1998ல் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடந்தபோது தொலைத்தொடர்புத் துறையில் நடத்தப்பட்ட ஊழல் இது. தொலைத்தொடர்புத்துறையில் ஊழல் செய்வதற்காக - பா.ஜ.க. ஆட்சி எப்படிப்பட்ட தில்லு முல்லுகளை எல்லாம் செய்தது என்பதை விளக்கும் கட்டுரை இது. அன்று நடத்தப்பட்டதையும் - இன்று நடந்ததையும் ஒப்பிட்டுப் பார்க்க இது உதவும். பா.ஜ.க.வினருக்கு சொல் வேறு, செயல்வேறு என் பதையும் அவர்களது இரட்டை வேடத்தையும் அம்பலப்படுத்தவே - இது இங்கே மீண்டும் நினைவுபடுத்தப்படு கிறது. ம்ம்ம் பா.ஜ.க. ஆட்சியில் பங்குப் பத்திர ஊழலை மெகா ஊழல் என்று அழைத்தனர் என்றால் செல்லுலர் ஊழலை மஹா மெகா ஊழல் என்றும் 20ம் நூற்றாண்டின் இணையற்ற ஊழல் என்றும் வர்ணித்தனர். நல்ல பிரதமர், ‘ஜென்டில்மேன் பாலிடிஷியன்’ என்று சான்றிதழ்கள் வழங்கப்பட்ட வாஜ்பாயின் நேரடிப் பார்வையில் நடந்த ஊழல் இது. 1998ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி கவிழ்க்கப் பட்ட பின்னர் காபந்து சர்க்காரை நடத்திய போது மிகத் துணிச்சலோடு நடத்தப்பட்ட இந்த ஊழலைக் குடியரசுத் தலைவர், தில்லி உயர்நீதிமன்றம், தேர்தல் கமிஷன் என முக்கிய அரசமைப்புச் சட்ட அங்கங்கள் கண்டித் துள்ளன. ஆட்சேபித்துள்ளன. ஊழல் மூலம் பிரதமர் வாஜ்பாய்க்கு நெருக்கமானவர்கள், பிரதமர் அலுவலகத்தில் உள்ளவர்கள், பிரதமர் இல்லத்தைச் சேர்ந்தவர்கள் ரூ.300 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றனர் என்று அவுட் லுக் பத்திரிகை செய்து வெளியிட்டது. செல்லுலர் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் கட்டணச் சலுகை அளிக்கப்பட்டதால் பத்து ஆண்டுகளில் ரூ.50,000 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட் டது. இப்போது இந்த ஊழலின் அடிப்படைகளைக் காண்போம். 1994ம் ஆண்டு தொலைபேசிக் கொள்கை அறிவிக்கப்பட்டபோது செல்லுலர் மற்றும் அடிப்படைத் தொலைபேசி வசதியை ஏற்படுத்தும் பணிகள் தனியாரிடம் அனுமதிக்கப்பட்டன. இதற்காகப் பகிரங் டெண்டர் கள் கோரப்பட்டன. வட்டார வாரியாக உயர்ந்த ஒப்பந்தம் கோரியவர்களுக்கு காண்ட்ராக்ட் வழங்கப்பட்டது. சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா ஆகிய பெருநகரங்களில் செல்லுலர் தொலை பேசி வசதி செய்ய பத்து வருட காண்ட்ராக்ட் தரப்பட்டது. ஒவ்வொரு பெருநகரத்திற்கும் இரண்டு கம்பெனிகளுக்கு கான்ட்ராக்ட் தரப்பட்டது. முதல் மூன்று ஆண்டுகளுக்குக் குறிப்பிட்ட அளவு லைசென்ஸ் கட்டணமும் எஞ்சியுள்ள ஏழு ஆண்டுகளுக்கு வெவ்வேறு கட்டண விகிதங்களும் நிர்ணயிக்கப்பட்டன. உதாரணமாக, மும்பையில் செயல்படுகின்ற தனியார் தொலைபேசிக்காரர்கள் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது ஆண்டுகளுக்கு முறையே ரூ.3 கோடி, ரூ.6 கோடி, ரூ.12 கோடி லைசென்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும். நான்காவது ஆண்டு முதல், ஆண்டு ஒன்றுக்கு, ஒவ்வொரு நூறு தொலைபேசிக்கும் ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும். நான்கு முதல் ஆறாவது ஆண்டுகள் வரை குறைந்த