சிறப்பிதழ்களை வெளிவிட்டிருக்கிறோம். தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் சிறப்பிதழை நாங்கள் 2008ல் வெளியிட்டபோது பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன.
இப்போது தமிழகத்தின் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிறப்பிதழ்மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
ஸ்டாலினின் தந்தையும் தமிழக முதல்வருமான மு.கருணாநிதி அவர்களை மிக நெருக்க மாக அறியும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 25 வருடங்களாக பழகி வந்திருக் கிறேன். முதிர்ந்த தலைவர். சிறந்த ராஜதந்திரி, அரசியலில் உறுதியுடனும், விடாமுயற்சியுடனும் செயல்படுபவர். இந்தியாவின் மிக உயர்ந்த, என்றும் நிலைத்திருக்கும் தலைவர். அவருக்கு அரசியலிலும் ஆட்சியிலும் தோள் கொடுக்க வந்திருக்கிறார், அவரது இளைய மகன் மு.க.ஸ்டாலின்.
‘மிசா’ சிறைக் கொடுமை அனுபவங்களுடனும் 40 ஆண்டு கால அரசியல் அனுபவங் களுடனும் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலினை நான் நேரில் சந்தித்ததில்லை. என்றாலும் அவர் அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக வந்திருக்கிறார். அவர் சென்னையில் மேயராக முதன்முதலில் ஆட்சிப் பொறுப்பேற்றபோதே சென்னை யை சிங்காரச் சென்னையாக்க வேண்டும் என்கிற விரிந்த கனவுடன் செயல்பட்டு அவர் நனவாக்கவும் செய்தார். அப்போது அவருடைய ஆட்சித்திறன் எல்லோருக்கும் தெரிய வந்தது.


சமீபகாலமாக கருணாநிதியால் விரிவாக பயணம் செய்ய முடியாத நிலையில் துணை முதல்வரான ஸ்டாலின் பரவலாகப் பயணம் செய்து அரசின் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
வாரிசு அரசியல்வாதி என்கிற விமர்சனங்களி லிருந்து ஸ்டாலின் தப்பிக்க முடியவில்லை யென்றாலும் தனது 40 ஆண்டு கால அரசியல் பணி, கடுமையான உழைப்பு, விடாமுயற்சி, எதிர்காலத் தமிழகம் குறித்த கனவு, எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களுடன் சிநேகமாகப் பழகும் பாங்கு ஆகியவை அந்த விமர்சனங்களை சரிக்கட்ட உதவுகின்றன.
- என்று குறிப்பிட்டிருப்பதின் மூலம் முழுச் சிறப்பிதழையும் படித்து முடித்து விட வேண்டும் என்ற ஆவலைத்தூண்டிவிட்டிருக்கிறார் ஆசிரியர் பிரபுசாவ்லா.


இந்தியா டுடே - சிறப்பிதழ் ஸ்டாலினின் அரசியல் பற்றி ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டிருந்தாலும் பெரும்பாலான கட்டுரைகளில் அவரது
                                                       - மனிதநேயம்
                                                        - எதிர்க்கட்சித் தலைவர்களை
                                                          மதிக்கும் ஜனநாயக மாண்பு
                                                         - உற்றுழி உதவி - உறுபொருள்
                                                             வழங்கிடும் உதாரணம்
ஆகியவைகளே விரவிக் கிடக்கின்றன.
உதாரணத்திற்கு ஒன்று -


ஸ்டாலின் ஓர் அரசியல்வாதி, துணை முதல்வர் என்பதைவிட
ஸ்டாலின் ஒரு
மனிதாபிமானி
என்பதே முதன்மையானது என்பதை விளக்கிடும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை எடுத்துக் காட்டி விளக்கியிருக்கிறார். 


அது வருமாறு:-


சில மாதங்களுக்கு முன்பு காலை 10.00 மணி அளவில் சென்னையில் என் இல்லத்தில் இருந்தேன். தலைவர் வாசன் வீட்டிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. சென்னையில் ஒரு பிரபலமான மருத்துவமனையில் சில நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்த எங்களது சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இறந்து போனார். உடனடியாக அங்கே சென்று அவரது சடலத்தை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
நான் அங்கு போய்ச் சேருவதற்குள் அங்கே வந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டுச் சென்றுவிட்டார் துணை முதலமைச்சர். அங்கே நின்று கொண்டிருந்த சில திராவிட முன்னேற்றக் கழக நண்பர்களின் முகத்தில் கசப்பு ரேகைகளை என்னால் பார்க்க முடிந்தது.
அங்கே இருந்த சென்னை மாநகராட்சி காங்கிரஸ் தலைவர் சைதை ரவியிடம் என்ன காரணம் என்று கேட்டேன். இறந்துபோன சட்டமன்ற உறுப்பினரின் உறவினர் ஒருவர் துணை முதலமைச்சரிடம் மிகவும் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டார். அதைப் பார்த்த தி.மு.க. நண்பர்கள் மிகவும் வருத்தமடைந்து விட்டார்கள். வேறு இடமாக இருந்து இருந்தால் கைகலப்பு நடந்திருக்கும் என்று சொன்னார்கள்.


இறந்துபோன சட்டமன்ற உறுப்பினருக்கு மரியாதை செலுத்தவந்த துணை முதலமைச்சரைப் பார்த்து காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஒரு நண்பர், ""நீங்கள் எல்லோரும் ஏமாற்றிவிட்டீர்கள். யாரும் அவரைக் கவனிக்க வில்லை. இப்போது எதற்காக இங்கே வந்தீர்கள்?"" என்ற தொனியில் மிகவும் உரத்த குரலில் அந்த மருத்துவமனையே அதிரும் அளவுக்குப் பேசியுள்ளார். எவ்வித பதிலும் சொல்லாத துணை முதலமைச்சர், மறைந்த சட்டமன்ற உறுப்பினருக்கு மலர் வளையம் வைத்துவிட்டு அமைதியாகத் திரும்பிவிட்டார். இதனைக் கேள்விப்பட்ட நான் அவமானத்தில் குன்றிப் போனேன்.


