அஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகரம் கௌகாத்தியில் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழுக் கூட்டம் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் நடைபெற ஏற்பாடாகியிருக்கிறது. முதல் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர் நிதின் கட்காரி தலைமை உரை நிகழ்த்தியிருக்கிறார். செயற்குழுக் கூட்டத்தில் கட்காரி பேசியது என்ன என்பதை பா.ஜ.க.வின் பத்திரிகைத் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் நிருபர்கள் மத்தியில் சுருக்கமாக எடுத்துரைத்தார்.
கூட்டத்தில் பேசிய நிதின் கட்காரி, ""2ஜி அலைக்கற்றை ஊழலை இதுவரை நடந்த அனைத்து ஊழல்களுக்கும் அன்னை என்றே அழைக்கலாம். அந்த அளவுக்கு அது பெரியது, தீவிரமானது. பிரதமர் மன்மோகன் சிங் யோக்கியமானவர். பொதுக் கணக்குக் குழு, கூட்டுக்குழு முன்னால் ஆஜராகத் தயாராக இருப்பவர் என்றால் நாடாளு மன்றக் கூட்டுக் குழு முன்னால் ஆஜராகத் தயங்குவது ஏன்?"" என்று கேட்டிருக்கிறார் அவர்.
1. ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூபாய் ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி இழப்பு என்று தணிக்கைக் குழு அதிகாரியின் இமாலயக் கற்பனையைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள் பா.ஜ.க. தலைவர்கள்.
2. தணிக்கைக் குழு அதிகாரியே - இந்தக் கணக்கிற்கு என்னிடம் எந்தவித ஆதாரமும் இல்லை. இது துல்லியமான கணக்கும் ஆகாது.
3. அலைக்கற்றை ஒதுக்கீடு முதலில் வந்தவர் களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படை யில் ஒதுக்கீடு செய்ததால் எவ்வளவு ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கும் என்று நான் 3 வகையான முறைகளில் கணக்குப் போட்டு பார்த்தேன். 4. அதிலே, ஒரு முறையின் அடிப்படையில் இழப்பு 500 கோடி அளவுக்குத்தான் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தது.
5. இன்னொரு முறையில் நான் அனுமானிக்க முயன்றபோது இழப்புத்தொகை ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி என்பதாக வந்தது.
6. எனினும் இந்த இழப்பீடு பற்றிய தொகைகள் எல்லாமே துல்லியமானவை அல்ல. முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையில் கணக்கிடப் பட்ட வெறும் அனுமானமே ஆகும் என்று - - விசாரணைக் குழுவினர் முன்பே நேரில் ஆஜராகி அந்த தலைமைத் தணிக்கை அதிகாரி வாக்கு மூலம் அளித்திருக்கிறார். இவற்றையெல்லாம் அனுமானம்தான், யூகத்தின் அடிப்படையிலான கணக்குகள்தான் என் பதை நான் மத்திய அரசிடம் சமர்ப்பித்த 76 பக்க அறிக்கையிலேயே தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறேன் என்றும் அவர் விசாரணை அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராகி தெள்ளத் தெளிவாக, திட்டவட்டமாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.
எனினும், பா.ஜ.க.வினர் இந்தப் பிரச்சினையை தேர்தல் வரையில் எப்படியாவது இழுத் தடித்துக் கொண்டே போனால் மத்திய காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து விடலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள்.
அதனடிப்படையிலேயே கௌகாத்தியில் நடந்த செயற்குழுக் கூட்டத்திலும் பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி, ""இந்தியாவில் இதுவரை நடந்துள்ள ஊழல்களிலேயே மிகப்பெரிய ஊழல் 2ஜி அலைக் கற்றை ஏல ஊழல்தான். இந்த விவகாரத்தை ஆராய நாடாளுமன்ற கூட்டுக் குழு விசா ரணைக்கு உத்தரவிடாமலேயே காங்கிரஸ் தலைமை பிடிவாதம் காட்டுகிறது. இதனால் ஆட்சியையே அது இழக்கப் போகிறது என்று எச்சரிக்கை என்ற பெயரால் மிரட்டல் விடுத்து இருக்கிறார். இப்படி எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் கணக்குத் தணிக்கை அதிகாரியின் கற்பனை, யூகம், அனுமானம் அடிப்படையிலான - அஸ்திவாரம் எதுவும் இல்லாத - மணலால் கட்டப்பட்ட வீட்டை கான்கிரீட் வீடு போல பூதாகாரமாக்கி காங்கிரஸ் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும், அதன்மூலம் அந்த ஆட்சியையே கவிழ்த்து விட வேண்டும் என்கிற சுயநல அரசியல்ஆதாயம் அடிப் படையிலான ஒரு பொய்யை பா.ஜ.க.வினர் திரும்பத் திரும்ப, கீறல் விழுந்த ரெக்கார்டு போல கூறியபடியே இருக்கிறார்கள். - இவர்களை பலமாக ஆதரித்து நிற்கும் சுப்ரமணிய சுவாமியே இழப்புத் தொகை அவ்வளவு இருக்காது. 50,000 கோடி ரூபாய் தான் இருக்கும் என்று ஒரு புதுக்கணக்கைச் சொல்லி வருகிறார். -
பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் தொலைத் தொடர்புத் துறையில் அமைச்சராக இருந்த அருண்ஷோரி இழப்பு என்பது இவ்வளவு கோடியாக இருக்காது, 30,000 கோடி ரூபாயாகத்தான் இருக்கும் என்று வேறொரு கணக்கைச் சொல்லி வருகிறார்.
