ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து - சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்க பிரிவின் விசாரணையும், உச்சநீதிமன்ற விசாரணையும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி நீதிபதி சிவராஜ் பாட்டில் விசாரணையும் நடைபெற்று வருகிறது. எனினும் இந்த விசாரணைகளுக்கு மாறாக பாராளுமன்றத்தில் கூட்டுக்குழு விசாரணை தான் வேண்டுமென்று பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடம்பிடித்து வருகின்றன. மேற்கண்ட விசாரணைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கு எதிர்க்கட்சிகள் கூறும் ஒரே காரணம் நாடாளு மன்ற கூட்டுக் குழு விசாரணை நடந்தால்தான் பிரதமரை அழைத்து விசாரிக்க முடியும். நாடாளுமன்ற பொதுகணக்குக் குழுவுக்கு பிரதமரை அழைத்து விசாரணை நடத்த அதிகாரம் இல்லை. ஆகவே நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று திரும்ப திரும்ப எதிர்க்கட்சியினர் கீரல் விழுந்த கிராமபோன் ரிக்கார்டு போல ஓயாமல் கூறி வந்தனர்.
சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், ""பொதுகணக்குக் குழுவுக்கு பிரதமரை அழைத்து விசாரணை நடத்த அதிகாரம் இல்லா விட்டால் என்ன நானே பொதுகணக்குக் குழுவுக்கு நேரில் ஆஜராகி ஸ்பெக்ட்ரம் தொடர் பாக அவர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்துக்கும் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன்"" என்று அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்பு காரணமாக தங்களது ஒரே குற்றச்சாட்டும் தகர்ந்து தவிடு பொடி ஆகிவிட்டதை உணர்ந்த எதிர்க்கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களது குற்றச் சாட்டை மறுக்கும் வகையில் பிரதமர் தாமாகவே முன்வந்து விசாரணையை சந்திக்க தயார் என்று கூறிவிட்டதை அவர்களால் தாங்கிகொள்ள முடியவில்லை. மூர்க்கனுக்கு ஒரே மதி என்பதுபோல நாடாளுமன்ற கூட்டு குழுதான் வேண்டும். பிரத மரின் இந்த அறிவிப்பை எல்லாம் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். ஏற்று கொள்ளும் வரையில் பாராளுமன்றத்தை நடத்த விடமாட்டோம் என்று விரக்தி வேதனையின் விளிம்பில் நின்று கொக் கரித்து வருகின்றனர். - இதுகுறித்து மத்திய விவகாரத்துறை அமைச்சர் சென்னையில் நிருபர்களிடம் விளக்கம் அளித்திருக்கிறார்.
நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு கோரிக்கை வைக்க பா.ஜ.க.வுக்கு தகுதி என்ன இருக்கிறது. பா.ஜ.க. ஆட்சி மத்தியில் நடந்த காலத்தில் பா.ஜ.க. முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன் ஆயுத பேரம் தொடர்பாக லஞ்சம் வாங்கி தனது அலமாரியில் வைத்து கொண்டதை படம் எடுத்தே காட்டப்பட்டது. அவர் மீது பா.ஜ.க. எடுத்த நடவடிக்கை என்ன? அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. 1992ஆம் ஆண்டு ராணுவத்திற்கு தளவாடங்கள் வாங்கியது. 1992ஆம் ஆண்டு சவப்பெட்டி வாங்கியது. 2001ஆம் ஆண்டு நடந்த பங்கு மார்க்கெட் ஊழல். 2003ஆம் ஆண்டு கோகோ கோலாவில் பூச்சி மருந்து தொடர்பான குற்றச்சாட்டு. - ஆகிய நான்கு ஊழல்களுக்காகவும் பா.ஜ.க. ஆட்சி காலத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவற்றினால் எந்த முடிவும் எட்டப்பட வில்லை என்பதுதானே வரலாற்று உண்மை. நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை யால் எந்தவித பலனும் இல்லை. நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் உறுப்பின ராக ஒருவர் வரவேண்டும் என்றால் அவர் சார்ந்துள்ள கட்சியிடம் பதினேழு எம்.பி.க்கள் இருக்க வேண்டும். அப்படியானால் அந்த குழுவில் பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் முட்டுக்கட்டை போடும் அ.தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகளால் இடம் பெறமுடியாது. ஊழல் பற்றி பேசும் பா.ஜ.க. கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா அரசு நிலத்தை குறைந்த விலைக்கு குடும்பத்தின ருக்கு ஒதுக்கியதற்காக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதனை அவரே ஒப்புக் கொண்ட பின்னர் கூட அவர்மீது பா.ஜ.க. நடவடிக்கை எடுக்கவில்லை.