அளவுக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.18 கோடி செலுத்த வேண்டும். ஏழாவது ஆண்டிலிருந்து பத்தாம் ஆண்டு வரை ஓர் ஆண்டுக்குக் குறைந்த அளவு கட்டணம் ரூ.24 கோடியாகும். அடிப்படைத் தொலைபேசி வசதிகளைச் செய்து தருகின்ற தனியாரைப் பொறுத்தவரையில், மொத்தமுள்ள பணிகளில் தொலைபேசித் தொடர்புகளில் பத்து சதவீதத்தைச் சமூக நல உதவியாகக் கிராமங்களில் செய்து தருவதாக அரசிடம் உறுதி அளித்திருந்தனர். ஒப்பந்தம் செய்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒட்டுமொத்தமாக எல்லா தனியார் காண்ட் ராக்டர்களும் லைசென்ஸ் கட்டணத்தைச் செலுத்தவில்லை. வாக்குறுதி அளித்த படி கிராமப்புறங் களுக்கும் தொடர்பு வசதிகளைச் செய்து தர வில்லை. இந்தக் காண்ட்ராக்டர்கள் தொடர்ந்து லைசென்ஸ் கட்டணம் செலுத்தாததால் உயர்ந்து வந்த கட்டணப்பாக்கி குறித்து இந்தியக் கணக்குத் தணிக்கை அதிகாரி அடுத்தடுத்து கண்டனத்தை வெளியிட்டு வந்தார். இந்தப் பிரச்சினையில் முன்னாள் பிரதமர் தேவெகௌட உள்பட பல எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர். தில்லி உயர்நீதிமன்றத்தில் இரண்டு பொதுநல வழக்குகளும் தொடரப்பட்டன. காண்ட்ராக்டர்கள் குறித்துக் கடும் விமர்சனங்கள் எழுந்ததால் அவர்கள் ஒன்று சேர்ந்து சில சலுகைகளைக் கோரினர். தாங்கள் நஷ்டம் அடைந்து விட்டதாகவும், அதனால் கட்டணப் பாக்கியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரினர். கட்டணம் செலுத்துவதற்கான கால அளவில் மாறு தல் செய்ய வேண்டும் என்றும் லைசென்ஸ் கட்ட ணம் எப்போது முதல் விதிக்க வேண்டும் என்பதில் மாற்றம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் பாரதி செல்லுலர் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் சுனில்மிட்டல் அடிக்கடிப் பிரதமர் அலுவலகத்திற்குச் சென்று வருபவர் என்ப தாலும் பிரதமரின் வளர்ப்பு மகளின் கணவரிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாலும் தொலை பேசிக் காண்ட் ராக்டர்கள் பிரச்சினையைத் தீர்க்கும் பெரும் பணியை அவர் எடுத்துக் கொண்டார். இதற்கிடையே காண்ட்ராக்டர்கள் ஒன்று சேர்ந்து தங்களிடையே லஞ்சப் பணத்தை திரட்டினர். சலுகைக்கேற்றபடி லஞ்சம் தரத் தயாரானார்கள். இதற்கிடையே புட்டப்பர்த்தி சாய்பாபாவும் இந்தப் பேரத்திற்கு உதவினார் என்று சொல்லப்படுகிறது. தொலைபேசித் தொழிலில் ஈடுபட்டுள்ள கோஷிகா என்ற மற்றொரு கம்பெனியின் உரிமையாளர் குல்வந்த்ராயின் தில்லி வீட்டிற்கு சாய்பாபா வந்திருந்தார். தொலைபேசித் தொழிலில் ஈடுபட்டுள்ள எஸ்ஸார் என்ற பெரிய நிறுவனம் உள்துறை அமைச்சர் அத்வானிக்கு நெருக்கமாக இருந்தது என்றும் தெரிகிறது. தொலைத் தொடர்புத்துறை 1999 செப்டம்பரில் தற்காலிகமாக வாஜ்பாய் பொறுப்பில் இருந்தது. அப்போது தனியார் தொலைத்தொடர்பு ஒப்பந்தக் காரர்களின் வஞ்சகமான கோரிக்கைகளை அமைச்சரவை ‘பரிசீலனை’ செய்தது. அதனைத் தொடர்ந்து, வெளி யுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங்கைப் பின்னிருந்து இயக்கும் சக்தியாகக் கொண்டு ஒரு தொலைத் தொடர்புக் குழு அமைக்கப்பட்டது. தனியார் தொலைத்தொடர்பு