ஏனென்றால், இறந்து போன சட்டமன்ற உறுப்பினரை மூன்று முறைக்குக் குறை வில்லாமல் மருத்துவமனைக்கு வந்து பார்த்து விட்டுச் சென்றவர் துணை முதலமைச்சர். இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, மறைந்துபோன சட்டமன்ற உறுப்பினரின் சகோதரரை அழைத்துக் கொண்டு துணை முதலமைச்சரைச் சந்தித்து மருத்துவ சிகிச்சைக்கு இதுவரை ரூ.9 லட்சம் செலவாகியிருக்கிறது என்று சொன்னவுடன், துணை முதல்வர் நேரில் சென்று சட்டப்பேரவைத்தலைவரிடமும், செயலரிடமும் பேசி உடனடியாக ரூ.9 லட்சத்தை மருத்துவ மனைக்கு காசோலை மூலம் அனுப்பி வைத்தார். அதுமட்டு மல்லாமல், இனி எவ்வளவு தொகை ஆனாலும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் என்று கடிதத்தையும் கொடுக்கச் சொன்னார்கள். அந்தக் காசோலையை அனுப்பி வைத்து விட்டு அவரே அன்று நேரிடையாக மருத்துவமனைக்கு வந்து டாக்டர்களிடம் நிலைi மயை விசாரித்துச் சென்றார்.


இவ்வளவு உதவிகளைச் செய்த ஒருவரிடம் இப்படி ஒருவர் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டாரே என்று தெரிந்தவுடன் நான் மிகவும் வருத்தமுற்றேன். உடனே மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனிடம் இதனைத் தெரிவித்து எங்கள் சார்பாக நீங்கள் துணை முதலமைச்சரிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவரும் துணை முதலமைச்சரிடம் பேசினார்.


இரண்டு நாட்களுக்குப் பின்பு கோட்டையில் நான் நேரில் சந்தித்து நடந்தவைகளுக்கு வருத்தம் தெரிவித்தேன். அவரோ, மிகவும் இயல்பாக, ""ஏதோ எம்.எல்.ஏ. இறந்த வருத்தத்தில் பேசிவிட்டார்கள். நம்மிடம் பேசாமல் வேறு யாரிடம் பேசுவார்கள்?"" என்று சிரித்துக்கொண்டே சொன்னவுடன் எவ்வளவு உயரத்திற்கு அவர் வளர்ந்துள்ளார் என்பதைப்புரிந்துகொண்டேன்.
- என்று நெஞ்சம் நெக்குருகி - வாசகர்களின் கண்களைப் பனிக்கச் செய்யும் வகையில் எழுதியிருக்கிறார் பீட்டர் அல்போன்ஸ். மொத்தத்தில் 
மு.க.ஸ்டாலின்
பொன்னியின்
செல்வன்
(அடிப்படை உறுப்பினர் முதல் துணை முதல்வர் பதவி வரை)
ஸ்டாலினின்
40 வருட
வரலாறு
என்று தலைப்பிட்டு இந்தியா டுடே வெளியிட்டுள்ள சிறப்பிதழ் ஒரு ‘தகவல் களஞ்சியம்’ என்று சொன்னால் அதனை யாரும் மறுக்கவியலாது!
                                              -சின்னகுத்தூசி                                  நன்றி:முரசொலி(27-11-2010)

வசிஷ்டர் வாயால் அருளிய ‘பிரும்மரிஷி’ப் பட்டம்!

மு.க.ஸ்டாலின்
நமது வாழ்நாளில் எத்தனை எத்தனையோ தலைவர்களின் பிறந்த நாள் - நினைவு நாளையொட்டி பல்வேறு பத்திரிகைகளும் வெளியிடும் மலர்களையும், சிறப்பிதழ் களையும் பார்த்திருக்கிறோம்; படித்திருக்கிறோம். அவைகளில் பெரும்பாலும் - அந்த மலர் அல்லது சிறப்பிதழின் கதாநாயகர் யாரோ அவரைப்பற்றிய கட்டுரைகளே இடம் பெற்றிருக்கும். ஆனால் அவர்களது வளர்ச்சிப் பாதையில் அவரோடு தோளோடு தோள் நின்று அவர்களது வளர்ச்சியிலும், தளர்ச்சியிலும் - கஷ்ட நஷ்டங்களிலும் உறுதுணையாக நின்றவர்கள் பற்றிய கட்டுரைகள் எதையும் காணமுடியாது.

இந்த விஷயத்தில் இந்தியா டுடே - ஸ்டாலின் சிறப்பிதழ் வித்தியாசமான கோலத்தில் காட்சியளிக்கிறது. ஸ்டாலின் மேயராக இருந்தபோதும், துணை முதல்வராக இன்று பணியாற்றும் இந்தக் காலகட்டத்திலும் ஸ்டாலின் கண்ட கனவுகள் நனவாகவும் அவர் தமது துறையில் பல்வேறு சாதனைகளைக் குவிக்கவும் அவருக்குப் பக்கபலமாக இருந்து பாடுபட்டவர்கள் நிர்வாகத்திறமை வாய்ந்த அதி காரிகளே, ஸ்டாலின் நினைப்பதை யெல்லாம் நூற்றுக்கு நூறு சில சமயங்களில் நூற்றுக்கு இருநூறு என்ற விகிதத்தில்கூட முழுமையாக நிறைவேற்றி வைப்பதில் அவர்களது நிர்வாகத்திறமைக்கு பெருமளவில் பங்குண்டு. ஸ்டாலினின் வெற்றிகள் தனி நபரின் வெற்றிகளல்ல, அது அவர் தேர்ந்தெடுத்த அதிகாரிகள் அணியின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்பதை விளக்கி, ‘தளபதியின் தளகர்த்தர்கள்’ என்கிற தலைப்பில் கா.சு.துரையரசு எழுதிய ஓர் அருமையான கட்டுரையை வெளியிட்டதின் மூலம் - நமது அரசு அதிகாரிகள் எவ்வளவு ஆற்றல்மிக்கவர்கள் என்பதை பறைசாற்றி இருக்கிறது இந்தியா டுடே - சிறப்பிதழ்.
அந்தக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வருமாறு :-

