Search This Blog

Wednesday, 19 January 2011

டான்சி ஊழல் மட்டும் தானா? இன்னும் பலப்பல இதோ; ஒன்று!

ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ""தனது ஆட்சிக் காலத்தில் டான்சி நில பேர ஊழல் தவிர வேறு குற்றச்சாட்டுகள் எதுவும் இருந்தது இல்லை"" என்று குறிப்பிட்டு இருக்கிறார். டான்சி நிலத்தை அரசாங்க ஊழியராக - முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வாங்கி இருக்கக் கூடாது. அவர் முதலமைச்சராக இருந்ததினால் மட்டுமே, அந்த நிலத்தை அடி மாட்டு விலைக்கு வாங்க முடிந்தது. முத்திரைத்தாள் பதிவுக் கட்டணங்களிலும் படு பாதாள கட்டணங்களை நிர்ணயம் செய்து பதிவு செய்து கொள்ள முடிந்தது, என்பதே அந்த ஊழல் குற்றச்சாட்டு. அதிலே, முதலில் ""நான் டான்சி நிலத்தை வாங்கியதில் முறைகேடுகள் எதுவும் இல்லை. சட்டப்படிதான் வாங்கி இருக்கிறேன்"" என்று மதுரையில் நடந்த மாநாட்டில் துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு விநியோகித்தார் ஜெயலலிதா. டான்சி நில பேர ஊழல் வழக்கு கீழ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ""டான்சி நில பேர பத்திரத்தில் அதனை வாங்கியவர் நான்தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அந்தப் பத்திரத்திலே உள்ள கையெழுத்தும் என் கையெழுத்து அல்ல. அது ஃபோர்ஜரி (மோசடி) கையெழுத்து ஆகும்""  - என்று அந்தர்பல்டி அடித்தார் ஜெயலலிதா. டான்சி நிலபேர ஊழல் வழக்கு உச்சநீதி மன்றத்திற்கு வந்தபோது அங்கே அந்த நிலத்தை ஒரு பைசா கூடக் கேட்காமல் அரசுக்கே திருப்பித் தந்து விடுகிறேன். என்னை விட்டு விடுங்கள் என்று கதறினார். உச்சநீதிமன்றம் அவர் அந்த நிலத்தை வாங்கியது அதிகார துஷ்பிரயோகம் தான் என்று அவரது அகங்காரம் நிறைந்த மண்டையில் ஓங்கி ஒரு அடி அடித்தது போல தீர்ப்பை வழங்கியது. 

டான்சி நிலத்தை மட்டுமா அதிகார துஷ்பிரயோகம் மூலம் ஜெயலலிதா வாங்கினார்! அதுமட்டும் இன்றி ஜெயலலிதாவின் தோழியும், ஜெயா பப்ளிகேஷன்ஸ் பங்குதாரரு மான சசிகலாவும் அவரது மன்னார்குடி குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏராளமானச் சொத்துக்களை பதவியைப் பயன்படுத்திக் காவல் துறையினரின் உதவியோடு அரட்டி, மிரட்டி வாங்கிக் குவித்ததுப் பற்றி ஏராளமான தகவல்களும் பல்வேறு ஏடுகளிலும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் வெளிவந்தபடியே இருந்தன. ஜெயா பப்ளிகேஷனில் ஜெயலலிதாவும், சசிகலாவும் தொழிற்கூட்டாளிகள். இந்த நிறுவனம் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த ஐந்தே ஆண்டுகளில் எத்தகைய கிடுகிடு வளர்ச்சியைப் பெற்றது என்பதை பரிசீலித்தாலே ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது செய்த ஊழல்கள் எப்படிப்பட்ட இமாலய ஊழல்கள் என்பதை தெரிந்துகொண்டு விட முடியும். ஜெயா பப்ளிகேஷனில் 1990-91ல் 8,32,380 ரூபாய் பணம்தான் போடப்பட்டது. இந்த நிலை மாறி, 1999-92ல் 1,03,32,753 ரூபாயும், 1992-93ல் 3,01,32,156 ரூபாயும், 1993-94ல் 3,08,12,515 ரூபாயும், 1994-95ல் 2,84,76,172 ரூபாயும் போடப்பட்டு உள்ளது. இந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 10 கோடி ரூபாய்க்கு மேல் ஜெயா பப்ளி கேஷன் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. இந்தத் தொகை எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? அதிகார துஷ்பிரயோகம் தானே காரணம் . . . .  (ஒரு சமயத்தில் சொந்தக் கடனை அடைக்க கட்சியிடம் பணம் கேட்ட ஜெயலலிதா, தொலைபேசி பில்லைக்கூட கட்சிதான் கட்ட வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்த பின்னரும் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்ற ஜெயலலிதா, ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் வருமான வரி கணக்கை பல கோடிக்குக் காட்டியது எப்படி? அதிகார துஷ்பிரயோகம் தவிர வேறு என்ன?) சசிகலாவின் மன்னார்குடி குடும்பத்தின் உறவினர்கள் நடத்திய ஜெ.ஜெ. டி.வி.யில் அந்நியச் செலாவணி மோசடி மற்றும் சசிகலா உறவினர்களின் ஹவாலா தொடர்புகள் பற்றியும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. சொத்துக்களை மிரட்டி குறைந்த விலைக்கு வாங்கும் கும்பல், ஆட்டோவில் சென்று தாக்குதல் நடத்தும் கும்பல் ஆகியவற்றிற்கு ஆளுங்கட்சியின் நேரடி ஆதரவு இருந்தது

ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில்! இதே கால கட்டத்தில் சசிகலாவின் தனி உரிமையில், 1) வினோத் வீடியோ விஷன் 2) மெட்டல் கிங் 3) ஃப்ரஸ் மஸ்ரூம்ஸ் 4) மார்பள் - ஆகிய கம்பெனிகள் வளர்ந்தன. இவை தவிர சசிகலாவின் பங்குதாரர் நிறுவனங்கள் என்று ஒரு நீண்ட பட்டியல். அதிலே, 1) ஜெயா கண்ஷ்ட்ரக்ஸன்ஸ் 2) ஜேஸ் ஹவுஸிங் டெவலப்மென்ட் 3) ஜெயா ரியல் எஸ்டேட் 4) ஜெயா ஃபார்ம் ஹவுஸ் 5) கிரீன் ஃபார்ம் ஹவுஸ் 6) ஜே.கே.லீசிங் அண்டு மெயின் டனன்ஸ் 7) விக்னேஷ்வர் பில்டர்ஸ் 8) லட்சுமி கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் 9) கோபால் புரோமோட்டர்ஸ் 10) சக்தி கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் 11) நமச்சிவாயம் ஹவுசிங் டெவலப்மென்ட் 12) ஐயப்பா ப்ராப்பர் டீ டெவலப்மென்ட் 13) சீ. என்கிளேவ் 14) நவசக்தி கன்ஸ்டிரக்ஸன்ஸ் அண்டு பில்டர்ஸ் 15) ஓசியானிக் கண்ஸ்ட்ரக்ஸன்ஸ் 16) கிரீன் கார்டன் அபார்ட் மென்ட்ஸ் 17) சசி எண்டர் பிரைசஸ் 18) ஜெயா பப்ளிகேசன்ஸ் என்று சசிகலா தொடர்பான வர்த்தக நிறுவனங்களின் பெயர்ப் பட்டியல் நீண்டு கொண்டே இருந்தன. இந்த நிறுவனங்கள் யாவும் அபிராமபுரம் இந்தியன் வங்கியிலேயே கணக்கு வைத்திருந்தன. பெரும்பாலும் 1994 -1995 லேயே இங்கு கணக்குகள் தொடங்கப்பட்டன. 1995-ம் ஆண்டில் 7 முதல் 16 வரையிலான ஒவ்வொரு கம்பெனியிலும் ரூ.22,00,000 முதலீடு செய்யப்பட்டது. இதேபோல 1995-96ல் 7 முதல் 16 வரையிலான மேற்கூறிய நிறுவனங்களில் தலா 25,34,980 ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. மொத்தம் ரூபாய் 4,07,00,000 முதலீடு செய்யப்பட்டது. இவைகளெல்லாம் எங்கிருந்து வந்த முதலீடுகள்? யார் சம்பாதித்தது? ஒவ்வொரு கணக்கிலும் ஒரே தொகை போடப் பட்டு இருக்கிறதே, அது எப்படி? - என்பது போன்று இன்னும் பல ஊழல் விவரங்கள் இருக்கின்றன. இவைகளை எல்லாம் மக்கள் மறந்து விட்டார்கள் என்ற அசட்டு துணிச்சலிலேயே ஜெயலலிதா தனது ஆட்சி யில் டான்சி நில பேரம் தவிர வேறு குற்றச்சாட்டுகளுக்கே இடமில்லை என்று பசப்பி இருக்கிறார். 
நன்றி:முரசொலி 28-12-2010     

No comments:

Post a Comment