காண்ட்ராக்டர்களுக்கு ‘உதவி’ செய்வதற்கான வழிவகைகளைக் கண்டு பிடிப்பதுதான் அந்தக் குழுவின் மிகப்பெரிய பணியாகும். அந்தக் குழு தனது பணியைச் செய்து கொண்டிருந்தபோது ஜக்மோகன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். புதிய அமைச்சரும் பிரதமர் அலுவலகம் தொடங்கி வைத்த ‘நற்பணி யைத்’ தொடர்ந்து நிறைவேற்றுவார் என்று எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் எதிர்பார்ப்பு பொய்த்தது. ஒப்பந்தக்காரர்களின் கட்டணப்பாக்கி ரூ.300 கோடி என்ற அளவில் இருந்தது. ஆனால் அவர்களோ, 3.5 கோடியைத்தான் லைசென்ஸ் கட்டணமாகச் செலுத்தியிருந்தனர். மொத்தத் தொகையில் 20 சதவீதத்தைச் செலுத்த வேண்டும் என்று தொலைத் தொடர்புக் குழு கேட்டுக் கொண்டது. இது ஒரு தற்காலிக ஏற்பாடு என்று அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி தெரிவித்தார். ஆனால் ஒப்பந்தத்தின் ஷரத்துகளை மாற்ற வேண்டும் என்ற யோசனையை அட்டர்னி ஜெனரல் ஏற்கவில்லை. 1999 ஜனவரி 6-ம் தேதி சோலி சோரப்ஜி இதுபற்றி எழுதிய குறிப்பில் லைசென்ஸ் தாரர்கள் பெரிய அளவு தொகையைக் கட்டணப் பாக்கியாக வைத்திருந்துவிட்டு தவறான எதிர்பார்ப் பால் நிதி நெருக்கடி ஏற்பட்டு விட்டது என்று கூறிப் பெரிய அளவில் சாதகமான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று கோருகி றார்கள். இவர்களின் கோரிக்கைகளை ஏற்றால் அரசாங்கத்தின் செயல்பாடுகள் தவறான சமிக்ஞையை - தகவலைப் பரப்பக் கூடியதாக அமைந்து விடும்.
கட்டண பாக்கியாளர்களுக்கு உதவுவதாக, ஊக்கம் தருவதாக அரசின் செயல்பாடு அமைந்துவிடக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சலுகைப் பிரச்சினை தொடர்பாகப் பொதுநல வழக்குதில்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த போது ஒப்பந்ததாரர்களில் ஒருவர் நிருபர்களிடம் ஒரு தகவலை வெளியிட்டார். அதாவது ஜக்மோகன் அவரது பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதற்கு எத்தனை மணிநேரம் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான். அந்தத் தகவலும் தில்லி பத்திரிகையில் செய்தி யாக வெளி வந்தது. இச்செய்தி வெளியான அடுத்த நாளே 1999 ஜூன் 8-ம் தேதி ஜக்மோகன் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு மாற்றப்பட்டுவிட்டார். அதன்பின்தான் தகவல் தொடர்புத்துறையைப் பிரதமர் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டார். தொலைபேசி காண்ட்ராக்டர்களுக்குக் கொண்டாட்டம் அதிகமானது. தனியாரின் கோரிக்கை களை நிறைவேற்றும் வகையில் புதிய கொள்கையை வரையுமாறு பிரதமர் அலுவலகத்தில் உள்ள செயலாளர் ஒருவர் கேட்டுக் கொள்ளப்பட்டார். ஒப்பந்தத்தில் மாறுதல் செய்யக்கூடாது என்று அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி கூறியிருந்ததால் அவரது திருத்தப்பட்ட கருத்து இப்போது தேவைப்பட்டது. அதனால் பிரிட்டனில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த சோலி சோரப்ஜி வரவழைக்கப் பட்டார். புதிய கொள்கைக்கு ஏற்ற மாற்றுக் கருத்தைத் தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். சோரப்ஜியின் இந்தக் குறிப்பு