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் - திருவள்ளுவர் தமிழக துணை முதல்வரும் உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனக்குக் கீழே உள்ள அதிகாரிகள் அணியை உருவாக்கும் விதத்திற்கு இந்தக் குறள் பொருந்தும். மேயராக இருந்த காலத்திலேயே தன்னைச்சுற்றி திறமையான, நம்பகமான அதிகாரி களின் குழாம் ஒன்றை உருவாக்கி, வளர்ச்சியை சாத்தியமாக்கியவர் ஸ்டாலின். அப் போதைய துணை ஆணையரான பி.செந்தில்குமார், இன்று நகராட்சி நிர்வாகத்துறையில் இயக்குநராக அமர்த்தப்பட்டிருக்கிறார். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை பெயர்த்தெடுத்து உருவாக்கப்பட்ட தனது அமைச்சகத்தை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்ட உடனேயே ஸ்டாலின் முதலில் தேடியது சிறந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத்தான். கே.தீனபந்து, அசோக்வர்தன் ஷெட்டி, கே.ரகுபதி, டி.உதயசந்திரன், ககன்தீப் சிங் பேடி என தற்போது ஸ்டாலினின் அணியில் இருக்கும் அதிகாரிகள் வெவ்வேறு இடங்களில் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் கொண்டுவரப் பட்டவர்களே.

இவர்களில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும் திறமையா னவர் என்று பெயரெடுத்தவருமான தீனபந்து, ஸ்டாலின் துணை முதல்வரான பிறகு அவரது முதன்மைச் செயலராக நியமிக் கப்பட்டார். நகராட்சி நிர்வாகத்துறை செயலாளராக 2 ஆண்டுகள் இருந்த இவர், இடையில் வருவாய்த்துறைக்குச் சென்றுவிட்டு தற்போது முதன்மைச்செயலாளராகப் பணி அமர்த்தப் பட்டிருக்கிறார். ஸ்டாலின் அணியின் அடுத்த முக்கிய நட்சத்திரமான அசோக்வர்தன் ஷெட்டி, தொடர்ச்சியாக ஊரக வளர்ச்சித் துறையின் பல்வேறு பதவிகளில் இருந்தவர். அவருக்கு ஊரக வளர்ச்சி இயக்குநர் பதவி அளிக்கப்பட்டது (தற்போது நகராட்சி நிர்வாகத்துறையின் முதன்மைச் செயலாளர்). கறார் தன்மையும், சிபாரிசுக்கு இடம் கொடுக்காத நடைமுறையும் ஷெட்டிக்கு கண்டிப் பானவர் என்ற பெயரை வாங்கிக் கொடுத்தது. துறைக்கு ஒதுக்கப்படும் நிதி சரியான முறையில் உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செல்கி றதா என்பது இவரின் கழுகுப்பார்வையிலிருந்து தப்பாது. லண்டன் பர்மிங்ஹாம் பல் கலைக்கழகத்தின் மேலாண்மையியல் பட்ட தாரியான ஷெட்டிதான் லண்டனில் பெற்ற பல்வேறு பயிற்சிகளையும் திறமைகளையும் இத்துறையில் பயன்படுத்துகிறார். இத்துறை யைச்சேர்ந்த ஊழியர்களுக்குப் பணியிடைப் பயிற்சி வழங்குவதன் மூலம் ஒட்டுமொத்த அதிகாரிகள் அணியின் திறமையை வளர்ப்பதில் இவர் பெரிதும் கவனம் செலுத் தினார்.

தமிழகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை பய்றி மையங்கள் மறுசீரமைப்பு செய்யப் பட்டிருப்பதில் ஷெட்டியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அவரோடு ஊரக வளர்ச்சி இயக்குநராக இருந்த (தற்போது குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர்) ககன்தீப் சிங் பேடி அவருக்கு தோள் கொடுத்ததும் பல திட்டங் களை வெற்றித் திட்டங்களாக்கியது. குறிப்பாக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் வெற்றிக்கு ஸ்டாலினின் அணி கொடுத்த உந்து சக்தியே காரணம். இத்திட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள 12,618 ஊராட்சிகளுக்கும் தலா ரூ.20 லட்சம் வீதம் நிதி ஒதுக் கீடு செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சி களிலும் தலா ஒன்று வீதம் முழு நேர நூலகங்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் இவற்றில் கௌரவ ஊதியத்தில் நூலகர்களாக நியமிக் கப்பட்டிருக்கிறார்கள். தமிழக கிராமங்களில் சமூக மோதல்கள் உருவாகப் பெரிதும் காரணமாக இருப்பவற்றுள் சுடுகாட்டுப் பிரச்சினை முக்கியப்பங்கு வகிக்கிறது. இதற்கும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டம் ஒரு தீர்வை கண்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் எல்லா சமூகத்தினருக்கும் பொதுவான ஒரு நவீனமயானம் இத்திட்டத்தின் கீழ் உரு வாக்கப்பட்டு இருக்கிறது. அங்கு எரிமேடை, குடிநீர் வசதி, சிமென்ட் சாலை, தெரு விளக்கு என்று எல்லா வசதி களும் செய்து தரப்படுகின்றன.
இது தவிர ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு ஊருணி (குளம்) வீதம் உருவாக்கித்தரப்படுகிறது. இதனால் அந்த ஊராட்சி முழுமைக்கும் குடிநீர் ஆதாரம் உறுதி செய்யப்படுகிறது. இது தவிர, பாரம்பரிய கிராமப்புறச் சந்தைகளை மேம்படுத்துதல், ஊராட்சி ஒன்றியப் பள்ளி களின் சீரமைப்பு முதலிய அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் விதமாகவும் இத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற திட்டங்களின் வெற்றி தனி நபர்களின் வெற்றியல்ல. மாறாக, ஸ்டாலினின் தலைமையில் ஆர்வமுடன் செயலாற்றிய அணியின் வெற்றி. தற்போது ஷெட்டி, உதயசந்திரன், ககன் தீப் சிங் பேடி, இப்போது பதவி உயர்வின் மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உயர்ந்திருக்கும் ரகுபதி (ஊரக வளர்ச்சித்துறை வரலாற்றிலேயே இப்போதுதான் இத்துறை அதிகாரி களுக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து தரப்பட்டிருக்கிறது) ஆகி யோரின் கூட்டு முயற்சியையே பாராட்ட வேண்டும்.

