Search This Blog

Thursday, 20 January 2011

நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையும், அமைச்சர் சிதம்பரத்தின் வேண்டுகோளும்!


ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் பிரிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக - ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக - ஆந்திரத்தில் பல்வேறு கட்சிகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்திருக்கின்றன. இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என்று மத்திய அரசு, உச்சநீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஐந்து பேர் கொண்ட கமிட்டியை கடந்த பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி அமைத்தது. அந்தக் கமிட்டி ஆந்திரா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 11 மாதங்களாக பல்வேறு தரப்பினரிடமும் கருத்து களைக் கேட்டு ஆய்வு நடத்தியது.

கடந்த டிசம்பர் 30-ம் தேதிஅன்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் இரண்டு பகுதிகள் கொண்ட 461 பக்க அறிக்கையைக் கொடுத்தது.  அந்த அறிக்கையை 6.1.2011 வியாழன்று விவாதிப்பதற்காக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து டெல்லியில் ப. சிதம்பரம் கூட்டம் நடத்தினார். இதில் ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி மற்றும் காங்கிரஸ், பிரஜா ராஜ்யம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மஜ்லிஸ் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதி கள் கலந்து கொண்டார்கள். ஆனால் தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்புச் செய்துவிட்டன. நீதிபதி கிருஷ்ணா தமது பரிந்துரைகளை ஒரு தலைப்பட்சமாக எல்லோர் மீதும் திணிக்க முயலாமல் எல்லாத் தரப்பினரும் தம்மிடம் தெரிவித்துக் கருத்துக்களை எல்லாம் மிகுந்த பொறுப்புணர்வுடன் ஆய்வு செய்து அனைத்துத் தரப்பினரும் கூறிய கருத்துக்கள் உள்ள டங்கிய ஒரு நடுநிலை மிகுந்த அறிக்கையை அளித்து இருக்கிறார்.
அந்த அறிக்கையில் எடுத்த எடுப்பில் அவர் தமது கருத்து என்ன என்பதையும் அழுத்தம் திருத்தமாகத் திட்ட வட்டமாகக் குறிப்பிட்டு இருக்கிறார். ஆந்திராவை ஆந்திரம் என்றும், தெலுங்கானா என்றும் பிரிக்கத் தேவையில்லை. அது மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உகந்ததும் அல்ல. இப்போது இருப்பது போல ஆந்திரா பிரிக்கப்படாத ஒரே மாநிலமாகத் தொடர்ந்து நீடிப்பதே நல்லது என்று அவர் தமது சொந்தக் கருத்தை ஒளிவு மறைவுக்கு இடமில்லாமல் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு அவர் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண 6 தனித்தனி வழிகள் உள்ளன. அந்த ஆறு வழிகளையும் ஆராய்ந்து பார்த்து எது நல்ல வழியோ அதனை ஆந்திர மாநிலத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒற்றுமையுடன் தேர்வு செய்து அமல் நடத்துவதன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம். அதுமட்டுமின்றி தாம் தெரிவித்த 6 யோசனைகளில் 3 யோசனைகள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதையும் அவர் ஒப்புக் கொண்டு, மீதமுள்ள 3 யோசனை களில் ஒன்றை பிரச்சினைக்குத் தீர்வாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கோரி யிருக்கிறார்.