மூலம் மத்திய அரசு தனியாருக்குச் சலுகை தர ஏற்கெனவே ஒப்புக் கொண்டுள்ளது என்ற உண்மை தெரியவந்தது. கட்டணத்தைச் செலுத்தியவர்களையும் செலுத் தாதவர்களையும் சமநிலையில் வைத்துப் பார்க்கும் போக்கு தவறானது. இந்தப் போக்குக் காரணமாக ஒழுங்காகக் கட்டணம் செலுத்துபவர்கள் இடையே கட்டணம் செலுத்தும் ஆர்வம் குறைந்து விட்டது என்று சோரப்ஜி தனது குறிப்பில் தெரிவித்துள்ளார். சோரப்ஜியின் இந்தச் சந்தேகம் சரியானது என்பது நிரூபணமாகிவிட்டது. கோஷிகா உள்பட இரண்டு கம்பெனிகள் 20 சதவீத பாக்கியையும் செலுத்தவில்லை. இந்தப்பாக்கியைச் செலுத்தியே தீர வேண்டும் என்று அமைச்சர் ஜக்மோகன் வலி யுறுத்தினார். ஒப்பந்த நிபந்தனைகளை மாற்றுவதற்கு எதிர்ப் பையும் தெரிவித்தார். ஒப்பந்த நிபந்தனைகளை மாற்றுவதற்கு எதிராக ஜக்மோகன் சில கேள்விகளை எழுப்பினார். அந்தக் கேள்விகள் வருமாறு:- போட்டி முறையில் ஒருவரை ஒப்பந்ததாரராகத் தேர்ந்தெடுத்து அவருடன் ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகு, அந்த ஒப்பந்த உறுதி மொழிகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பது சட்டப்படியோ, அரச மைப்புச் சட்டப்படியோ, நிதி வருமான அடிப்படையிலோ, வணிக ரீதியாகவோ, ஒழுக்க ரீதியாகவோ நியாயமான செயலா? அரசுக்குக் கிடைக்க வேண்டிய ரூ.4000 கோடி பாக்கியை வசூலிக்காமல் இருப்பது பற்றிப் பொது மக்கள், பத்திரிகைகள், நாடாளுமன்றம், ஆடிட்டர் ஜெனரல், கோர்ட் ஆகியோர் என்ன நினைப்பார் கள்? சில கம்பெனிகள் அவற்றின் பங்கு முதலீட்டை விற்று மிகப்பெரிய அளவுக்கு லாபம் அடைந்துள்ளன. அப்படி இருக்கும் போது அவர்களுடைய தொழில் நன்றாக நடைபெற வில்லை என்றால் இது சாத்தியமானதா? அந்தக் கம்பெனியில் சலுகைகளைக் கோரி இப்போது கொடுத்து வருகின்ற நிர்பந்தம் தங்களது பங்கு முதலீட்டை அதிகரித்துக் கொள்வதற்கான தந்திரம் இல் லையா? லைசென்ஸ்தாரர்கள் உண்மையில் நஷ்டம் அடைந்திருப்பார்களானால் அவர்களில் ஒருவர் கூட லைசென்சைத் திருப்பித்தர முன்வராதது ஏன்? ஒரு தொழில் முயற்சியில் நஷ்டமடைகிறயாராக இருந்தாலும் அந்தத் தொழிலைத் தொடர்ந்து செய்து நஷ்டத்தைப் பெருக்கிக் கொண்டே இருப்பார்கள் என்று சொல்வது அறிவுக்குப் பொருத்தமாக இருக் கிறதா? தொழில் லாபமாக இல்லை என்றால் புதிய லைசென்ஸ்தாரர்களையும் டெலிலிங்க் 1998 மார்ச்சிலும் ஸ்ரீனிவாஸ் செல்காம் 1998 மே-யிலும் செல்லுலார் வசதித் தொழிலில் ஈடுபட முன்வந்திருப்பது எப்படி? ஒவ்வொரு கம்பெனிக்கும் தனித்தனியே வெவ் வேறு வட்டாரங்கள் செயல்பாட்டுக்காகப் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு கம்பெனியும் தனித்தனியே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில் அவர்கள் ஒன்றுபட்டு ஒரே வகையான கோரிக்கையை எழுப்புவது நியாயமா? லைசென்ஸ் விதிமுறைகள் உறுதியாகப்பின் பற்றப்படாவிட்டால் அது ஒரு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடாதா? வேறு துறைகளில் உள்ள தொழில் முனைவர்களும் ஒப்பந்த விதிகளை மீறும் வகையில், இதுபோன்ற கோரிக்கைகளை எழுப்பு