கட்டுமானப்பணிகளையும் ஒப்பந்தக்காரர்களையும் மேற்பார்வையிடும் அதிகாரி களுக்கு, ஸ்டாலினின் அதிகாரிகள் அணி சுதந்திரமாக செயல்பட அதிகாரம் கொடுத் திருக்கிறது. ""எனக்கு டி.ஆர்.டி.ஏ.யைத் தெரியும், அரசுச் செயலாளரைத் தெரியும்"" என்று சொல்லிக் கொண்டு யாரும் எந்த ஊரக வளர்ச்சித் துறை அதிகாரியையும் நெருக்கடிக்கு உள்ளாக்க முடியாது. ஷெட்டி, பேடி, உதயசந்திரன், கே.கோபால் (தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் தற்போதைய மேலாண் இயக்குநர்) என்று,  அனைத்து அதிகாரிகளுமே பரிந்துரைக்கு இடம் கொடுக்காதவர்கள் என்று பெயர் எடுத் திருப்பது தான் இந்த வெற்றிக்குக் காரணம். அதே போல திட்டப் பணிகளின் படிப்படியான வளர்ச்சி நிலையை மதிப்பிட வாராந்தர திறனாய்வுக் கூட்டங்களை நடத்தும் வழக்கத்தை ஷெட்டி அறிமுகப்படுத்தி வைத் திருக்கிறார். இது பல்வேறு திட்டப்பணிகளின் வேகத்தை அதிகமாக்க உதவியிருக் கிறது. அதிகம் கண்டு கொள்ளப்படாத, ஒப்பந்தக் காரர்களுக்கு மட்டுமே பரிச்சயமாக இருந்த உள்ளாட்சித்துறையை புரஃபஷனலாக மாற்றியதில் ஸ்டாலினின் இந்த அதிகாரி கள் படைக்கு பெரும் பங்குண்டு.

துணை முதல்வரின் துறைக்காக தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகளின் நேர்த்தியான பார்வை, அவர்களின் தொழில் நேர்த்தி, வேலையில் அவர்கள் காட்டும் அர்ப்பணிப்பு முதலானவை தமிழக அரசு நிர்வாகத்தின் மற்ற துறைகளுக்கும் நீட்டிக்கப்படுமானால் அது ஒட்டுமொத்த தமிழகத்தின் நல்லாட்சிக்கான ஆரம்பமாக இருக்கும். - என்று எழுதியிருப்பதின் மூலம் - ஸ்டாலின் மட் டுமா? அவர் தேர்வு செய்து கொள்ளும் அதிகாரிகளும் நிர்வாகத்திறமை வாய்ந்தவர்கள் தான் என்பதை எடுத்துக் காட்டியிருக் கிறார் சு.துரையரசு. ம்ம்ம் தலைசிறந்த நிர்வாகிகள் துணையுடன் பதவிக்கு வந்த குறுகிய காலத்தில் - ஸ்டாலின் தமது துறைகளில் குவித்த சாதனைகள் என்னென்ன என்று தகுந்த ஆதாரங்களுடன் ""ஸ்டாலின் கண்ட கனவு"" என்ற தலைப்பில் லட்சுமி சுப்பிரமணியன், ஸ்டாலினின் மகத்தான சாதனைகளைப்பட்டியலிட்டிருக்கிறார்.


அதிலிருந்து சில பகுதிகள் வருமாறு:- தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெண்களின், அதிலும் குறிப்பாக சிற்றூர்களிலும் கிராமங்களிலும் மகளிரின் வாழ்வாதார நிலையும் பொருளாதார நிலையும் மேம்பட்டு வருகின்றன.  துணை முதல்வரின் பெருமுயற்சியாலும் முனைப்பினாலும் முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக்குழுத்திட்டமே அதற்குக் காரணம். கடந்த 2006ஆம் ஆண்டில் ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப் பேற்றதும் உடனடியாக நிறைவேற்ற நினைத்தது இரண்டு காரியங்களை : ஒன்று கிராம வளர்ச்சி, மற்றொன்று பெண்களின் மேம்பாடு. கடந்த நான்கு வருடங்களில் 1.59 லட்சம் புதிய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இந்த புதுக்குழுக்களில் உள்ள பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 23.95 லட்சம், 1989ல் துவங்கிய இந்த மகளிர் சுயஉதவிக்குழுத்திட்டத்தின் வளர்ச்சி கடந்த நான்கு வருடங்களில் உச்சத்தை எட்டி வருகிறது. தற்போது தமிழகத்தில் மொத்தம் 4.74 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்களும் அதில் 73.60 இலட்சம் பெண்கள் உறுப்பி னர்களும் இருக்கிறார்கள். இவர் களின் மூலம் வங்கிகளில் சுமார் ரூ.2,568 கோடி சேமிக் கப்பட்டிருக்கிறது. 2006ல் ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் முதலில் இந்த சுய உதவிக் குழுக்களுக்கான சுழல் நிதியை விரைந்து கொடுக்கவும் ரூ.15,000த்திலிருந்து ரூ.50,000 மாக அதிகரித்துக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தார். பொறுப்பேற்ற குறுகிய காலத்திற்குள் இதற்கென அரசு, வங்கி அதிகாரிகளுடன் பல கட்ட ஆய்வுக்கூட்டங்களை நடத்தச்செய்து, வங்கி அதிகாரிகளை இதற்கு இணங்க வைத்தது ஸ்டாலினின் துடிப்பான செயல்பாட்டிற்கு சாட்சி. இதனால் சுயஉதவிக் குழுக்களுக்கு முன்பு இருந்ததைவிட அதிக அளவில் கடன் கொடுக்க வங்கிகளும் முன் வந்தன. ஆனால் இந்த வெற்றியோடு இந்தத் திட்டம் நின்று விடக்கூடாது என்பதில் முனைப்போடு இருந்தார் துணை முதல்வர். அதனால் 2007 வரை வெறும் ரூ.593 கோடியாக இருந்த சுயஉதவிக்குழுக்களுக்கு கொடுக்கப்பட்ட கடன் தொகையை 2010ல் ரூ.2,791 கோடி யாக எட்டச்செய்திருக்கிறார். இதைத் தொடர்ந்து இப்போது பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகளை உருவாக்கி, அதன்மூலம் சுயஉதவிக் குழுக்களுக்கு இன்னும் அதிக உதவிகள் கிடைக்க வழி செய்திருக்கிறார் ஸ்டாலின்.

