அ.தி.மு.க. தலைமை நிலையத்தில் ஒரு விழா. அதிலே கலந்து கொண்ட ஜெயலலிதாவிடம் பத்திரிகையாளர்கள், 2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பியுள்ளதே என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு பதிலளித்த ஜெயலலிதா ""ஆ.ராசாவை சி.பி.ஐ. உடனடியாகக் கைது செய்ய வேண்டும்"" என்று குறிப்பிட்டிருக்கிறார். நோட்டீஸ் அனுப்பினாலே போதும் கைது செய்யத்தான் வேண்டும் என்றால் முதலில் கைது செய்யப்படவேண்டியவர் ஜெயலலிதா வாகத்தான் இருக்கமுடியும்.
*** ராசா மீது எந்த வழக்கும் இல்லை. எந்த எப்.ஐ.ஆரும் போடப்பட்டதில்லை. எந்தவித குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட வில்லை. எனினும், சி.பி.ஐ. அவருக்கு சம்மன் அனுப்பிவிட்டது என்ற ஒரு காரணத்துக்காகவே அவரை கைது செய்யவேண்டும் என்கிறார் ஜெயலலிதா. இந்த விசயத்தில் ஜெயலலிதாவின் யோக்கியதை என்ன? அவர் மீது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கே நடந்து வருகிறது. 10 ஆண்டு களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த வழக்கு அன்னிய செலாவணி மோசடி என்ற குற்றப் பிரிவின்கீழ் தொடரப்பட்ட வழக்கு ஆகும். சி.பி.ஐ. சம்மன் அனுப்பிவிட்டது - என்பதற்காகவே ராசாவை கைது செய்ய வேண்டும் என்றால், - ஜெயலலிதாவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. அந்த சம்மன் தொடர்பாக ஜெயலலிதா சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரடியாக ஆஜராகி விளக்கமும் அளித்தார். - அந்த வழக்கில் அவர் மீது குற்றப் பத்திரிகை பதிவு செய்து 10 ஆண்டுகளாக அது நடந்து வருகிறது.
*** 1991-ல் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார். அந்த ஆண்டு எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் அவரது பிறந்த தினத்தை அ.தி.மு.க. வினர் கொண்டாடினார்கள். பிறந்த தினத்தை யொட்டி அவருக்கு ஏராளமான பரிசுகள் வந்து குவிந்தன. வெளிநாட்டிலிருந்து அவருக்கு பிறந்த தின பரிசாக 3,00,000 அமெரிக்க டாலர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அந்தத் தொகையை வாங்கி ஜெயலலிதா அப்படியே தனது வங்கிக் கணக்கில் போட்டுக் கொண்டார். இந்தப் பணம் எங்கிருந்து யாரிடமிருந்து அனுப்பப்பட்டது என்ற கேள்வி எழுந்தபோது அவர் எனக்குத் தெரியாது என்று மறுத்தார். அன்றைய ரூபாய் மதிப்பில் அந்த பணம் 77 லட்சத்து 52 ஆயிரத்து 501 ரூபாய் ஆகும். ""எனக்குக் கிடைத்த இந்தத் தொகைகள் அனுப்பப்பட்ட கவர்களில் இந்தத் தொகை யாரிடமிருந்து வந்தன என்பதற்கான முகவரி எதுவும் இல்லை. நான் இதனை எனது ஆடிட்டரிடம் கொடுத்து பரிசீலிக்க சொன்னேன். அவர் இதை ‘பிறந்தநாள் பரிசாகத்தான் அனுப்பியிருக்கிறார்கள். ஆகவே நீங்கள் இந்தத் தொகையை உங்கள் கணக்கிலேயே வரவு வைத்துக் கொள்ளலாம்’ என்று ஆலோசனை கூறினார். அதன்படியே நான் அந்த தொகைகளை என்னுடைய கணக்கில் வரவு வைத்துக் கொண்டேன்"" என்று விளக்கம் அளித்தார் ஜெயலலிதா.
வெளிநாட்டில் இருந்து பணம் பெறுவது தொடர்பாக அன்னிய செலாவணி தடுப்புச் சட்டம் சில நிபந்தனைகளை விதிக்கிறது. அதன்படி பெறப்பட்ட தொகைகள் அல்ல இவை. ஆகவே அன்னிய செலாவணி குற்றத் தடுப்பு சட்ட பிரிவுகளின்கீழ் ஜெயலலிதா மீது சி.பி.ஐ. வழக்கு கொடுத்தது. எனினும் பணம் எங்கிருந்து வந்தது என்று ஆய்வு நடத்தியபோது நியுயார்க்கில் உள்ள பாஸ்கத் டிரஸ்ட் கம்பெனி இதற்கான பண விடையை அனுப்பி வைத்துள்ளது என்பது தெளிவாகியது. ஜெயலலிதா ஒரு அரசாங்க ஊழியர் (முதலமைச்சர்) என்பதால் வெளிநாட்டில் இருந்து வரும் தொகைகளை பெறமுடியாது. எனினும் ஜெயலலிதா அதுபற்றி கண்டு கொள்ளாமல் வழக்கை நடத்த முடியாமல் எத்தனை காலம் இழுத்தடிக்க முடியுமோ அத்தனை காலமாக அதாவது 10 ஆண்டு காலத்துக்கும் மேலாக இழுத் தடித்து வருகிறார். சி.பி.ஐ.-யின் இந்த வழக்கு அவர் மீது தொடரப்பட்ட பின்னரும் அவர் (1991 - 96, 2001 - 2006) இருமுறை முதலமைச்சர் பதவியை வகித்திருக்கிறார். ‘உங்கள் மீது வழக்குகள் இருக்கின்றனவே குற்றவாளியாக நீங்கள் பதவியில் நீடிக்க லாமா?’ என்ற கேள்வி எழுந்தபோதெல்லாம் ‘குற்றம் சாட்டப் பட்டதாலேயே ஒருவரைக் குற்றவாளி என்று கூறிவிட முடியாது. நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரும் வரையில் நான் குற்றவாளி அல்ல. குற்றஞ்சாட்டப் பட்டவள்தான்’ - என்று வியாக்கியானம் சொல்லிக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. ஆனால் இப்போதோ ராசாவிற்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பிவிட்டது. ஆகவே அவரை கைது செய்ய வேண்டும் என்று கூக்குரலிடுகிறார் அவர்.
ஜெயலலிதா மீது மட்டும்தானா? அவரது ஆருயிர் தோழியும் பினாமியுமான சசிகலா-வுக்கும் துபாயில் உள்ள பேங்க் ஆப் பரோடா மூலம் 2 லட்சம் அமெரிக்க டாலருக்கான பணவிடை (எண். 085346) வந்தது. இதற்கான இந்தியப் பணம் 51 இலட்சத்து 47 ஆயிரத்து 955-யை சசிகலா தன் வங்கிக் கணக்கில் போட்டுக்கொண்டார். இங்கிலாந்தில் உள்ள இண்டர் போல் போலீஸ் மூலம் சி.பி.ஐ. இந்த வழக்கிலும் விசாரணையை மேற்கொண்டது. ம்ம்ம் இந்த இலட்சணத்தில்தான் ஜெயலலிதா ராசாவை கைது செய்யவேண்டும் என்கிறார். 10 ஆண்டு காலத்துக்கு மேலாக சி.பி.ஐ.யின் வழக்கிலேயே சிக்கிக்கொண்டு தள்ளாடும் ஜெயலலிதா, சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது என்பதற்காகவே ராசாவை கைது செய்ய வேண்டும் என்பது விந்தையிலும் விந்தை
No comments:
Post a Comment