வார்களே? ஒப்பந்த நிபந்தனைகளைச் சாதாரணமாக எடுத்துக் கொள்வதும் மீறுவதும் நடைமுறை ஆகி விடாதா? சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்டுள்ள எந்த நாட்டிலாவது திறந்த ஒப்பந்தம் மூலம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் தலையீடு நடைபெற அனுமதித்துள்ளனரா? ஜக்மோகனின் இந்த முக்கியமான கேள்விகள் தொலைபேசி ஒப்பந்ததாரர்களுக்கும் பிரதமர் அலுவலகத்தில் உள்ள காப்பாளர்களுக்கும் மிகுந்த சிக்கலைத் தந்தன. தங்கள் விருப்பப்படி ஆட வேண்டும் என்று ஜக்மோகன் கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால் அவர் மசியவில்லை. இதற்கு மாறாக 20 சதவீதப் பாக்கியைச் செலுத்தத் தவறிய இரண்டு கம்பெனிகளின் லைசென்சை ஜக்மோகன் ரத்து செய்துவிட்டார். பெருநகரங்களில் உள்ள எட்டு மிகப் பெரிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டு வந்தார். இவைகளில் 1999 ஜனவரி 31ஆம் தேதி வரை பார்தி 28.74 கோடியும் பிபிஎல் 26.45 கோடியும், ஸ்டெர்லிங் 19.73 கோடியும் ஹட்சின்சன் 29.29 கோடியும் பாக்கி வைத் திருந்தன. அமைச்சரின் உறுதியான நிலை பிரதமர் அலு வலகத்தில் உள்ளவர்களுக்கும் தொலை பேசி காண்ட்ராக்டர்களுக்கும் ஒரு தலைவலியாக உரு வெடுத்து விட்டது. அந்நிலை யில்தான் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து ஜக் மோகனை நீக்க நிர்பந்தங்களை உருவாக்கத் தொடங்கினர். அமைச்சரவை கூடிப் புதிய கொள்கைக்கு ஒப்புதலும் வழங்கி விட்டது. தனியார் காண்ட் ராக்டர்கள் என்ற மிகப் பெரிய சுறா மீன்களின் முன்பு மத்திய அரசு சரணடைந்தது. இதற்கிடையே நிதித் துறை அமைச்சகத்தின் குறிப்பு, அமைச்சரவையின் ஒவ்வொரு நடவடிக்கையையும் ஆட்சேபித்தது. ஆனால் அரசு ஆறுமாத காலத்திற்கு லைசென்சைப் புதுப்பித்ததோடு அக்கால கட்டத்திற்கான லைசென்ஸ் கட்டணத்தையும் தள்ளுபடி செய்தது. இந்த வகையில் அரசு கஜானாவிற்கு ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டது. இதன் மூலம் பிரிட்டனைச் சேர்ந்த சிவசங்கரன் மற்றும் ஸ்விஸ் நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்ஸார், ஹாங்காங்கைச் சேர்ந்த ஹட்சின்சன் மற்றும் பிபிஎல் ஆகியவை பயன்பெற்றன. தொலைத்தொடர்புத் துறையின் மொத்தப் பணப்புழக்கம் ரூ.12,000 கோடியாகும். இதில் 60 சதவீதம் 4 பெருநகரங்களின் தொலைபேசி காண்ட்ராக்டர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. லைசென்ஸ் கட்டணம் ஒழிக்கப்பட்டு லைசென்ஸ் தாரர்கள் வருவாய்ப் பங்கீட்டு முறைக்கு மாறிக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். செயல்பட ஆரம்பித்த பின்னர் நான் காம் ஆண்டில் ஒவ்வொரு காண்ட்ராக்டரும் ஒரு சந்தாதாரருக்கு ரூ.6023 தர வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. இதன் மூலம் நான்காம் ஆண்டில் ரூ.300 கோடி நஷ்டம் என ஆரம்பித்து, பத்தாவது ஆண்டில் ரூ.50,000 கோடி வரை அரசுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை உருவாக்கப்பட்டது. கிராமப்புறங்களில் தொலைபேசி உறுதி செய்து தருகிற சமூக நலச் செயல்பாட்டுத் திட்டத்தையும் ரத்து