தற்போது தமிழகத்தில் உள்ள 12,618 கிராமங்களில் ஏறத்தாழ 4000 கிராமங்களில் இந்தக் கூட்டமைப்புகள் துடிப்புடன் செயலாற்றி வருகின்றன. இதன்மூலம் பெண்களும் அவர்கள் வசிக்கும் கிராமங்களும் பொருளாதாரத்தில் புத்துயிர் பெற்று வருகின்றன. தொழில் செய்வதற்கு மட்டும் கடன் வசதி இருந்த நிலை மாறி, இப்போது இந்தப் பெண்களின் தனிப்பட்ட தேவைகளுக்கும் கடன் பெறும் வசதியையும் உருவாக்கி இருக்கிறது தமிழக உள்ளாட்சித்துறை. தனிப்பட்ட செலவுகளுக்காக கந்து வட்டிக்காரர்களின் மீட்டர் வட்டிச் சூழலில் ஏழைக்குடும்பங்கள் சிக்குவது இதன்மூலம் தடுக்கப்படுகிறது. வழக்கமான அரசு அலுவலர்களைப்போல காலையில் குஷன் சேரில் அமர்ந்து அதை ஒரு நாள் தேய்த்துவிட்டு, மாலை ஆஃபிஸ் விட்டாச்சு என்று கிளம்புகிற அமைச்சர்களே தமிழகத்தில் அதிகம். தனது துறையின்கீழ் என்ன செய்யலாம் என்ற சிந்தனையே இல்லாமல், ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும்போது அதற்கு எதிர் வினை யாற்றினால் போதும் என்று நினைக்கும் ரகத்தினரே அதிகம். இவர்களுக்கு மத்தியில் சமூகத்தின் முக்கிய மான தேவைகள் என்ன, அவற்றை நிறைவேற்ற என் னென்ன திட்டங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று யோசித்து செயல்படுகிறவர் ஸ்டாலின். இத்தகைய ஈடுபாட்டால் தனது கனவுத் திட்டங்கள் எவ்வாறு நிறை வேற்றப்படுகின்றன என்று அதிகாரிகளிடம் அவ்வப் போது கேள்வி கேட்பதை வழக்கமாகக் கொண்டவர் ஸ்டாலின். ஸ்டாலினின் முக்கியத்துவம் பெற்ற திட்டங்களில் சமீபத்தில் சேர்ந்திருப்பது ‘குடிசை களில்லா மாநிலம்’ என்ற கனவு. கலைஞர் வீட்டு வசதித்திட்டத்தின்மூலம், 2016 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் ஒரு பிரஜைகூட குடிசையில் வாழும் நிலை இருக்கக்கூடாது என்பதே இத்திட்டத்தின் நோக்கம். முதற்கட்டமாக இந்த வருடம் ரூ.1800 கோடியில் 3 லட்சம் குடிசைகள் கான்கிரீட் வீடு களாக மாறும். கேண்டீனிலும் அரட்டைக்கச்சேரியிலும் ஊதியக்குழு சிபாரிசுகளால் தங்களுக்கு எவ்வளவு லாபம் என்ற கணக்குகளிலும் தங்கள் அலுவல் நேரத்தை அதிகம் செலவிடும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் உள்ளாட்சித்துறை இரவிலும் வார விடுமுறை களிலும் கூட வேலை பார்க்கிறது. இது வெறுமனே அதிகாரிகளுக்கு பயந்து நடக்கும் காரியமாகத் தெரியவில்லை. ஸ்டாலினில் தொடங்கும் சமூக அக்கறை, துறைத்தலைவர்கள் முதல் கீழ்மட்ட ஊழியர்கள் வரை பரவுகிறது. இந்த அமைச்சகத்தின்கீழ் செயல்படும் சுமார் ஒரு டஜன் துறைகளில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர் களாவது வாங்கும் சம்பளத்தை விட கூடுதலாக உழைக்கிறார்கள் என்று கூறலாம்.

ஸ்டாலினின் கனவுத்திட்டங்கள் துரிதமாக நிறை வேற்றப்படுவதற்கு அதிகாரிகளையும் ஊழியர்களையும் இவ்வாறு சிறப்பாக செயல்பட வைப்பதும் ஒருகாரணம். ""அதிகாரிகள் இவர் துறைகளில் பணியாற்ற வரும் போது உங்களிடம் பணியாற்றுவது பெருமை, பாக்கியம் என்று மகிழ்ந்து சொல்லும் அளவுக்கு துணை முதல்வர், அவர்களை சிறப்பாக கையாள்கிறார்"" சட்டத்திற்கு புறம்பாக அதிகாரிகளிடத்தில் ஸ்டாலின் எதையும் செய்யச்சொல்வதும் இல்லை, சட்டப்படியான பணிகள் நடைபெறுவதில் குறுக்கிடுவதும் இல்லை என்று சொல்லப்படுகிறது. - என்று ஸ்டாலினின் நிர்வாகத்திறமை - சாதனைகளைப்பட்டியலிட்டிருக்கும் லட்சுமி சுப்பிரமணியத்தின் கட்டுரையிலும் அதிகாரி களின் செயல்பாடுகள் முக்கிய இடம் பெற்றிருக் கின்றன! ம்ம்ம் தமது துறையின்கீழ் செயல்படும் அதிகாரிகள் மீது யாராவது வேண்டுமென்றே பொய்ப் புகார் கூறினால் துணை முதல்வர் அவற்றினை எப்படி அணுகுவார் என்பதை எடுத்துக் காட்ட இரண்டு நிகழ்வுகளை சுட்டிக்காட்டியிருக்கிறார், அவரது மக்கள் தொடர்பு அலு வலரான ம.அரிகிருஷ்ணன். - தனது ‘ஓயாது உழைக்கும் இளையசூரியன்’ என்ற கட்டுரையில் சுட்டிக்காட்டி இருக்கிறார். ""ஒரு மாவட்ட ஆட்சியர், பரிந்துரைகளைச்செய்து கொடுப்பதில்லை எனப்புகாராக அவரிடம் கூறப்பட்டபோது தளபதி சொன்னார் ""அந்த மாவட்ட ஆட்சியர் முதலமைச்சரே சொன்னாலும், நியாயமாக இருந்தால் மட்டுமே அதை செய்வார்."" அந்தத் தருணத்தில் அவரது நியாய உணர்வு என்னை பூரிக்க வைத்தது"". பிறரை எடை போட்டுப்பார்க்கும் திறமையையும் அவரிடம் கண்டு வியந்திருக்கிறோம். ஒரு மாவட்ட ஆட்சியர் சமத்துவபுரம் வீடு ஒதுக்கீடு செய்வதில் தன்னிச்சையாக நடந்து கொள்கிறார் என்று ஒரு பிரமுகர் புகார் கூறினார். துணை முதல்வர் அவர்கள் சொன்னார்கள் ""உங்கள் பரிந்துரையை அவர் ஏற்காததால் குற்றம் சுமத்துகின்றீர்கள் என எண்ணுகிறேன். அந்த ஒதுக்கீட்டில் தவறே செய்ய முடியாது. அந்த அளவிற்கு ஒதுக்கீடு செய்வதில் விதிமுறைகளை வகுத்துக்கொடுக்கிறோம்"" என்று உறுதிபடக் கூறினார். - என்கிறார் அவர்.

