Search This Blog

Wednesday, 19 January 2011

பா.ஜ.க. வின் உறவு உதவியால் நீரா ராடியா பெற்ற வளர்ச்சி: நீரா ராடியாவின் தொழிற் கூட்டாளி அம்பலப்படுத்தும் ரகசியங்கள்!


நீரா ராடியா - நீரா ராடியா என்று ஒரு வேவு பார்க்கும் உளவாளிப் பெண்ணை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்களே, காங்கிரஸ் - தி.மு.க. ஆகியவற்றின் எதிரிகள்? அவர் யார்? அவரது வரலாறு என்ன? இந்த வாரத்து இந்தியா டுடே விளக்கமாக அட்டைப்படக் கட்டுரையாகவே விளக்கி வெளியிட்டுள்ளது. நீரா ராடியாவின் தந்தையும் தாயும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பல வருடங்களுக்கு முன்பே புலம் பெயர்ந்து, கென்யா நாட்டிற்குச் சென்று அங்கேயே நிரந்தரமாக குடியேறி விட்டவர்கள். அவர்களது மகளான நீரா ராடியா இந்தியாவுக்கு 1994-ல் தான் வந்தார். அவர் விமானத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கொடிக்கட்ட முயன்று கொண்டு இருந்தபோது அவருக்கு பா.ஜ.க.-வின் நட்பு கிடைத்தது. பா.ஜ.க. 1998-ல் மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு 1994-ல் இந்தியாவுக்கு வந்த நீரா ராடியாவின் வாழ்க்கையில் பா.ஜ.க. உதவியால் வெற்றி! வெற்றி, வெற்றிதான். அதன் பிறகு அவர் இந்திய அரசியல் உலகிலும், தொழிலதிபர்கள் வட்டாரத்திலும் கொடிக்கட்டிப் பறக்க ஆரம்பித்து விட்டார். அவராலே டாட்டா, அம்பானி போன்ற பெருந்தொழிலாதிபர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட அடுத்த வரிசை தொழிலதிபர்களும் பயனடைந்தார்கள். அரசாங்கத்திடமிருந்து பல்வேறு சலுகைகளையும், பெர்மிட்டுகளையும், கான்ராக்ட்களையும், லைசென்ஸ்களையும், பெற்றுத் தருவதில் நீராராடியா கைதேர்ந்தவராக, திறமைசாலியாக இருந்தார். அவரது இந்த வளர்ச்சிக்கெல்லாம் முழு காரணமாக அமைந்தது. பா.ஜ.க. ஆட்சிக் காலம் தான். பா.ஜ.க. ஆட்சியில் அனந்தகுமார் என்பவர் அமைச்சராக இருந்தார். அவர் இப்போது பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து இருக்கிறார். அவர்தான் நீரா ராடியாவின் கிடுகிடு வளர்ச் சிக்கு அஸ்திவாரமாக அமைந்து உதவியவர். அமைச்சராக இருந்த அவர், நீரா ராடியாவுக்கு பா.ஜ.க. அரசின் பல்வேறு ரகசியங்களை யும் கொடுத்து உதவினார். ஒவ்வொரு பிரச்சினையிலும் பா.ஜ.க. அரசு என்ன முடி வெடுக்கப் போகிறது. அது எடுக்கும் நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்கிற ரகசியங்களை எல்லாம் நீரா ராடியாவுக்கு அவர் முன் கூட்டியே தந்து விடுவார். அந்த ரகசியங்களை வைத்துக் கொண்டு பெரும் பெரும் தொழிலதிபர்களோடு பேசி நீரா ராடியா அவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கித் தந்துவிடுவார். அதற்காக தொழிலதிபர்கள் லட்சக்கணக்கில் நீரா ராடியாவுக்கு கமிஷன் தருவார்கள். இந்த தகவல்களை எல்லாம் பா.ஜ.க. போல, பார்ப்பன ஏடுகள்போல நாம் கற்பனைச் செய்து வெளியிடவில்லை. நீராராடியா பற்றிய இந்த தகவல்களை எல்லாம் அவரோடு சில வருடங்கள் தொழிற் கூட்டாளியாக இருந்து அவரது ஒவ்வொரு நடவடிக்கையிலும் தன்னை இணைத்துக் கொண்டு அவருக்கு பல்வேறு உதவிகளை செய்தவரான, ராவ் தீரஜ்சிங் என்பவர் இந்தியா டுடே ஆங்கில வார ஏட்டிற்கு அளித்த சிறப்பு பேட்டியில் வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார். அதனடிப்படை யில்தான் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி பா.ஜ.க. - நீரா ராடியா உறவு பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறார். 1) நீரா ராடியாவுக்கு பா.ஜ.க. அரசின் ரகசியங்களை அன்று அமைச்சராக இருந்த அனந்த குமார் முன்கூட்டியே வழங்கியது உண்டா? இல்லையா? 2) நீரா ராடியாவிற்கு பா.ஜ.க. ஆட்சி டெல்லியில் வசந்த் குன்ச் பகுதியில் நிலம் ஒதுக்கி தந்தது உண்டா? இல்லையா? 3) அந்த நிலத்தில் நீரா ராடியாவின் அறக்கட்டளைக்கான கட்டிடத்தின்அடிக்கல் நாட்டு விழாவில் அத்வானி கலந்து கொண்டு அவரை பாராட்டியது உண்டா? இல்லையா? 4) பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் நீரா ராடியா பலகோடிக் கணக்கான ரூபாய்களை சுவிஸ் வங்கிகளில் செலுத்தியது உண்டா? இல்லையா? 5) நீரா ராடியா சுவிஸ் வங்கிகளில் போட்ட கருப்பு பணத்தில் பல பா.ஜ.க. தலைவர்களின் பணமும் உண்டா? இல்லையா? 6) அனந்த குமாருடன் மட்டுமின்றி பா.ஜ.க. வின் அகில இந்திய தலைவரான நித்தின் கட் காரிக்கும் நீரா ராடியாவுடன் தொடர்பு - வர்த்தகத் தொடர்பு இருக்கிறது என்பது உண்மையா? பொய்யா? - என்று பா.ஜ.க. தலைவர்களை நோக்கி கேள்வி மேல் கேள்வி எழுப்பி இருக்கிறார். அபிஷேக் சிங்வி. பா.ஜ.க. இல்லை என்று கூறினால் மட்டும் போதாது. ராவ் தீரஜ்சிங்கின் சிறப்பு பேட்டியில் பா.ஜ.க.- நீரா ராடியா தொடர்பு - நெருக்கம் பற்றி கூறியுள்ள அனைத்துதகவல்கள் பற்றியும் விளக்க அது முன் வரவேண்டும். இல்லாவிட்டால் அது மன்மோகன் சிங் அரசின் மீது சுமத்தும் அபாண்ட குற்றச்சாட்டு களை எண்ணி இந்திய மக்கள் பா.ஜ.க. வை அடுத்த தேர்தலில் அடியோடு தோற்கடித்து விடுவார்கள். வேரோடு வீழ்த்தி விடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 
நன்றி:முரசொலி 27-12-2010     

No comments:

Post a Comment