சபரிமலையில் ஐயப்பசாமியையும் மகரஜோதியையும் தரிசிக்க தென்மாநிலங்கள் முழுவதும் இலட்சக்கணக்கானவர்கள் இரு முடி கட்டிக் கொண்டு, ஒரு மண்டலக் காலம் விரதம் அனுஷ்டித்து கூட்டம் கூட்டமாகச் சபரிமலை செல்வது வழக்கம் ஆகிவிட்டது. இதிலே தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்களே பெரும் பான்மையாக இருந்து வருகிறார்கள். இந்த ஆண்டும் வழக்கம்போல் பக்தக் கோடிகள் சபரிமலை சென்றார்கள்.
ஐயப்பசாமியை தரிசித்தார்கள். மகரஜோதி தரிசனத்துக்காக காத்திருந்து அதையும் கண்டு மெய் சிலிர்த்தார்கள். விழா முடிந்து ஊர் திரும்பும் போது கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் புல்லுமலை என்ற இடத்தில் சபரிமலைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் தமிழக எல்லையின் அருகில் நடந்த விபத்தில் நூற்றுக்கணக்கான பக்த சிரோன்மணிகள் சிக்கி பரிதாபமாய் உயிர் இழந்து விட்டார்கள் என்கிற நெஞ்சு பதறும், ஆற்றொணனா துயரம் அளிக்கும் செய்தி பொங்கல் நன்நாள் அன்று வெளிவந்து இருக்கிறது. இந்த விபத்துக்கானக் காரணங்கள் என்ன? எடுக்கப்படுகிற நிவாரண நடவடிக்கை என்ன என்பதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் ; இது ஒரு மூடநம்பிக்கையின் பாற்பட்ட விபரீதம். அதிலும் அந்த மூடநம்பிக்கை தொடர்பான இன்னொரு மூடநம்பிக்கையினால் விளைந்த கொடூரம் - என்பதே சரியான காரணமாகும்!
மதம், கோவில்கள், புராணங்கள், ஆகமங்கள் கடவுள்கள் என்பவைகளின் பெயரால் பார்ப்பனர்கள் ஏராளமான மூடநம்பிக்கைகளை சமூகத்தில் ஏற்படுத்தி வைத்து இருக்கி றார்கள். சாமி கும்பிடுவது என்பதே ஒரு மூட நம்பிக்கை என்பது தந்தை பெரியார் அவர்களாலே முக்கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக கல்லடிகள், சொல்லடிகள், கல்வீச்சுகள், செருப்பு தோரணங் கள், அழுகிய முட்டை வீச்சுகளுக்கு இடையிலும் இடைவிடாது பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தப் பகுத்தறிவு கருத்தாகும். எனினும் தமிழகத்தில் ‘கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்’ என்று ஒரு பழமொழியை உருவாக்கி அதன் அடிப்படையில் சாலையோரத்து பிளாட்பாரங்களில்கூட மாரி, காளி, முனீஸ்வரன் என பல்வேறு பெயர்களில் கோவில்களைக் கட்டி ஜனங்களை அவ்வளவு சுலபத்தில் மூட நம்பிக்கையில் இருந்து மீட்க முடியாதவாறு பலத்த அடித் தளமிட்டு வைத்து இருக்கிறார்கள். எல்லோரையும், கடவுள் நம்பிக்கையில் இருந்து அறவே மீட்டு எடுப்பது என்பதற்கு இன்னும் பல காலம் பிடிக்கும். அதனால்தான் திருப்பதி, பழனி, திருச்செந்தூர் போன்ற ஊர்களில் சாமி கும்பிட்டுவிட்டு திரும்பி வரும்போது பல்வேறு சமயங்களிலும் விபத்து களில் சிக்கி குடும்பம் குடும்பமாக உயிர் பலியாவோரை கண்டு நாத்திகர்களே ஆனாலுங் கூட அவர்களும் மனம்
பதைக்கிறார்கள், துடிக்கிறார்கள், துயரத்தில் ஆழ்கிறார்கள். இதற்கு முன்பும் இதுபோன்ற அதிர்ச்சி தரும் விபத்துகள் எல்லாம் நடந்த சமயங்களிலும்
நாத்திகர்கள் மிகுந்த பரிவுணர்ச்சியுடனும் பெருந்தன்மையுடனும் பக்தக் கோடிகளுக்கு பலமுறை ஒரு வேண்டுகோளை விடுத்து இருக்கிறார்கள்.