ஆக இதன் மூலமும் ஸ்டாலின் நிர்வாகத் திறமையும் - அவர் அதிகாரிகளிடம் வைத் திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையும் பளிச்சிடுகின்றன. ம்ம்ம் இந்தச் சிறப்பிதழில் - துணை முதல்வர் ஸ்டாலி னின் குறித்து தி.மு.கழகத்தின் பொதுச் செயலாளரும் தமிழக அரசின் நிதியமைச்சருமான இனமானப் பேராசிரியர் அவர்கள் ‘பெயர் சொல்லும் பிள்ளை’ என்ற தலைப்பில் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரை - வெறும் கட்டுரை அல்ல - கழக வரலாற்றில் ஸ்டாலின் பங்கும் பணியும் - அவரது எதிர்காலம் எப்படி அமையும் என்பது பற்றியும் செதுக் கப்பட்ட கல்வெட்டு சாசனம் ஆகும். அவர் கூறுகிறார் :- ""25 ஆண்டு காலம். கலைஞர் முதல் அமைச்சராகி தமிழ்நாட்டிலே ஒரு நிலையான இயக்கமாக திராவிட முன்னேற்றக்கழகத்தை நிலைநிறுத்தி, எதிர்க்கட்சியாக வாழ வைத்து, இந்த சமுதாயத்துக்கு போராடக்கூடிய ஆற்றல்மிக்க அமைப்பாக இதைக்காப் பாற்றினார். 25 ஆண்டு காலத்தில் ஸ்டாலினும் ஒரு பெரிய வளர்ச்சி பெற்று இந்த இயக்கத்தின் சார்பாக போராடக்கூடிய அளவிற்கு ஒரு பெரும் படையின் தளபதியாக உருவாகி இருக்கும் இந்த நேரத்தில், அவரை வாழ்த்துவதற்கு அவர் வெற்றி பெறவேண் டும். வேறு யாராவது இதைவிட ஆற்றல்மிக்க தம்பி, ஆற்றல்மிக்க போராட்ட வீரர், ஆற்ற லோடு செயல் படக்கூடியவர், அனைவரையும் அரவணைத்துச்செல்லக்கூடியவர், சமுதாயத்தோடு இரண்டறக் கலந்து விடுகின்ற அந்த மனப்போக்கு கொண்ட தம்பி ஸ்ட hலினைப் போல இன்னொருவர் இருப்பதாகத்தெரியவில்லை. ஒரு குறிப்பிட்ட செயலுக்கு ஒரு இயக்கத்தை வழிநடத்த கலைஞர் பெயரைச்சொல்லுகிற வர்கள், அடுத்து யார் பெயரைச்சொல்வார்கள் என்று எண்ணிப் பார்க்கிற போது திராவிட முன் னேற்றக் கழகம் ஸ்டாலினால் தொடர்ந்து காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

 இந்த இயக்கத்திற்கு தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றக்கூடிய வல்லமை இருக்க வேண்டுமானால், ஸ்டாலின் கையிலே ஒப்படைக்கப்பட்ட அந்த வாள் என்றைக்கும் வெற்றிகரமான வாளாக இருக்க வேண்டுமானால், இன்னும் குறிப்பாக ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், இந்த சமுதாயம் சொரணையுள்ள சமுதாயமாக இருக்க வேண்டுமானால் ஸ்டாலினைப் போன்ற வர்கள் வரவேண்டும். எனக்கு ஏதோ ஸ்டாலின் இடத்திலே தனிப்பட்ட பற்று பாசம் என்று கருத வேண்டாம். நான் தனிப்பட்ட முறையில் யாரிடமும் பற்று பாசம் வைப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் கலைஞர் வாய் திறந்து அடையாளம் காட்ட முடியாத காரணத்தால் நான் அவர் சார்பாக நான் வாய் திறந்து அடையாளம் காட்டுகிறேன்."" - என்று ஸ்டாலினை - கழக உடன்பிறப்புகளுக்கும் தமிழகப்பொது மக்களுக்கும் அடையாளம் காட்டி இருக்கிறார். இதை விடப் பெரிய நற்சான்று வேறு என்ன இருக்க முடியும்?

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் வாங்கியது போல என்பார்களே; அதுதானே இது?

‘முரசொலி’க்கு ஆதரவாகப் புதுவையில் தினமணி ஆசிரியர் எடுத்துக்காட்டிய ராஜாஜியின் பதில்!