- ஆனால் சி.பி.ஐ.யின் மேலிடத் தரப்பினரோ இழப்பு 22,000 கோடி அளவுக்குத்தான் இருக் கும் என்று மற்றுமொரு அனுமானத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் யார் என்ன சொன்னால் எங்களுக்கு என்ன? எங்கள் கட்சியைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் அருண் ஷோரியே சொன்னால் தான் என்ன? நாங்கள் அதை எல்லாம் கண்டு கொள்ளத் தயாராக இல்லை. இந்தக் கணக்குகளில் மிக அதிக யூகமும், அனுமானமும், இமாலயக் கற்பனையுமான 1,76,000 கோடி இழப்பு என்பதைத் தான் நாங்கள் நம்பு வோம். அதுதான் எங்களது பித்த லாட்ட அரசியலுக்கு உதவும்படியாக இருக்கிறது என்பதுபோல திரும்பத் திரும்ப பொய் பேசி வருகிறார்கள் அவர்கள்.
நிதின் கட்காரி கௌகாத்தி செயற்குழுக் கூட்டத்தில் பேசியதற்கு முதல் நாள், பா.ஜ.க. வினரின் இந்த ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்யின் தோலை உரித்து தொங்கப்போட்டு இருக்கிறார், மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல். அவர் டெல்லியில் பா.ஜ.க. வினரின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் நிருபர் களிடம் அளித்த பேட்டியின் சாராம்சம் வருமாறு:-
1) ""2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழப்பைக் கணக்கிடுவதற்கு தணிக்கை கட்டுப் பாட்டு அதிகாரி பின்பற்றிய வழிமுறை வேதனை அளிப்பதாக இருக்கிறது.
2) அவர் குறிப்பிட்டதுபோல ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி இழப்பு என்பதற்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை.
3) அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ள ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி இழப்பு என்கிற புள்ளி விவரம் முழுக்க முழுக்க தவறான புள்ளி விவரம் ஆகும்.
4) இந்த விவகாரத்தில் அரசின் கஜானாவுக்கு எந்தவித இழப்பும் பைசா அளவுக்குக்கூட இல்லை.
5) இழப்பு தொடர்பாக தனது யூகத்தின், அடிப்படையில் புள்ளி விவரங்களை அவர் வெளியிட்டு இருக்கக்கூடாது.
6) இதன் மூலம் அரசுக்கும் இந்த நாட்டுக்கும் அவர் பெரிய அளவில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விட்டார்.
7) கணக்குத் தணிக்கை அதிகாரி தனது மனச்சாட்சிக்கு அநீதி இழைத்துவிட்டார்.
8) எதிர்க்கட்சிகள் நாட்டின் சாமான்ய மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டனர். தொலைத்தொடர்புத் துறையில் லைசன்ஸ் வழங்கிட ‘முதலில் வருகிறவர்களுக்கு முன் னுரிமை’ என்ற கொள்கை பாரதீய ஜனதா ஆட்சிக் காலத்தில்தான் முதன்முதலில் அமலுக்கு வந்தது. கடந்த 1999ம் ஆண்டில் அவர்களுடைய ஆட்சியின் போது - நிலையான லைசென்ஸ் கட்டண முறை; வருவாயில் பங்கு என்கிற அடிப் படையிலான கட்டண முறை அரசின் கொள்கை யாக மாற்றப்பட்டதால், அப்போது ஏற்பட்ட வருவாய் இழப்பு மட்டும் ரூபாய் ஒன்றரை லட்சம் கோடியாகும். கடந்த 2002ம் ஆண்டின் 10வது 5வது ஆண்டுத் திட்ட அறிக்கையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக் கீட்டுக்கு வருவாய் மட்டுமே அடிப்படை அளவுகோல் அல்ல என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதே கொள்கையைத்தான் நாங்களும் பின்பற்றி அமல் நடத்தி வருகின்றோம். - என்று பதிலளித்ததின் மூலம் கபில்சிபல் பா.ஜ.க.வின் பொய்களுக்கான விஷமப் பிரச்சாரத் திற்கான அஸ்திவாரத்தையே அடித்து நொறுக்கி தகர்த்து விட்டார்.