செய்து மத்திய அரசு தனியாருக்கு உதவி யாகக் கரிசனத்துடன் செயல்பட்டுள்ளது. இந் நிலை தொலைத் தொடர்புத் துறை நஷ்டத்தையும் தனியார் காண்ட்ராக்டர்கள் கொள்ளை லாபத்தையும் அடையும் நிலையை உருவாக்கியது. சோழியன் குடுமி சும்மா ஆடுமா? தனியாரைக் காப்பாற்றும் வகையில் செய்யப்படும் முயற்சி தவறு என்று குடியரசுத் தலைவர் தந்த யோசனையை மீறி மூன்று ஆண்டுகள் கட்டாமல் இருந்த கட்டணப் பாக்கியையும் காபந்து சர்க்காராக இருந்த பா.ஜ.க. அரசு ரத்து செய்திருக் கிறது. இந்தப் பிரச்சினை குறித்து இடதுசாரிக் கட்சிகள் குடியரசுத் தலைவரைச் சந்தித்து சில சான்று ஆதாரங் களையும் வழங்கினார்கள். இதையடுத்து குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன், வேறு துறைக்கு மாற்றப்பட்ட ஜக் மோகனை அழைத்து இப்பிரச்சினை குறித்து கேட்டறிந்ததாகத் தெரிகிறது. தனியாருக்கு மூன்று ஆண்டுக் கட்டணத்தை ரத்து செய்யக் கூடாது என்று தெரிவித்து குடியரசுத் தலைவர் கடிதம் எழுதியுள்ளார் என்றும் தெரிகிறது. இக்கடிதம் நிராகரிக்கப் பட்டது என்ற விவரம் சில பத்திரிகைகளில் வெளியானது. அப்படிச் செய்ததின் மூலம் அதிகாரபூர்வமாகக் குடியரசுத் தலைவருக்குப் பதில் கடிதம் எழுதாமல் அவரைப் காபந்து சர்க்கார் அவமதித்து விட்டது. மொத்தத்தில் இந்த விவகாரத்தில் பல்லாயிரம் கோடி லஞ்சமாகப் பெறப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஜக்மோகனை மாற்றியது போல்தான் இப்பிரச்சினையில் ஒத்துழைப்புத் தராத நிதித்துறைச் செயலாளரும் மாற்றப்பட்டார் என்ற சந்தேகம் உருவெடுத்தது. மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தேர்தல் நன்னடத்தை விதிமுறைக்கு மாறாக இது போன்ற சலுகையை அளித்துத் தேர்தலுக்குப் பெருமளவு நிதியை பா.ஜ.க. திரட்டுகிறது என்ற புகாரை அடுத்து தேர்தல் கமிஷனும் அமைச்சரவைச் செயலாளருக்கு இப்பிரச்சினை குறித்து கடிதத்தை அனுப்பியது. இது குறித்துக் கேள்வி எழுப்பத் தேர்தல் கமிஷ னுக்கு என்ன அதிகாரம் இருக் கிறது என்று பிரதமர் அலுவலகம் கேள்வி எழுப்பி யது. ஆனால் பா.ஜ.க.வோ இப்பிரச்சினை குறித்துப் பொதுமக்களிடமோ, ராஜ்யசபாவிலோ விவாதிக்க முன்வரவில்லை. இவ்விஷயத்தில் பா.ஜ.க. அரசு அவசரம் காட்டியது ஏன் என்று டெல்லி உயர்நீதி மன்ற நீதிபதி வரியவா கேள்வி எழுப்பினார். அட்டர்னி ஜென ரலின் ஆலோசனையும் அதைக் கேட்டுச் செயல்பட வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய் அனுப்பிய கோப்பின் நகலும் பத்திரிகை களுக்கு கிடைத்துவிட்டன. அட்டர்னி ஜெனர லின் யோசனையை வாபஸ் பெறச் செய்தது ஏன்? கோர்ட்டில் தனது யோசனைக்கு மாறாக சோரப்ஜி வாதிட்டது ஏன்? இடையில் நடந்தது என்ன என்பதுதான் கேள்விகள். - என்று தமது ‘ஊழலோ ஊழல்’ என்ற நூலில் தலைசிறந்த அரசியல் விமர்சகரான தி.சிகாமணி எழுதியிருக்கிறார்.
*** இன்று அதே பா.ஜ.க.வினர்தான் - அதே தொலைபேசித் தொடர்பு தொடர்பாக ஊழல் ஊழல் என்று கூக்குரலிடுகிறார்கள். பா.ஜ.க. ஆட்சிக்கு ஒரு நியாயம் - மன்மோகன் அரசுக்கு ஒரு நியாயமா?
நன்றி:முரசொலி 20-12-2010
No comments:
Post a Comment