ஞாயிறன்று (28.11.2010) புதுச்சேரியில் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் எழுதிய தலையங்கங்களின் தொகுப்பு நூல்களின் அறிமுக விழா நடைபெற்றது. விழாவில் பேசிய தினமணி ஆசிரியர் - ""தினமணி தலையங்கங்கள் விவாதப்பொரு ளாக வேண்டும்"" என்கிற தனது ஆசையை வெளியிட்டுள்ளார்.
அவரது பேச்சின் ஒரு முக்கியப்பகுதி வருமாறு:-
"தினமணி தலையங்கங்களைப்பொறுத்த வரை, எனக்குத் தெரிந்த உண்மை விஷயங் களை அதில் பதிவு செய்கிறேன். என் மனதுக்கு எது சரி, உண்மை என்று படுகிறதோ அதைச் சீர் தூக்கிப்பார்த்து மக்களின் குரலாக தலையங்கம் வெளிவருகிறது. எனது கருத்துகளுக்கு மாற்றுக் கருத்தும் இருக்க முடியும். எந்த ஒரு விஷயத்துக்கும் விவாதம் தேவை. விவாதம் சமுதாய வளர்ச்சிக்கு அடிப்படையானது. தினமணி தலையங்கங்கள் மக்களிடம் பேசப்படும் விவாதப் பொருளாக மாறவேண்டும் என்பது தான் எனது விருப்பம். விவாதம் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டும் என்பது தான் அதன் நோக்கம். ஊடகங்கள் பற்றி நான் விமர்சனம் செய்து எழுதும்போது, கண்ணாடி மாளிகையில் இருந்து கொண்டு கல்லெறியக்கூடாது என்று எனது சகபத்திரிகையாளர்கள் சிலர் கண்டனம் தெரிவிக்கிறார்கள். மக்கள் இன்னமும் பத்திரிகைகளின்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கை சிதைந்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் எழுதப்பட்டவைதான் ஊடகங்கள் பற்றிய விமர்சனமும். அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதால் அதைத்திருத்த முடியுமா என்று ராஜாஜியிடம் அவரது பேரன் ராஜ்மோகன் காந்தி ஒருமுறை கேட்டார்.  ""அரசைத் திருத்துவதற்காக மட்டுமல்ல, தவறைச் சுட்டிக்காட்டாமல் விட்டுவிட்டால்; அதற்குத் தீர்வை முன்வைக்காமல் போனால், வரும் தலைமுறையினர், இந்த தவறை சுட்டிக்காட்ட கடந்த தலைமுறையில் ஒருவர் கூடவா இருக்கவில்லை என்று நம்மை ஏளனம் செய்துவிடுவார்கள். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதற்காகத்தான் ‘ஸ்வராஜ்யா’ இதழில் ""அன்புள்ள வாசகருக்கு"" பகுதியை எழுதுவதாக மூதறிஞர் ராஜாஜி சொன்னாராம். நான் ராஜாஜியாக இல்லாவிட்டாலும் எனது கருத்துகளைப்பதிவு செய்யவேண்டும் என் பதற்காக எழுதுகிறேன்"". - என்று உதாரணம்அல்லது மேற்கோள் காட்டி இருக்கிறார் அவர்.
                                                                                  ***
 ராஜாஜியின் பதில் குறித்து தினமணி ஆசிரியர் நினைவுபடுத்தியிருப்பது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, ‘முரசொலி’க்கு நூற்றுக்கு நூறு - முழுமை யாகப் பொருந்துவதாக இருக்கிறது. எப்போதும் தி.மு.க.வையும், முதல்வர் கலைஞரையும் இழித்தும் பழித்தும் எழுதும் பார்ப் பனர் ஏடுகள், எப்போதாவது சில சமயங்களில் - கலைஞரை - கலைஞர் அரசின் சாதனைகளை தங் களையும் அறியாமலே பாராட்டி எழுதி விடுவதும் அபூர்வமாக நிகழும். அப்போதெல்லாம், முரசொலி - அந்தப் பாராட்டுகளை மறுபிரசுரம் செய்து - தினமணி பாராட்டு - தினமணி படப்பிடிப்பு என்றெல்லாம் தலைப்பிடுவது உண்டு.

அதை சுட்டிக்காட்டி - பார்ப்பன ஏடுகளில் ""தி.மு.க.வைப்புகழ்ந்து எழுதினால் பாராட்டு, புகழாரம் என்று கூறிப்பெருமைப் படுவார்கள். ஆனால் கண்டித்து எழுதி விட்டாலோ, ‘பார்ப்பான் - பாப்பாரப்புத்தி’ என்றெல்லாம் சாதியை இழுத்து வசைபாடுவார்கள். இது தான் அவர்களது வழக்கம்"" என்று தி.மு.க.வைக்கேலிசெய்து எழுதுவார்கள். வாசகர்களிலும் சிலபேர், ""தினமணி என்ன எழுதினால் உங்களுக்கு என்ன? எழுதினால் எழுதிவிட்டுப் போகட்டுமே; இப்படிப்பட்ட அவதூறுப் பேர்வழிகளுக்கு எல்லாம் தலைவர் கலைஞரே - தனது ஏராளமான பணிகளுக்கிடையே நேரத்தை ஒதுக்கி - புள்ளி விவரம் காட்டி பதில் எழுதவேண்டுமா? இப்படி கலைஞர் அக்கறை எடுத்துக்கொண்டு - அவர்களை மதித்து பதில் எழுதுவதால்தான் - அவர்களுக்கு ‘கலைஞரே நமக்கு பதிலளிக் கிறார்’ என்ற கித்தாப்பு மிகுந்து - மேலும் மேலும் கலைஞரைத் தாக்கி எழுதுவதிலேயே குறியாய் இருக்கிறார்கள்"" - என்ற வருத்தத்தோடு முரசொலிக்கு தொலைபேசி மூலமோ அல்லது நேரில் சந்திக்கும் போதோ கேட்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் வருத்தத்துக்கு பதிலளிப்பது போலவே - புதுவையில் ராஜாஜியின் பதிலை உதாரணம் காட்டிப் பேசிய தினமணி ஆசிரியரின் பேச்சு அமைந்திருக்கிறது. தினமணி,தினமலர்,ஆனந்தவிகடன், ஜூனியர் விகடன்,குமுதம் ரிப்போர்ட்டர்,துக்ளக் போன்ற பார்ப்பன ஏடுகள் நாள் தவறாமல், இதழ் தோறும் கலைஞர்மீதும் - கலைஞர் அரசுமீதும், கலைஞர் குடும்பத்தினர் மீதும் தங்களது கற்பனைக்கேற்றவாறு இல்லாததை யும் பொல்லாததையும் இட்டுக்கட்டி - சேறுவாறி இறைத்து வருகின்றன!