இனி நீதிபதி கிருஷ்ணா கூறிய 6 வழிகள் என்னென்ன என்பதைப் பரிசீலிக்கலாம்.
 1) ஆந்திரம் இப்படியே நீடிப்பதே சிறந்தது: ஆந்திர மாநிலம் பிரிக்கப்படாமல் இப்படியே நீடிப்பதே அதன் தெலுங்கானா, ராயல சீமை, கடலோர மாவட்டங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு நல்லது. தெலுங்கானா பகுதியின் வளர்ச்சிக்கு சட்டப்பூர்வ பிராந்திய கவுன்சில் போன்ற அமைப்பை ஏற்படுத்தி வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டுவது, நிறை வேற்றுவது, நிர்வகிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் பின்தங்கிய நிலைமையை மாற்ற முடியும். ஆந்திரத்தை ‘‘முன்னேற்ற இதுவே சிறந்த வழி"".
 2) வேறு வழியே இல்லை என்றால் ஆந்திர மாநிலத்தை (ராயல) சீமா ஆந்திரா, தெலுங் கானா என்று இரு தனித்தனி மாநிலங்களாகப் பிரித்து விடலாம். இதனால் தனி மாநில கோரிக்கையைப் பூர்த்தி செய்தோம் என்ற சாதனை மட்டுமே மிஞ்சும். சமூக, பொரு ளாதார ரீதியாக பின் தங்கிய நிலைமை இந்த ஒரு நடவடிக்கையாலேயே மாறிவிடாது.
 3) (ராயல) சீமா ஆந்திரத்தையும் தெலுங்கானாவையும் பிரித்து விட்டு இரு மாநிலப் பகுதிகளுக்கும் தனித்தனி தலைநகரங்களை உருவாக்க அல்லது தேர்வு செய்யச் சொல்லலாம். ஹைதராபாத் நகரம் இப்போது தகவல் தொழில் நுட்பக் கேந்திரமாக உருவெடுத்தி ருப்பதாலும் ஆந்திரத்தின் அனைத்துப் பகுதி மக்களுடன் பிற மாநிலத்தவர்களும் கணிசமாகக் குடியேறியிருப்பதாலும் வெளிநாட்டு நிறு வனங்கள் உள்பட ஏராளமான நிறுவனங்கள் கோடிக் கணக்கான ரூபாய்களை இங்கு முதலீடு செய்திருப்பதாலும், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தேவையான எல்லா அடித்தள கட்டமைப்புகளும் இங்கு இருப்பதாலும் ஹைதராபாத்தை மட்டும் மத்திய ஆட்சிக்குட்பட்ட பகுதியாக (யூனியன் பிரதேசமாக) அறிவித்து விடலாம். அதன் நிர்வாகத்தை, பாதுகாப்பை மத்திய அரசு நேரடியாகத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு விடலாம்.
4) (ராயல) சீமா ஆந்திரா, தெலுங்கானா என்ற இரு பகுதிகளைப் பிரித்துவிடலாம். ஹைதராபாத் நகரப் பகுதியுடன் அருகில் உள்ள பல நிலப் பகுதிகளை இணைத்து மத்திய ஆட்சிக்குட்பட்ட பகுதியாக அறிவிக்கலாம். நலகொண்டா மாவட்டம் வழியாக குண்டூர் மாவட்டம் வரை யிலும் நில எல்லையைச் சேர்க்கலாம். அதே போல, மஹபூப்நகர் மூலம் கர்நூல் மாவட்டம் வரையில் (ராயல சீமையில் உள்ள) பகுதியை ஹைதராபாத்துடன் இணைக்கலாம்.
 5) தெலுங்கானாவையும் (ராயல) சீமா ஆந்திராவையும் பிரித்து விடலாம். தெலுங்கானா வுக்கு ஹைதராபாத்தைத் தலைநகரமாக்கி விடலாம். (ராயல) சீமா ஆந்திரா புதிய தலை நகரைத் தேர்வு செய்து கொள்ளட்டும். 6) ஆந்திரத்தைப் பிரிக்காமல் இப்போதுள்ள படியே ஒரே மாநிலமாக வைத்துக் கொள்ள லாம். தெலுங்கானாவின் பின்தங்கிய பகுதிகளை முன்னேற்ற அரசியல் சட்டம் அளித் துள்ள வழிகளின்படி, சட்டப்படி உருவாக்கப்பட்ட நிர்வாக அமைப்புகளைக் கொண்டு பிராந்திய கவுன்சிலை ஏற்படுத்தலாம். இதற்கு போதிய நிதியை ஒதுக்குவதுடன் செயல்படுவதற்கான அதிகாரங்களையும் வழங்கலாம். இப்படிச் செய்வதன் மூலம் பின் தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்கு தனி முக்கியத்துவம் அளிக்கலாம். - என்பதே நீதிபதி கிருஷ்ணா தொகுத்து வழங்கியுள்ள ஆறு வழிகளாகும்.
நீதிபதி கிருஷ்ணா தமது அறிக்கையின் கடைசிப் பகுதியில், ""தெலுங்கானா கிளர்ச்சி என்பது பல்லாண்டுகளாக ஆந்திரத்தில் நடைபெற்று வருகிறது. இது உணர்ச்சிமய மானது. இந்தக் கோரிக்கையை மறுப்பதால் மாவோயிஸ்ட் இயக்கம் வலுப்பெறும் ஆபத்தும் இருக்கிறது. தனி மாநில கோரிக்கையை நியாயமற்றது என்று கூறிவிட முடியாது. சமூக, பொருளாதார ரீதியாக ஆந்திரத்தின் பிற பகுதிகளைவிட தெலுங்கானாப் பகுதி பின்தங்கித் தான் இருக்கிறது. எனவே, ஆந்திரத்தை பிரிக்கக் கூடாது என்ற முடிவை தெலுங்கானா ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்க்கக் கூடும்.
ஆட்சி நிர்வாகத்தில் இருப்பவர்கள் பொறுமையாகவும், திறமையாகவும் கிளர்ச்சியாளர் களை கையாள வேண்டும்.  அவர்கள், நம்பிக்கை கொள்ளும் வகையில், அரசியல் நடவடிக்கைகள் அமைந்தால் இந்தக் கோரிக்கையை ஆதரிப்பவர்களும் மனம் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது"" என்று உள்ளது உள்ளபடி இருதரப்பு நியாயங் களையும் எடுத்துக் கூறி ஆலோசனை வழங்கியிருக்கிறது, ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை. நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை பற்றி எல்லோரும் எதிர்பார்த்தது போலவே தெலுங்கானா ஆதரவாளர் கள்அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும், ‘‘ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையை நாங்கள் ஏற்க மாட்டோம். அதனை முற்றாக நிராகரிக்கி றோம். தனித் தெலுங்கானா பிரித்து தருவது ஒன்றே வழி. அதுவல்லாது கூறப்படும் எந்தவித யோசனைகளையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்"" என்று ஒருமித்த குரலில் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்கள்.

நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை பற்றி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விடுத்துள்ள வேண்டுகோள் எல்லோராலும் கவனிக்கத்தக்கது. ""ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி 6 யோசனைகளைத் தெரிவித்து அவற்றின் சாதக பாதகங்களை யும் கூறியிருக்கிறது. அவற்றில் 3 யோசனைகள் நடைமுறைப்படுத்த சாத்தியம் இல்லாத வை என்றும் கூறி அவற்றை அதுவே நிராகரித்தும் உள்ளது. ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி தீவிரமாக ஆய்வு நடத்தி தாக்கல் செய்துள்ள இந்த அறிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும், குழுக்களும், தனிப்பட்ட நபர்களும் மதிப்பு அளிக்க வேண்டும். இந்த அறிக்கையை கவனமாகப் படித்து விரைவில் உரிய முடிவை எடுக்க வேண்டும். இது தொடர்பாக அரசு கூட்டிய அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் சில கட்சி கள் கலந்து கொள்ளாதது வருத்தம் அளிப்பதாகவே இருக்கிறது. அந்தக் கட்சிகளுக்கும் ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையின் பிரதிகள் அனுப்பி வைக்கப்படும். மேலும் இந்த அறிக்கை உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்திலும் வெளியிடப்படும். இந்த மாத இறுதியில் மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும்"" என்று தமது வேண்டுகோளில் குறிப்பிட்டு இருக்கிறார், அமைச்சர் ப.சிதம்பரம். ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி எந்த அளவுக்கு பாரபட்சமாகவோ ஒருதலைச் சார்புடையதாகவோ இல்லாத நடுநிலை வாய்ந்த நல்ல அறிக்கையோ, அதுபோலவே இந்தப் பிரச்சினையில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் அணுகு முறையும், பிரச்சினையின் நிரந்தத் தீர்வுக்கு எது நியாயமானதாகவும், நேர்மையானதாகவும் இருக்குமோ அதையே ஏற்று மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வரும் என்பதையே பிரதிபலிப்பதாக இருக்கிறது!


நன்றி:முரசொலி 08-01-2011

No comments:

Post a Comment