நீராராடியா முன்னாள் பா.ஜ.க. அரசில் விமானத்துறை அமைச்சராக மத்தியில் இருந்த அனந்த குமாருடன் தொடர்பு வைத்திருக்கிறார். அவர் அரசின் ரகசிய தகவல்களை நீரா ராடியாவிடம் கொடுத்திருக்கிறார். இது தேசத் துரோகம் அல்லவா. எனவே இந்த பிரச்சினைக் குறித்து அனந்தகுமாரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரதமரை நான் கேட்டுக் கொள்கிறேன் என்பதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர் களிடம் தெரிவித்திருக்கிறார். இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தை யும் நாம் ஒப்பிட்டு பரிசீலிக்க வேண்டும். பொதுக்கணக்குக் குழுவின் தலைவராக எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவரே தலை வராக இருக்கவேண்டும் என்பது விதி. இதன்படி இப்போது பா.ஜ.க.வின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷிதான் பொதுக்கணக்குக் குழுவின் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். அதுமட்டுமா? பொதுக்கணக்குக் குழுவில் மொத்தம் 22 பேர் உறுப்பினர்க ளாக உள்ளனர். அதில் 10 பேர் மட்டுமே ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள். மீதி 12 பேரும் எதிர்க் கட்சிகளை சேர்ந்தவர்களே. இப்படி பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர் களிலும் எதிர்க்கட்சிகாரர்களே இடம் பெற்றுள்ள நிலையில் அந்த விசாரணையை ஏற்றுக்கொள்ள மாட்டோம். கூட்டுக் குழு விசாரணையே தேவை என்று எதிர்க்கட்சிகள் கூக்குரல் இடுவது விசித்திரமா அல்லது வேதனையா? எப்படி பரிசீலித்துப் பார்த்தாலும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையைவிட பொது கணக்குக் குழு விசாரணையே சிறந்தது என்பது தெளிவாகும். பிரதமர் மன்மோகன்சிங் டெல்லியில் காங்கிரஸ் மாநாட்டில் அளித்த வாக்குறுதியை உறுதி செய்வதைப் போல பொதுக் கணக்குக் குழுத் தலைவருக்கே தம் கைபட ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில் ""நாடாளுமன்ற குழு முன்பாக ஆஜராக பிரதமர் தயங்குகிறார் என்று பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. அதில் உண்மை யில்லை என்பதை நிரூபிக்கும் வகையிலே நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு முன்பு ஆஜராக நான் தயாராக உள்ளேன். அலைகற்றை ஒதுக்கீடு தொடர்பாக என்னிடம் விளக்கம் கேட்கலாம்"" எனக் குறிப்பிட்டிருக்கிறார். தொடாந்து இதற்கு முன் எந்த ஒரு பிரதமரும் இது போன்ற நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு முன்பு ஆஜரானது இல்லை. எனினும் நான் ஆஜராகி விசார ணையை சந்திக்க தயாராகயிருக்கிறேன். எனது அறிவுக்கு தெரிந்த வரையில் சம்மந்தப்பட்ட துறையின் செயலர் அல்லது அரசுத் துறை நிறுவனங்களின் தலைவர்கள் தான் பொதுக் கணக்குக் குழு முன்பு ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் 3 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக பிரத மருக்கும் தொலைத் தொடர்பு அமைச்சருக்கும் அதுபோல பிரதமர் அலுவலகத்துக் கும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சகத்துக்கும் இடையே நடந்த தகவல் பரிமாற்ற ஆவணங்களின் நகல்களை பொதுக் கணக் குக் குழு ஏற்கனவே கேட்டு பெற்றுள்ளது என்று தமது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். மக்களவை விதிகளின்படி பொதுக் கணக்குக் குழுவிடம் விளக்கமளிக்க ஒரு அமைச்சரை அழைக்க முடியாது. பொதுக் கணக்குக் குழு முன்பு ஆஜராக பிரதமர் விருப்பம் தெரிவித்திருப்பது இதற்கு முன் ஒருபோதும் நடந்திராத விஷயம். வழக்கத்துக்கு மாறானது என்பதால் பிரதமர் ஆஜராகி விளக்கம் அளிப்பதற்கான வழி முறைகளை மக்களவை தலைவர் உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் விருப்பம் குறித்து மக்களவைத் தலைவர் மீராகுமாரிடம் ஆலோசிக்க பொதுக் கணக்குக் குழு முடிவு செய்துள்ளது. விளக்கமளிக்க பிரதமரை அழைக்க விதிகளில் இடம் இல்லையென்றாலும் அவர் தாமாகவே முன்வந்து விளக்கமளிக்க விருப் பம் தெரிவித்திருப்பதால் அதை பொதுக் கணக்குக் குழு தலைவர் ஏற்றுக் கொள்ள லாம் என்று கருதப்படுகிறது. பொதுக் கணக்குக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷியும் ""ஆவணங்களை ஆய்வு செய்த பின்னரே பிரச்சினை குறித்து மத்திய அரசு ஏற்கனவே அளித்துள்ள ஆவணங்களை ஆய்வு செய்த பின்னரே பிரதமரின் கடிதம் குறித்து முடிவு செய்ய முடியும். விதிகளையும் நடைமுறைகளையும் ஆய்வு செய்து அனைவரிடமும் கலந்து ஆலோசித்து அதன்படி உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்"" என்று குறிப்பிட்டிருக்கிறார். விதிகளில் இடம் இல்லாவிட்டாலும் விதி விலக்காக பொதுக் கணக்குக்குழு முன்பு ஆஜராகி விளக்கமளிக்க தயார் என்று இந்த நாட்டின் பிரதமர் நேர்மை, நாணயத்தின் அடிப்படையில் அறிவித்திருக்கிறார். இதன்பிறகும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைதான் தேவை என்று பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் கூறுவார்களேயானால் அது உண்மையை கண்டறியும் உயரிய நோக்கத்தினால் அல்ல. அரசியலில் ஆதாயம் தேடும் முயற்சியே என்பது பொது மக்கள் மத்தியில் உறுதிப்பட்டுவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.
நன்றி:முரசொலி 29-12-2010
No comments:
Post a Comment