 இந்த ஏட்டாளர்களின் இஷ்டதெய்வமான ஜெயலலிதாவோ, நாள் தவறினாலும் எனது பொய் தவறாது என்ற ரீதியில் - கலைஞர்மீது புழுதிவாரித் தூற்றிக் கொண்டே இருக்க, அவரது அறிக்கைகளில் காணப்படுவ தெல்லாம் அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு என்று தெரிந்திருந்தும் - அந்தப் பித்தலாட்ட அறிக்கைகளை, அவர் தங்கள் சுயசாதியைச் சேர்ந்த பார்ப்பனத்தி அவரே - மீண்டும் முதல்வராக வேண்டும் அவர்மூலம் ஆரியமாயையும் - மனுதர்ம (அ) நீதியின் படிக்கான பார்ப்பன ஆதிக்கமும் மீண்டும் நிலை நாட்டப்பட வேண்டும் - என்கிற நெஞ்சுகொள்ளாத ஆசையுடன் - பெரிது பெரிதாகப் பிரசுரித்து வருகின்றன! இன்றைய பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் பெரும்பாலும் பார்ப்பன மயமாகவே காட்சியளிக்கின்றன. ஆகவே அவை மனம் போன போக்கில் கலைஞரைப்பற்றிய செய்தி களை திரித்தும், மறைத்தும் - வெளியிடுவதாகவே செயல்பட்டு வருகின்றன.

பார்ப்பன ஏடுகளில் தி.மு.க.வுக்கும் கலைஞருக்கும் எதிராக இவ்வாறு வெளியிடப்படும் பொய்களை எல்லாம் - பொய் சொல்கிறவர் பெரியவரா சிறியவரா என்ற பேதம் பாராது, அந்தப்பொய்களின் முதுகெலும்பை முறித்திடும் வகையில் தகுந்த புள்ளிவிவரங்களின் ஆதாரத்தோடு - மெத்தச் சிரமம் எடுத்துக்கொண்டு முதல்வர் கலைஞர் ஆணித்தரமான பதில்களை - மறுக்க முடியாத விளக்கங்களை நாள்தோறும் சளைக்காமல் எழுதிக் கொண்டே இருக்கிறார். அவர் இப்படி மறுப்பும் விளக்கமும் எழுதா விட்டால் - எதிர்காலத்தில் ஒரு ஐம்பது அல்லது அறுபதாண்டுகளுக்கு பிறகு தமிழக அரசியல் பற்றி ஒரு ஆய்வு நூல் எழுத யாராவது முற்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஆய்வாளருக்கு தினமணி போன்ற பார்ப்பன ஏடுகள் கிடைக்கும் அல்லது தரப்படும். இந்த ஏடுகளில் கலைஞரைப் பற்றியும் தி.மு.க. பற்றியும் வந்துள்ள செய்திகள். உண்மையா பொய்யா இவைகளுக்கெல்லாம் தி.மு.க.வும் கலைஞரும் பதிலளித்தது உண்டா என்று தெரிந்துகொள்ள ‘முரசொலி’யைத் தேடிப் படிப்பார். அப்போது அவர் முரசொலியில் - கலைஞர் கடிதம், கலைஞர் பதில்கள், கலைஞரது பேருரைகள் மூலம் பார்ப்பன ஏடுகளின் பொய்களையும், அவற்றின் தி.மு.க. துவேஷம் சாதிவெறி ஆகியவை களையும் ஐயம் திரிபறத்தெரிந்து தெளிவடைவார். இல்லாவிடில் எதிர் காலத்தில் எழுதப்படும் ஆய்வு நூல்கள் பார்ப்பன ஏடுகளில் வெளிவந்த விஷமச் செய்திகளின் அடிப் படையிலேயே எழுதப் படும் அபத்தக் களஞ்சியங்கள் ஆகிவிடும். - என்பதற்காகவே கலைஞர் - தகுதி யற்றவர்களின் பொய்களைக்கூட தவறாமல் மறுத்து எழுதுவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
- இதைத்தான் தமது பேரன் ராஜ்மோகன் காந்தியின் கேள்விக்கு ராஜாஜி அளித்த பதில் என்று புதுவையில் தினமணி ஆசிரியர் நினைவு கூர்ந்திருக்கிறார். ராஜாஜியின் பதில், தினமணி தலையங்கங்கள் விவாதப் பொருளாக வேண்டும். - எனும் தினமணி ஆசிரியரின் கருத்தின் அடிப்படையிலேயே ‘முரசொலி’யும் தினமணியின் விஷமப் பிரச்சுரத்துக்கு  உடனுக்குடன் சூடாக பதிலளித்துக் கொண்டிருக்கிறது.
                                                                          ***
 அதுசரி! ஏன் தினமணி ஆசிரியரைக் குறிப்பிடும் போதெல்லாம் முரசொலி வெளியிடும் பெட்டிச் செய்திகள் - கட்டுரைகள் (கலைஞர் எழுதுபவை அல்ல) ஆகியவற்றில் எல்லாம் அவரை ஆர்.எஸ்.எஸ். அய்யர் - என்று சாதியைக் குறிப்பிட்டு எழுதப்படுகிறதே; அது ஏன்? என்பது சிலரது கேள்வி: தினமணி தன்னை ‘நடுநிலை’ நாளேடு என்று கூறிக்கொள்கிறது. ஆனால் நடை முறையில் அது - தி.மு.க. எதிர்ப்பு ஏடாகவும் - ஜெயலலிதா - பா.ஜ.க. ஆதரவு ஏடாகவும், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறது என்ற ஒரு காரணத்திற்காகவே காங்கிரஸ் எதிர்ப்பு ஏடாகவும் வெளி வந்து கொண்டிருக்கிறது.  தினமணியின் நடுநிலை வேஷத்தைக்களைந்து அதன் உண்மை சொரூபத்தை பொதுமக்களிடம் அடையாளம் காட்டவே - அதன் ஆசிரியர் ஆர்.எஸ்.எஸ்.மதவெறி இயக்கத்தைச்சேர்ந்தவர் - சாதியில் திராவிடர் இயக்கத்தின் ஜென்மவைரி என்பதை யெல்லாம் சுருக்கமாகக் குறிப்பிடும் வகையில் ஆர்.எஸ்.எஸ். அய்யர் என்று குறிப்பிட வேண்டியதாக இருக்கிறது. இதனை அவர் இதுவரையில் மறுக்கவே இல்லையே, ஏன்?
        
                                           - சின்னகுத்தூசி
                                        நன்றி:முரசொலி(30-11-2010)