Search This Blog

Wednesday, 19 January 2011

நல்ல தலையங்கம்; அதிலேயும் தி.மு.க. அரசுக்கு எதிரான விஷமப் பிரச்சாரம்!

 25.12.2010 சனியன்று தினமணி நாளேடு குரல்கொடுப்போம், தடுப்போம் என்ற தலைப் பிட்டு முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து ஒரு சிறந்த தலையங்கத்தை எழுதி யிருக்கிறது. அதிலே முதல் பாராவிலேயே, ""பெரியாறு அணை பலம் இழந்துவிட்ட தாகக் கூறி புதிய அணையைக் கட்டியே தீருவது என்று அனைத்து முயற்சிகளையும் கேரளா அரசு செய்து கொண்டிருந்தாலும், தமிழகத்துக்குச் சாதகமான வாதங்கள் மேலும் மேலும் வலுப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனால் இதை தமிழக அரசு எந்த அளவுக்கு தீவிரமாக கவனத்தில் கொண்டு செயல் படப் போகிறது என்பதைப் பொறுத் திருக்கிறது கேரள அரசின் புதிய அணை கட்டும் திட்டம்"" - என்று எடுத்த எடுப்பிலேயே முல்லைப் பெரியாறு பிரச்சினையில் ஏதோ அலட்சியமாக இருப்பதுபோல் - குறை கூறும் வகையில் குறிப்பிட்டுள்ளார் தலையங்கம் எழுதிய தினமணிஆசிரியர். எனினும் உண்மையை அதாவது தமிழக அரசு முல்லைப்பெரியாறு பிரச்சினையைச் சரியாகவே கையாள்கிறது, கவனமாகவே செயல்படுகிறது என்பதை ஒப்புக்கொள்ளும் வகையில் அந்த தலையங்கத்தில் நாளாவது பாராவில், ""115 ஆண்டு கால அணையின் பலம் குறித்து கேரள அரசு எழுப்பிய அனைத்துக் கேள்வி களுக்கும் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. அணையைப் பலப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் திருப்திகரமாகவும் செய்துள்ளது.  இதில் கேரள அரசு வேண்டுமானால் அதிருப்தி தெரிவிக்கலாமே ஒழிய தொழில் நுட்ப வல்லுனர்கள் யாருமே இந்த அணையின் பலம் குறித்தோ அல்லது அணையைப் பலப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தோ இதுவரை எந்த விதமான எதிர்க் கருத்துக்களையும் முன் வைக்கவில்லை. இதுவே தமிழக அரசுக்கு ஒரு சாதகமான நிலைதான்""  என்று எழுதியிருக்கிறது தினமணி. அப்படி யானால் முதல் பாராவில் தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை என்பதுபோல எழுத வேண்டிய அவசியம் என்ன? தலையங்க ஆசிரியருக்கே வெளிச்சம். இதனை தினமணி ஆசிரியரும் உணர்ந்து விட்டார் என்பதற்கு அடையாளமாகத் தலையங்கத்தின் இறுதிப்பகுதியில் மீண்டும் தி.மு.க. மீது வேண்டுமென்றே சேறுவாரி இரைப்பதுபோல, - ""இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையிலும் சி.பி.ஐ. சோதனைகளாலும் காங்கிரஸ்- தி.மு.க. இடையே விரிசலில்லாதநிலை இருப்பதாக சொல்லப்பட்டபோதிலும் இப்போ தைய மனக்கசப்புகளால் தமிழக அரசு பெரியாறை (ரையும்!) மறந்துபோனாலும் தமிழகத்தின் சுற்றுச்சூழல் அமைப்புகள் இதற்காக குரல் கொடுத்து பிரதமர் அனுமதி வழங்காமல் தடுக்க முடியும். தடுக்க வேண்டும்!"" என்று எழுதி இருக்கிறார்.

 தலையங்கத்தின் ஆரம்பம் - தி.மு.க. அரசைக் குறை கூறுகிறது. நடுப்பகுதியில் தம்மையும் அறியாமல் தமிழக அரசைப் பாராட்டி எழுதிவிட்டார். தலையங்கத்தை முடிக்கும்போது - ""அய்யோ நடுப்பகுதியில் தமிழக அரசைப் பாராட்டி விட்டோமே"" என்ற நினைவில் நெஞ்சம் பதறி, இறுதிப்பகுதியில் மறுபடியும் தி.மு.கழக அரசைத் தாக்கி இருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் என்ன? மறுபடியும் மறுபடியும் தி.மு.க.துவேஷம் - சாதித்துவேஷம் என்று நாம் நினைவுபடுத்தி னால், அதனாலே அவாள்திருந்தி விடுவார் களா என்ன? எது எப்படியிருப்பினும் முல்லைப்பெரியாறு விவகாரம் குறித்து ஒரு நல்ல தலையங்கத்தை - தக்க ஆதாரங்களோடு - புள்ளி விபரங் களோடு எழுதியிருக்கிற தினமணி ஆசிரியருக்கு எல்லோரும் பாராட்டுத் தெரிவிப்பார்கள். சந்தேகமில்லை
நன்றி:முரசொலி 26-12-2010 

No comments:

Post a Comment