அதேசமயம் அவர், ""இருந்தபோதிலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட் டில் சில தவறுகள் நடந்து இருக்கலாம். அது இயல்புதான். அதற்காகத்தான் தொலைத் தொடர்புத்துறை சார் பில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் அறிக்கை வந்தவுடன் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் இந்த விவகாரத்தில் நடைபெற்றுள்ள கிரிமினல் குற்றம் தொடர்பாக உச்சநீதி மன்றத்தின் மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணையும் நடந்து வருகிறது"" என்றும் உறுதிபடக் கூறியிருக்கிறார். இத்தகைய நிலையில்தான் பா.ஜ.க.வினர், - தனி நீதிபதி தலைமையிலான ஒரு நபர் கமிஷன் விசாரணை, - அமலாக்கப் பிரிவின் விசாரணை - சி.பி.ஐ. விசாரணை - பொதுக்கணக்குக் குழு விசாரணை. ஆகிய எந்த விசாரணையையும் நாங்கள் நம்பத் தயாராக இல்லை. கூட்டுக்குழு விசாரணையை நாங்கள் நம்புவோம் என்று, நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் என்பது போல பா.ஜ.க.வினர் அடம் பிடித்து வருகிறார்கள்.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான கூக்குரல் கிளப்பப்பட்ட உடனேயே மன்மோகன் அரசிடமிருந்து தமிழக முதல்வர் கலைஞர் ஆ.ராசாவை பதவி விலகச் சொன்னார். ஆனால், அதேசமயம், கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. முதல்வர் எடியூரப்பா நில ஒதுக்கீடு செய்ததன் மூலம் ஏராளமான ஊழல்களை நடத்தியிருக்கிறார். அவர் தனது மகன்கள், மருமகள் போன்ற நெருங்கிய சொந்தக்காரர்களுக்கு எல்லாம் அரசு நிலங்களை தாரைவார்த்துத் தந்து விட்டார் என்று கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் எல்லாம் குற்றம் சாட்டி, இந்த ஊழல்களுக்கு தார்மீகப் பொறுப்பேற்று முதல்வர் எடியூரப்பா முதலமைச்சர் பதவி யை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவரை பா.ஜ.க. மேலிடம் தலையிட்டு முதல்வர் பொறுப்பிலிருந்து பதவி நீக்கம் செய்ய வேண் டும் என்று கோரிக்கை வைத் தனர். இது ஸ்பெக்ட்ரம் பிரச்சினை போல யாரோ ஓர் அதிகாரியின் கற்பனையில் எழுப்பப்பட்ட இமாலயப் புழுகு அல்ல. இது நூற்றுக்கு நூறு நிஜமாகவே நடந்த அப்பட்டமான ஊழல் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் உடனடியாக முதல்வர் எடியூரப்பாவின் மகன்களும், மருமகளும் தாங்கள் அதிகாரத் துஷ்பிரயோகம் மூலம் அபகரித்துக் கொண்ட நிலங்களை அரசுக்கே திருப்பி அளித்திட முன்வந்தார்கள்.
அப்போது - பா.ஜ.க. மேலிடம் பலமுறை எடியூரப்பாவை டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை என்ற பெயரால் அவரது கால்களில் விழுந்து மன்றாடியதே தவிர, அவர் மீது நடவடிக்கை எதையும் எடுக்க பா.ஜ.க. தலைமையால் முடியவில்லை. இன்று வரை - இந்த வினாடி வரை முடிய வில்லை. இப்படிப்பட்ட யோக்கிய சிகாமணிகள்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று காட்டுக் கூச்சலிட்டு வருகிறார்கள். அதுமட் டுமா? பிரதமர் மன்மோகன்சிங்கின் யோக்கியத் தன்மை, நாணயம், நேர்மை, அரசியல் தூய்மை பற்றியும் சந்தேகம் எழுப்பி பழிபோட்டு தலை வாங்க முயற்சித்தபடியே இருக்கிறார்கள். இப்போது பா.ஜ.க. செயற்குழுவில் ஊழல் பற்றி வீர முழக்கம் செய்திருக்கிற நிதின் கட் காரி பற்றிக் கூட ‘‘கட்காரி, நீரா ராடியா வுடன் நெருங்கிய கூட்டாளி. அவரது வியாபாரக் கூட்டாளி’’ என்று குற்றச்சாட்டு வந்தது.
தன் மீது குற்றச்சாட்டு வந்துவிட்டது என் பதற்காகவே நிதின்கட்காரி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டாரா? செய்யவில் லையே! ஊருக்கு மட்டும்தான் உபதேசமா?
நன்றி:முரசொலி 10-01-2011
No comments:
Post a Comment