அது என்ன? ""எல்லாம் ஈசன் செயல், அவனின்றி ஓர் அணு வும் அசையாது. ஒவ்வொருவரும் தாயின் வயிற்றில் கருவாக உருவானபோதே அவர்கள் அவர்களது வாழ்வில் இன்னதுதான் நடக்கும் என்று ஆண்டவன் அந்தக் குழந்தைகளின் தலைகளிலேயே எழுதி விடுகிறான். அதுதான் அவனது தலைவிதி, அதைத்தான் அவனது தலையெழுத்து. அதுபடித்தான் அவனது வாழ்க்கையில் எல்லாமே நடக்கும்"" என்று மனமாற நம்புகிற பக்த பெருமக்களே, நீங்கள் அப்படியெல்லாம் நம்புவது உண்மை தான் என்றால் உங்களது உள்ளூர் கோயில்களில் குடிகொண்டிருக்கிற சாமிகளுக்கு உங்கள் தலை விதியை நிர்ணயிக்கிற சக்தி இல்லையா? ஏன் உள்ளூர் சாமிகளை அந்த சாமிகளின் சர் வல்லமை பொருந்திய சக்தியை நம்பாமல் திருப்பதி, திருத்தணி, திருச்செந்தூர், சபரிமலை போன்ற தொலைத்தூர ஊர்களில் இருக்கும் சாமிகளை தேடி ஓடுகிறீர்கள்? பயபக்தியோடு அந்த சாமிகளைக் கும்பிட்டு விட்டு திரும்புகிற உங்களை உங்கள் உயிருக்கு அந்த வெளியூர் சாமிகள் எப்போதாவது பாதுகாப்பு வழங்கி இருக்கிறதா? இல்லையே! பொங்கல் அன்று சபரிமலையில் தரிசனம் செய்துவிட்டு மகரஜோதி தரிசனத்திலும் மனதை பறிகொடுத்து விட்டு பக்திபரவசம் பொங்கிட ஊர் திரும்பிக் கொண்டிருந்த உங்களில் நூற்றுக் கணக்கானவர்கள் உயிர் இழக்காமல் பாதுகாத்து பத்திரமாக உங்கள் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்க அந்த சாமிகளுக்கு சக்தி இல்லையே! விபத்தில் உயிர் இழந்தவர்கள் குடும்பங்களின் கதி, அவர்களது எதிர்காலம் இருள் சூழ்ந்ததாகி விட்டது என்பது பற்றியெல்லாம் அந்தச் சாமிகள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லையே?
இவ்வளவு கேள்விகளை நாங்கள் அடுக்கடுக்காக எழுப்பினாலும் உங்களுக்கெல்லாம் விழிப்புணர்ச்சி வந்து மூட நம்பிக்கைகளை கைவிட்டு விடுவீர்கள் என்று நம்பி இவைகளையெல்லாம் நாங்கள் சொல்லவில்லை. ஆனாலும், சாமி கும்பிடாத - கடவுள் நம்பிக்கை என்பது எள்முனை அளவுகூட இல்லாத நாத்திகர்கள் ஆகிய நாங்கள் எங்களது மனிதநேயம் அடிப்படையில் கேட்டுக் கொள்வது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். ""சாமி கும்பிடுங்கள், சாமிகளுக்கு சர்வசக்திகளும் இருக்கிறது. அந்த சக்தியின் மூலம் அந்த சாமிகள் உங்களது துன்ப துயரங்களையெல்லாம் துடைத்து விடுவார்கள். நீங்கள் விரும்பியதை எல்லாம் வேண்டியதையெல்லாம் அந்த சாமிகள் செய்து அருளுவார்கள் என்றால், தயவு செய்து இனிமேல் வெளியூர் சாமிகளைத் தேடி வேனிலும், காரிலும், ஜீப்பிலும், லாரிகளிலும், ஏறி சாலை விபத்தில் சிக்கி உங்களது இன்னுயிர்களை பலி கொடுத்து அதன் மூலம் உங்கள் குடும்பங்களை நிர்க்கதியாய் நடுவீதிகளில் ஆதரித்து உதவுபவர் கள் இல்லாத வகையில் தேம்பி அழ வைத்து விடாதீர்கள்.
‘உள்ளூர் சாமிகளையே கும்பிடுங்கள்’ என்பதே அந்த மனித நேயத்தின் பாற்பட்ட அன்பு வேண்டுகோள்"" ஆகும்!
நன்றி;முரசொலி 17-01-2011
No comments:
Post a Comment